[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 05:36.09 AM GMT ]
ஊர்காவற்றுறை பிரதேச சபையை சேர்ந்த ஈ.பி.டி.பியினர் மற்றும் சமுர்த்தி உத்தியோத்தர்கள் மகிந்தவின் கூட்டத்திற்கு வராவிட்டால் சமுர்த்தி கொடுப்பனவு 2500 ரூபாவை தரமாட்டோம் என ஏழை மக்களை அச்சுறுத்தி பேருந்துகளில் இன்று ஏற்றி வருகின்றனர்.
நாரந்தனை, தம்பாட்டி, புளியங்கூடல், சுருவில் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கே இந்த அச்சுறுத்தலை ஈ.பி.டி.யினர் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
இதே வேளை வடமராட்சி கிழக்கு, உடுத்துறை, தாளையடி சமுர்த்தி உத்தியோகத்தர் சுதர்சன் என்பவரும் ஈ.பி.டி.யினருடன் இணைந்து இத்தகைய மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் தற்பொழுது ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
5000 ரூபா கொடுப்பனவு என்ற பிரசாரத்தால் யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் குவியும் மக்கள்!
இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டத்திற்கு 450 இ.போ.ச பேரூந்துக்கள் மூலம் மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு பேரூந்துகளில் பெயர் பலகைகளுக்கு பதிலாக கிராம சேவகர் பிரிவுகளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோடு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் சமுர்த்தி அங்கத்தவர்களுக்கு ரூபா 5000 கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கூறி மக்களை அழைத்து வருவதாக தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbms7.html
ஒரே நாடு என்று தமிழர் சொன்னால், இல்லை நீங்கள் வேறு நாட்டவர் என்று மகிந்த அரசு சொல்கிறது!- மனோ கணேசன்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 05:37.55 AM GMT ]
ஜனவரி 8ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல், நம் நாட்டு ஜனாதிபதி தேர்தல், நாம் இந்த நாட்டு குடிமக்கள், நாம் இந்த நாட்டு தேர்தல் ஆணையாளரின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வாக்காளர்கள், தேர்தலில் பங்குபற்றி, வாக்களித்து நமது தேசிய கடமையை நாம் செய்வோம் என வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் முன்வந்தால் அதை இந்த மகிந்த அரசு கொச்சைப்படுத்துகிறது.
அதாவது, நாம் இந்நாட்டவர், இது ஒரே நாடு என்று தமிழர் சொன்னால், இல்லை நீங்கள் வேறு நாட்டவர் என்று மகிந்த அரசு சொல்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் ஆணையை பெற்ற ஒரு கட்சி. நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் அந்தக் கட்சி தனது நிலைப்பாட்டை இரண்டு தினங்களுக்கு முன் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பு, ஆளும் அரசுக்கு எதிரான, பொது எதிரணிக்கு ஆதரவான அறிவிப்பு என்றவுடன் இந்த அரசுக்கு கோபம், ஆற்றாமை, ஆத்திரம் வந்துவிட்டது.
ஒருவேளை கூட்டமைப்பின் ஆதரவு அரசுக்கு கிடைத்து இருந்தால், இந்த கோபம் மறைந்து கூட்டமைப்பின் மீது காதல் பிறந்திருக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் ஐதேக தலைமைக்குழு தவிசாளர் கரு ஜயசூரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோருடன் கலந்துகொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இந்த அரசு ஒரு சின்னத்தனமான கொள்கையை பின்பற்றுகிறது. நாடு என்பது வேறு, அரசாங்கம் என்பது வேறு என்பதை இந்த அரசு மறந்து விட்டது. நாட்டை நேசிப்போர் தாங்கள் என்று அடிக்கொரு தரம் கூறுபவர்கள், இன்று நாட்டை விட தங்கள் கட்சி அரசியல்தான் முக்கியம் என்று நிரூபித்து விட்டார்கள்.
இந்த தேர்தல், சிங்கள நாட்டு தேர்தல், இதில் பங்கு பற்றி வாக்களிக்கும் அவசியம் எமக்கு கிடையாது என்று ஒருகாலத்தில் செயற்பட்டு வந்த வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களும், அவர்களது தலைமைகளும், இன்று இந்த தேர்தலில் பங்கு பற்றுவதன் மூலம் தாம் இந்த நாட்டு குடிமக்கள் என்ற அடிப்படையை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
இது ஒரு வரவேற்க கூடிய மாற்றம். இந்த நாட்டை நேசிக்கும் எவரும் இந்த மாற்றத்தை வரவேற்க வேண்டும். ஆனால், இந்த மகிந்த அரசு இதை புரிந்து கொள்ள மறுக்கின்றது.
மகிந்த தனது அமைச்சரவை சகாக்கள் மூலம், கூட்டமைப்பின் அறிவிப்பை திரித்துக் கூறி துர்ப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார். கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு தருகிறது என்பதைவிட, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் பங்குபற்றுகிறார்கள் என்பது முக்கியமானதாகும்.
ஒரே நாடு என்று தமிழர் சொன்னால், இல்லை நீங்கள் வேறு நாட்டவர் என்று மகிந்த அரசு சொல்கிறது. தேர்தலில் பங்கு பற்றி வாக்களிக்கும் தமிழ் மக்களுக்கு தங்கள் விரும்பிய கட்சிக்கு, சின்னத்துக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. இதை எவரும் தட்டிப்பறிக்க முடியாது.
அதேபோல் அந்த மக்களின் ஆணையை பெற்ற ஒரு கட்சிக்கு தமது மக்கள் தொடர்பில் வழிகாட்டல் செய்ய பூரண உரிமை உண்டு. இதையும் எவரும் தட்டி பறிக்க முடியாது. இந்த அடிப்படையை இந்த அரசு புரிந்து கொள்ள மறுக்கிறது.
தங்களது சொந்த கட்சி அரசியல் தேவைகளுக்காக, ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற பதவி ஆசை காரணமாக மகிந்த அரசு படு பாதக இனவாத பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது.
கடந்த காலங்களிலும் இத்தகைய முறையில் தங்கள் கட்சி அரசியல், பதவி ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பெரும்பான்மை கட்சிகள் இனவாத பிரச்சாரம் செய்தார்கள். பின்னாளில் அவற்றுக்கான விலையை அவர்கள் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டது.
இதற்கான விலையை இந்த அரசும் விரைவில் கொடுக்க வேண்டி வரும்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmty.html
Geen opmerkingen:
Een reactie posten