நெடுந்தீவு மக்களை அச்சுறுத்தி வரும் ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்தவரும் நெடுந்தீவில் சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதியுமான அப்பன் என்பவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கமாறு நெடுந்தீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுந்தீவிற்கு நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விஜயம் மேற்கொண்டதை அடுத்து இரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் நேற்றைய தினம் ஒழுங்குகளை மேற்கொண்டவர்களை அச்சுறுத்தினார் என நெடுந்தீவு மக்களால் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்னத்திற்கு மக்கள் இன்றைய தினம் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதேவேளை நெடுந்தீவுக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு குறித்த சாரதி அச்சுறுத்தல் விடுத்திருந்தார். நெடுந்தீவு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை நேரில் கேட்டறியும் நோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்று செவ்வாய்க்கிழமை நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு இருந்தனர். இக் குழு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றை நடாத்தினர் அதன் போது வட மாகாண சபை உறுப்பினர் விந்தன், நெடுந்தீவில் சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி அப்பன் என்பவர் இங்குள்ள மக்களை துன்புறுத்துவதாகவும் மக்களுடன் அநாகரிகமாக செயல்படுவதாகவும் மக்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும் அது தொடர்பில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதனை அடுத்து கூட்டமைப்பினர் நெடுந்தீவை விட்டு புறப்படுவதற்கு தயாராக இறங்கு துறையில் இருந்த போது அங்கு சென்ற சாரதி விந்தனை முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வடமாகாண அமைச்சர்கள் உறுப்பினர்கள் முன்னிலையில் கடுமையாக அச்சுறுத்தியதுடன் தகாத வார்த்தைகளாலும் பேசினார். அத்துடன் பொலிசார் மற்றும் கடற்படையினர் முன்னிலையில் அங்கு நின்ற ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்து தகாத வார்த்தைகளால் பேசி விட்டு அங்கிருந்து சென்றார். பொலிசார் முன்னிலையில் தம்மை அச்சுறுத்தி சென்றவர் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் கூட்டமைப்பினர் விசனம் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten