தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 april 2013

தமிழீழ விடிவுக்கான கருத்துக்களும், எச்சரிக்கைகளும்!


இந்த வாரத்தில் ஈழத் தமிழர்களது தலைவிதியுடன் தொடர்புபட்ட நான்கு முக்கிய நிகழ்வுகளும் இரண்டு எச்சரிக்கைகளும் கவனத்தை ஈர்த்துள்ளன. ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட இந்தச் சம்பவங்களை ஈழத் தமிழர்கள் யாரும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. 
முதலில் ஒரு எச்சரிக்கைச் செய்தி ஒன்று சிறிலங்கா எதிர்பாராத திசையிலிருந்து கிளம்பியது. முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சரும், இந்தியாவின் தேசியக் கட்சி ஒன்றின் முக்கிய தலைவருமான யஸ்வந்த் சின்ஹாவின் இந்த எச்சரிக்கை சிங்கள ஆட்சியாளர்களை மட்டுமல்லாது, இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சியையும் நிலை குலைய வைத்துவிட்டது.
இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ந்தும் அடக்குமுறையை கையாண்டால் தனி ஈழம் அமைவது வெகுதூரத்தில் இல்லை என்பதை ராஜபக்சவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன், என்று சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்திருந்தார்.
இதுவரை காலமும், தமிழீழ மக்களது அரசியல் அபிலாசைகளை இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்க கண்களினால் நோக்கிய இந்திய தேசியக் கட்சிகளில் ஒன்றான பா.ஜ.க.வின் தமிழீழ மக்கள் குறித்த புதிய நிலைப்பாடு ஒரு பெரும் மாற்றத்திற்கான அறிகுறியாகவே கருதப்படுகின்றது.
இதற்கு அடுத்ததாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மைக்கல் சிசன் ஒரு எச்சரிக்கையை சிங்கள ஆட்சியாளாகளை நோக்கி விடுத்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாவிட்டால் மீளவும் முரண்பாடுகள் ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்ள கருத்தும் யதார்த்தத்தின் வெளிப்பாடே.  மாறாத சிங்கள இனவாதம் தமிழிழத்தைப் பிரசவிப்பதற்கான தருணத்தை உருவாக்கி வருகின்றதென்பதை அமெரிக்கா நன்றாகவே உணர்ந்துள்ளதன் வெளிப்பாடே இது.
இந்த நிலையில், இந்திய நாடாளுமன்றத்தின் குழு ஒன்று இலங்கை சென்றுள்ளது. இந்திய தொழில் - வர்த்தகக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இவர்கள் இலங்கை சென்றிருந்தாலும், இந்தப் பயணத்தின் அரசியல் முக்கியத்துவத்தையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
தமிழக மாணவர்களது போர்க் கோலம் இந்திய மத்திய ஆளும் வர்க்கத்திற்கு அச்சத்தையும், அதனைச் சரியாகக் கொள்வதன் மூலமாக மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்தியாவின் அடுத்த ஆட்சிக்கான தருணத்தைத் தமதாக்கிக் கொள்ளலாம் என்று முதன்மை எதிர்க்கட்சியான பா.ஜ.க.வுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியுளள தருணத்தில் இந்தப் பயணமும் அரசியல் முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கையின் அரசியல் களத்தைச் சூடேற்றி வரும் நிலையில், சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்தியாவை நோக்கி ஒரு ஏவுகணைக்கு ஒப்பான தாக்குதலை நடாத்தியுள்ளார்.
அதாவது, 'சிங்களத்திற்கான உண்மை' ஒன்றைத் தெரிவித்து இந்திய ஆட்சியாளர்களை அடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். சிங்கள ஊடகம் ஒன்றிற்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வழங்கிய நேர்காணல் ஒன்றில், 'தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியா தான் காரணம்' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் போரையே நாங்கள் நடாத்தி முடித்தோம்' என்ற இவரது முன்னைய உண்மையை மறுதலிக்க முடியாமல் திணறிய காங்கிரஸ் ஆட்சியாளர்கள், கோத்தபாயவின் இந்தக் குற்றச்சாட்டையும் காதில் கேட்காத மன்மோகன்களாக இப்போதும் இருந்து கொள்வதைத் தவிர வேறு தெரிவு எதுவும் அவர்களுக்குக் கிடையாது. ஏனென்றால், அடுத்த பூதம் ஒன்று சிங்களத்திலிருந்து வெளிக் கிளம்புவதை அவர்கள் விரும்பப் போவதில்லை.
கோத்தபாயவின் இந்தக் குற்றச்சாட்டு சலசலப்பை ஏற்படுத்திய காலத்தில், இன்னொரு 'காமெடி'யும் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் படுகொலைகள் குறித்து, இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளின் படி, இராணுவம் நியமித்த இராணுவ நீதிமன்றம், இக்குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, இராணுவத்துக்கு இந்தக் கொலைகளில் எந்தப் பொறுப்பும் இல்லை என்று கூறும் ஒரு அறிக்கையை பாதுகாப்புச் செயலரிடம் சமர்ப்பித்திருக்கிறது.
அந்த அறிக்கையில், 'விடுதலைப்புலிகள்தான் பொதுமக்கள் சுமார் 3 லட்சம் பேரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள். அது மட்டுமல்ல சிவிலியன் மக்கள் கூட்ட்த்தின் மத்தியிலிருந்து குண்டுத்தாக்குதல்களை அவர்கள் தான் நடத்தினார்கள். இந்தக் குற்றத்துக்கு முழுப்பொறுப்பும் அவர்கள்தாம் ஏற்கவேண்டும்.
இதை அவர்கள் செய்யாமல் இருந்தால், போரில் ஏற்பட்ட எதேச்சையான பொதுமக்கள் உயிர்ச்சேதம் நடந்திருக்காது. துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட இந்த எதேச்சையான பொதுமக்கள் உயிர்ச்சேதத்துக்கு விடுதலைப்புலிகள்தான் பொறுப்பு.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இலங்கைத் தீவில் மிகக் கொடூரமான அனைத்துலக விதிமுறைகளை மீறிய யுத்த நடவடிக்கைகள் மூலம் தமிழின அழிப்பை மேற்கொண்ட சிங்கள இராணுவமே தன்னை விசாரித்து, தனக்கான நற்சான்றிதழைத் தயாரித்து, அதன் முதன்மைக் கொடூரன் ஒருவனிடம் கையளித்துள்ளது.
தமிழ் மக்களது வரலாறு 'விடுதலைப் புலிகளுக்குப் பின்' என்ற வெற்றிடத்தை எப்போதும் கொண்டிருக்கப் போவதில்லை. அதனையே, தமிழகத்தின் பேரெழுச்சியும் உலகத்திற்குப் புரிய வைத்துள்ளது.
சிங்களம் எதிர்த்தாலும், இந்தியம் தடுத்தாலும் தமிழீழம் விடுதலை பெறுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மலரும் தமிழீழத்தின் சுதந்திர மண்ணில் உருவாகும் தமிழீழ நாடாளுமன்றம், தனக்கான சுதந்திர சாசனத்தை வரையும்.
அதுவரை, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தைத் தொடர்வது மட்டுமே புலம்பெயர் தமிழர்களது கடமையாக இருக்க வேண்டும்.
- இசைப்பிரியா
eelanadu@hotmail.com

Geen opmerkingen:

Een reactie posten