கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆணித்தரமாக இருக்கின்றது என மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
கடந்த வருட மாகாண சபை பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்விலேயே அவர் இக்கருத்தினை தெரிவித்தார்.
இன்று மாகாணசபை உறுப்பினரின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வவுணதீவு மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எமது இனம் பல படுகொலைகள் பல இனஅழிப்புகள் என பலவாறான துன்ப துயரங்களுக்கு மத்தியில் நாம் வாழ்கின்றோம்.
கடந்த 08ம் திகதி முன்பிருந்த அரசாங்கத்தின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக வாக்களித்து ஒரு மாபெரும் மாற்றத்தினை ஏற்படுத்தி இன்று ஒரு புதிய பரிணாமத்தினை ஏற்படுத்திய பெருமை எமது தமிழ் மக்களையே சாரும்.
கடந்த காலங்களில் நாம் சுவாசிப்பதற்கு கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எமது நிகழ்வுகள் கூட பல சிக்கல்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் மத்தியிலேயே இடம்பெற்றதுடன் பல நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன.
இன்று எமது மக்களினால் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. உலக வரலாற்றில் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா அம்மணி அவர்கள் இருப்பது போன்று ஜனாதிபதியாக இருந்து ஜனாதிபதித் தேர்தலில் தோல்விகண்ட முதல் ஜனாதிபதியாக முன்னால் ஜனாதிபதி மஹிந்த அவர்களே திகழ்வார்.
எமது மக்களின் பலத்தினால் தான் இந்த அராஜக ஆட்சி மாற்றத்திற்கு வந்தது. அது போலவே உமது உறவுகளின் பலத்தின் மூலம் தான் தொடர்ந்தும் நாம் எமது தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எங்களுடைய போராட்ட வடிவத்தின் ஒரு அம்சமாக கிடைக்கப்பெற்றதே இந்த மாகாணசபை. அதில் வடக்கினையும் கிழக்கினையும் பிரித்து மாகாண சபைகள் இடம்பெறுகின்றன.
ஆனால் இந்த மாகாணசபைகளுக்கு இருக்கின்ற அதிகாரங்களை குறைப்பதற்கு முன்னாள் அரசு முயற்சித்த போது இங்கிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசுடன் ஒட்டியிருந்த தமிழ் அரசியல்வாதிகளும் அதற்கு ஆதரவளித்து இதன் பலத்தினைக் குறைத்தார்கள். அப்படியெல்லாம் செய்தவர்கள் இன்று மாகாணசபை ஆட்சியை மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
எமது மக்களின் உயிர்த் தியாகத்தால் கிடைக்கப்பெற்ற மாகாண சபையை தற்போது ஜனநாயக அடிப்படையில் நாம் ஆள வேண்டிய இந்த மாகாண சபையை தாங்கள் ஆளவேண்டும் என்று கேட்பது எந்தவகையில் நியாயம்.
நாம் இன்று ஆணித்தரமாக இருக்கின்றோம். எமது மக்களின் பலத்தினால் கிடைக்கப் பெற்ற மாற்றத்தினால் பெறப்பட்ட எமது கிழக்கு மாகாணசபை ஆட்சி மாற்றத்தின் தலைமையை எக்காரணம் கொண்டும் நாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. இந்த முடிவில் எமது தலைமைகளும் உறுதியுடனேயே இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது என்பது எமது கோரிக்கையல்ல –துரைராஜசிங்கம்
கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விட குறைந்தளவில் வாக்குகளைப்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியைக் கேட்பது எந்த விதத்திலும் ஜனநாயகம் இல்லை என்பதுதான் எம்முடைய கோரிக்கையே தவிர, முஸ்லீம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கப்படக் கூடாது என்பது எமது கோரிக்கையல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பில் உள்ள மாகாணசபை உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நின்று கொண்டிருக்கின்றார்கள். 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சுதந்திர நாட்டில் சுதந்திரத்தினைத் தேடி அலைகின்ற மக்கள் என்றால் அது ஈழத்தமிழர்களே தவிர வேறு யாரும் இந்த உலகத்தில் இருக்க முடியாது.
நாங்களும் எமது அரசியல் தலைவர்களும் மிகவும் கன்னியமான அரசியலை நடாத்திக் கொண்டு வருபவர்கள். தற்போது கிழக்கு மாகாண சபையைப் பொறுத்த மட்டில் எவரை எடுத்துக் கொண்டாலும் சிங்களவர் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது முஸ்லீம் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது என மாறிமாறி பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறு பேசவில்லை அவ்வாறு சிந்திக்கவில்லை அவ்வாறு கருத்து வெளியிடவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியில் ஜனநாயக வீழுமியங்கள் பேணப்பட்ட வகையில் கிழக்கு மாகாண சபையில் அரசு அமைக்கப்பட வேண்டும் என்றே சொல்லுகின்றது.
