தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 januari 2015

பலவீனமான நிர்வாகத்தின் சாட்சியமே கிணறுகளில் கலந்த கழிவு ஒயில்

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி இணக்கம்
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 06:20.37 AM GMT ]
சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை ஒரு வருடத்திற்குள் விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசப் ஆண்டகை விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பொன்றில் ஜனாதிபதி இதனை கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முழுவதிலும் உள்ள தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளில் சுமார் 500 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் மன்னார் ஆயர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgt3.html
அதிருப்தியில் அமைச்சர் பைசர் முஸ்தபா: அமைச்சுப் பதவியில் இருந்து விலக முடிவு?
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 06:59.57 AM GMT ]
அமைச்சர் பைசர் முஸ்தபா தனது அமைச்சுப் பொறுப்பு தொடர்பாக கடும் அதிருப்தியுடன் இருக்கும் நிலையில், பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
முன்னாள் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, தற்போதைய மைத்திரி அரசில் சிவில் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது அமைச்சுக்கு கீழ் வரும் நிறுவனங்களின் பட்டியல் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.
அதன் பிரகாரம் ஸ்ரீலங்கன் விமானசேவை, மிஹின் லங்கா விமான சேவை, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அதிகார சபை, விமானத்துறை ஆராய்ச்சி நிறுவனம் என்பன உள்ளடங்கியிருந்தன.
இந்நிலையில் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் இன்னொரு நிறுவனத்தை தற்போது அமைச்சர் பைசர் முஸ்தபாவின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த விடயம் காரணமாக கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ள அமைச்சர் பைசர் முஸ்தபா, நேற்று நண்பகல் தனது அமைச்சு அலுவலகத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
அத்துடன் தனது தனிப்பட்ட அலுவலர்களையும் அங்கிருந்து திருப்பி அழைத்துக் கொண்டுள்ளார். அமைச்சர் மற்றும் உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலகம் மற்றும் வாகனங்கள் என்பனவும் தற்போது திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று மாலைக்குள் தனக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் அமைச்சுப் பதவியில் இருந்து ராஜினாமாச் செய்யும் முடிவில் அமைச்சர் பைசர் முஸ்தபா உறுதியாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பலவீனமான நிர்வாகத்தின் சாட்சியமே கிணறுகளில் கலந்த கழிவு ஒயில்
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 07:07.11 AM GMT ]
உலகம் முழுவதும் குடிநீரைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையில், எங்கள் மண்ணில் இருந்த அருமையான நன்னீரை பாழாக்கி விட்ட படுபாதகத்தை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் விடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள குடிநீர்க்கிணறுகளில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் தண்ணீர்ப் பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.
சுன்னாகம் மின்சார நிலையத்தில் சேகரிக்கப்பட்ட கழிவு ஒயில் நிலத்தடி நீருடன் கலந்ததால் ஏற்பட்ட மிகப்பெரிய விபரீதமே இதுவாகும்.
கழிவு ஒயில் நிலத்தடி நீருடன் கலந்து கொண்டதால் சுன்னாகம் பகுதியில் உள்ள கிணறுகளில் எண்ணெய்க் கசிவு ஏற்பட, அந்தக் குடிநீரை எந்தத் தேவைக்கும் பயன்படுத்த முடியாது என்ற மோசமான நிலைமை உருவாகிற்று.
எண்ணெய்க் கசிவுள்ள தண்ணீரைப் பயன்படுத்தினால் ஏற்படக்கூடிய விபரீதங்கள் என்ன என்பதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் வெளிப்படுத்தியுள்ளது.
மருத்துவபீடத்தின் தகவலின் பிரகாரம் பாரதூரமான பிரச்சினையை சுன்னாகம் சார்ந்த பிரதேச மக்கள் எதிர்கொண்டுள்ளனர் என்பது நிரூபணமாகின்றது.
எனினும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களை எந்த வகையிலும் திருப்திப்படுத்துவதாகவோ இல்லை.
எனவே குறித்த பிரச்சினை ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்? என்பதைக் கண்டறியும் அதேநேரம், எண்ணெய்க்கசிவு ஏற்பட்டுள்ள கிணற்று நீரை மீளவும் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கும், எண்ணெய்க்கசிவினால் சுன்னாகத்தை அண்மித்த பிரதேசங்களில் உள்ள கிணற்று நீர் மாசடையாமல் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
குடிநீரில் எண்ணெய்க்கசிவு என்றவுடன் வடக்கு மாகாண அரசு களத்தில் இறங்கி அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதிரடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
எனினும் சுன்னாகப் பிரதேசத்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, உண்ணாவிரதம் இருந்து பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று கேட்கும் அளவிலேயே நிலைமையுள்ளது.
இத்தகைய அலட்சியப் போக்குகள் தமிழர்களின் எதிர்காலத்தை மிக மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் - கொண்டு செல்கிறது.
சுன்னாகம் மின்சார நிலையத்தில் கழிவு ஒயிலை நிலத்திற்குக் கீழ் சேகரிக்கும் போது அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் என்ன? என்பதை சுற்றுச்சூழல் பிரிவினர் கவனித்தனரா? அல்லது சுன்னாகம் மின்சாரசபையில் இருக்கக்கூடிய துறைசார் அதிகாரிகள் கழிவு ஒயில் சேகரிப்பின் பாதிப்புக்கள் குறித்து எச்சரிக்கை செய்தனரா? என்ற கேள்விகள் எழும்.
நிகழ்காலப் பிரச்சினை தீர்ந்தால் போதும் அதன் எதிர்கால விளைவு என்ன? என்பது குறித்து அக்கறைப் படத் தேவையில்லை.
யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலை எம்மிடம் இருக்கும் வரை சுன்னாகத்து குடிநீர் மட்டுமன்றி பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் தமிழ் இனம் எதிர்நோக்க வேண்டி வரும் என்பது திண்ணம்.
ஆகவே, வடக்கு மாகாண அரசு தமிழ் மண்ணில் நடக்கும் அத்தனை விடயங்களிலும் பொது நிர்வாகங்களிலும் கவனஞ்செலுத்த வேண்டும். இல்லாவிடில் எல்லாமே இப்படித்தான் என்றாகிவிடும்.
எனவே, பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாத்தல் ஏற்பட்ட பிரச்சினையை சடுதியாகத் தீர்த்தல் என்ற பணியை வடக்கு மாகாண அரசு தாமதமின்றி முன் னெடுப்பது அவசியம்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgt6.html

Geen opmerkingen:

Een reactie posten