2012ம் ஆண்டு நாம் 11 உறுப்பினர்கள் இருந்தோம். அப்போது பெரும்பான்மை அங்கத்தவர் என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தான் ஆட்சி அமைக்க வேண்டும். இருப்பினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸை அழைத்து ஆட்சி அமைப்பதற்கான தன்னுடைய கருத்தை வெளியிட்டது. இதுவும் ஜனநாயக விழுமியங்களில் ஒன்றாகவே இருந்தது.
ஏனெனில் முஸ்லீம் காங்கிரஸும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அப்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு எதிராக போட்டியிட்டவர்கள்.
எனவே இந்த மூன்று கட்சிகளும் பெற்றுக் கொண்ட உறுப்பினர்கள். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு எதிராக பெற்ற வாக்குகளால் வந்தவர்கள்.
அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரஸும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டியது ஜனநாயக முறை.
அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரஸும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டியது ஜனநாயக முறை.
இந்த முறையில் தான் நாம் கிழக்கு மாகாணத்தில் சிறுபாண்மை மக்களுக்கான அரசை அமைக்கவேண்டும் என்று கூறினோமே தவிர, ஜனநாயக விழுமியங்களை தள்ளவிட்டு அல்ல.
இதே வகையில் தான் இப்போது 08ம் திகதி நடைபெற்ற தேர்தலின் பின் கிழக்கு மாகாண சபையிலும் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னர் இங்கு ஆட்சி அமைக்க வேண்டியவர்கள் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி.
அது தமிழரா, சிங்களவரா, முஸ்லீமா என்று எமது கட்சி பார்க்கவில்லை. பெரும்பான்மையினரைக் கொண்ட கட்சி அது யாராக இருந்தாலும் சரி அரசு அமைக்க வேண்டும்.
இங்கு பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருப்பவர்கள் நாஙகள் 11 உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றோம்.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 07 உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றார்கள். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் சிதறிச் சின்னாபின்னமாகி இருக்கின்றார்கள் அதில் தற்போது பெரும்பான்மை இல்லை.
அந்த அடிப்படையில் தான் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவிக்கு உரித்துடையது என்று சொல்லுகின்றோமே தவிர, தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை.
அவ்வாறு சொல்லுவது துவேசமாக அமையும். நாங்கள் அவ்வாறு சொல்லவில்லை. பெரும்பான்மையா இருக்கும் எங்களுக்கு தரப்பட வேண்டும் என்றுதான் சொல்லுகின்றோம்.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் ஹசன் அலி அவர்கள் கூறுகின்றார் வடக்கில் தமிழர் முதலமைச்சராக இருப்பதால் கிழக்கில் முதலமைச்சராக முஸ்லீம் ஒருவர் வரவேண்டும் என்று இது நியாயமான கருத்தல்ல.
இந்த நியாயத்தின் அடிப்படையில் நாங்கள் தமிழர் வரவேண்டும் என்று கேட்கவில்லை. நாங்கள் கேட்பது கட்சி அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் இங்கு முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு ஜனநாயக உரிமை உடையது என்பதே.
2012ம் ஆண்டுதேர்தல் நடைபெறுகின்ற போது பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை விட 6000 வாக்குகள்தான் குறைவாக நாங்கள் பெற்றோம்.
எங்களுக்கும் முஸ்லீம் காங்கிரஸிற்கும் இடையிலான வாக்குவித்தியாசம் 61000 ஆகும். 61000 வாக்கு வித்தியாசத்தில் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியைக் கேட்பது எந்த விதத்திலும் ஜனநாயகம் இல்லை என்பதுதான் எம்முடைய கோரிக்கையே தவிர, முஸ்லீம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கப்படக் கூடாது என்பது எமது கோரிக்கையல்ல.
எனவே நாம் தமிழர்கள் கண்ணியமான அரசியல் செய்பவர்கள் அரசியல் விழுமியங்களுக்கு ஊடாகச் செல்பவர்கள் இதனை நாம் இந்தவிதமாக விளங்கிக் கொள்ளவேண்டும்.
இந்தவிதமாக மற்றவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். முஸ்லீம் ஒருவர் முதலமைச்சராக வருவதனை தமிழர்கள் எதிர்க்கின்றார்கள் என்ற செய்தி உண்மையான செய்தியல்ல.
தமிழர்கள் அதனைப் பெருவதற்கான ஜனநாயக விழுமியத்துடன் இருக்கின்றார்கள் முஸ்லீம் காங்கிரஸ் அதற்கான அருகதையற்றதாக இருக்கின்றது என்பதாலேயே நாம் எமது கருத்தில் ஆணித்தரமாக நின்று கொண்டிருக்கின்றோம்.
இந்த உண்மைகளின் அடிப்படையில்தான் நாம் கிழக்கு மாகாணத்தினுடைய கோரிக்கைகளை கேட்கின்றோமே தவிர, இதற்கு முஸ்லீம்கள் உரித்தாளிகள் அல்ல என்ற ரீதியில் நாம் கேட்கவில்லை. இந்த விடயத்தினை நாம் மிக அழுத்தம் திருத்தமாக எமது முஸ்லீம் சகோதரர்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfv5.html
Geen opmerkingen:
Een reactie posten