நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் சிறுபான்மைக்கு ஓர் பெரும் சோதனை தேர்தலாகவே கணிக்கப்பட்டது. ஆம் இந்த தேர்தலில் சிறுபான்மையின மக்கள் என்ன நடந்தாலும் நடக்கட்டுமே என்ற தோரணையில் தமிழ் அரசியல்வாதிகளை புறந்தள்ளியதோடு தனி முடிவாக இதயத்தின் அடி மனதில் தோன்றியதை வெளிகாட்டினர்.
இதை அரசியல் தலைமைகள் யாரும் உரிமை கோர முடியாது. ஒவ்வொரு அரசியல் தலைமைகளும் அன்று ஆண்ட ராஜபக்ஷவிடம் எந்தவொரு வழியிலாவது பயனை அடைந்தவர்களே.
இதை அவர்கள் மறுத்துக் கூறினால் இந்த கட்டுரையை எழுதியவன் என்ற முறையில் நான் அவர்களை பொதுவான இடத்தில் சந்திக்க தயாராகவும் அவர்கள் நன்மை பெற்ற விதத்தினை கூறவும் தயக்கம் இன்றி தெரிவிக்கின்றேன்.(ஒரு சிலரை தவிர)
இதிலும் சில உண்மையானவர்கள் இருந்தார்கள். இந்த சிறுபான்மை அரசியலில் அவர்களை மதிக்கின்ற காரணத்தினாலேயே நான் இந்த சவாலை கூறுகின்றேன்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற 8ஆம் திகதி வரை தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்தால் அதன் பலாபலன்களை 9ஆம் திகதி அனுபவிக்க போன்றார்கள் என்று நான் ஒக்டோபர் மாதம் தெளிவாக குறிப்பிட்டேன்.
எம்மை பொறுத்தவரை நாம் இழந்தவற்றை மீண்டும் பெறப்போவதில்லை என்பது எமக்கு தெரியும். இனி இழக்கப் போவது இழந்ததைவிட பெரியதொன்றும் இல்லை என்பதே இங்கு முக்கியம்.
நடந்தது சரித்திரம் அதை படித்தால் மாத்திரமே நடக்கின்ற விடயங்களை புரிந்து கொள்ள முடியும். இது யதார்த்தம். ஆனால் நடக்கப்போவது யாருக்கும் தெரியாது இருந்தும் தமிழ் மக்களின் முடிவு பிழையாகி இருந்தால் இந்த கட்டுரையை எழுதுவதற்கு எனக்கும் முடிந்திருக்க முடியாது.
இது ஓர் தற்காலிக நிம்மதியே. நிரந்தரமாக வரும் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட ஏழை தமிழ் மக்களின் இதய அடிபகுதியின் எண்ணமாகும். அதை சாதனையாக்கியது மண்ணோடு மண்ணாக புதையுண்ட ஆத்மாக்கள் என்பது யதார்த்தம்.
இருந்தும் 100 நாள் திட்டம், மறு பரிசீலனை, நிம்மதியான வாழ்க்கை என்றெல்லாம் பகல் கனவே இன்றுவரை தமிழ் இனம் கண்டுக்கொண்டிருக்கின்றது என நாம் நினைக்கின்றோம்.
தமிழ் மக்களுக்கு என்னவெல்லாம் செய்வோம் என கூறும் இன்றைய புதிய அரசு சட்டம் என்று கூறி சிங்களத்திற்கு சகலவற்றையும் அள்ளி கொடுக்கின்றது.
இதுவும் இராஜதந்திரமாக நாம் நினைக்கலாம். ஆனால் ஜனவரி 27ஆம் திகதி வரை தமிழ் பொது மக்களுக்கு என்ன செய்திருக்கின்றது என்பது ஓர் கேள்விகுறியாக நான் கருதுகின்றேன்.
உண்மையாக இன்று சர்வ அதிகாரம் படைத்த ஜனாதிபதியாக இருப்பது மைத்திரிபால சிறிசேன. அவருக்கு உதவிய பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்கள் ஆகும்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு முன் பாராளுமன்றம், அமைச்சர்களில் மாற்றம் நடைபெறும் என்று அதற்கான வாக்களிப்புதான் என்றோ பொது மக்கள் நினைக்கவும் இல்லை.
ஆனால் ஜனாதிபதியின் மாற்றம் சகலவற்றையும் மாற்றியது. இதில் தமிழனாக வாக்களித்த அத்தனை நெஞ்சங்களுக்கும் சகல உரிமைகள், சலுகைகள் பங்கும் உண்டு.
அதே வேளை பெரும்பான்மை சிங்கள மக்களின் அரசியல் தலைமைகளின் பிரச்சினைகளும் இயன்றவரை தீர்க்கப்பட்டும் தீர்க்கப்படுகின்றதையும் நாம் பார்க்கின்றோம்.
தமிழ் அமைச்சர்களாக வடக்கில் இரண்டும் மலையகத்தில் மூன்றும் பெற்று விட்டதால் தமிழ் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக சிங்களம் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றது.
இந்த அமைச்சர்களால் எதையும் என்றும் செய்யக்கூடிய பலம் இவர்களிடம் இல்லை. இவர்கள் தனியாக எந்த தீர்மானத்தையும் எடுத்து செயல் படுத்த முடியாது என்பதை அவர்களின் செவ்வியில் இருந்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
கிடைக்கும் சந்தர்ப்பம் கிடைத்த அதிகாரத்தில் ஏதாவது செய்தாக வேண்டும். ஆனால் அய்யோ பாவம் இந்த அமைச்சர்கள். தங்களின் காரியாலயத்தில் இருந்து வெளியில் செல்ல வேண்டுமானால் அனுமதி பெற்றே செல்லும் அவல நிலை என்பதை எம் போன்றவர்களுக்கு நன்கு தெரியும்.
இந்த பதவிகள் சிறுபான்மை தமிழ் மக்களின் வாக்குகளுக்கு கிடைத்த வெகுமதி எனலாம்.
இந்த பெறுமதியால் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படமாட்டாது. 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற புதிய ஜனாதிபதி மாத்திரம் அல்ல, புதிய பாராளுமன்ற அமைச்சர்களான அத்தனை பதவிகளை பொறுப்பேற்றவர்களும் எமது தமிழ் மக்களின் பிரச்சிகைகளை தீர்க்க வேண்டிய கடமையுள்ளவர்கள்.
இதில் கபினட் அமைச்சர்கள் இரண்டு மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூன்று பேரும் அடங்குகின்றார்கள். இவர்களுக்கு நாம் தெரிவிப்பது, நீங்கள் அமைச்சர்கள் மற்ற இன அமைச்சர்களை முதலில் உங்கள் வச படுத்துங்கள். உங்கள் யாராலும் தனியாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி கிடையாது.
ஏன் என்றால் உங்களுக்கு கிடைத்த அமைச்சுகளில் உங்களால் உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவிகள் கொடுக்க முடியும். ஆனால் அவர்களுக்கான வசதிகளை பெற்றுக் கொள்ள நீங்கள் ஏனையவர்களையே நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளீர்கள் என்பது உண்மை.
இன்று எமது சகோதர முஸ்லீம் அமைச்சர்களுக்கு இருக்கும் உரிமை சலுகை உங்களுக்கு இல்லை. இது தமிழினத்தின் சாபம்.
கறையான் புற்று வைக்க கருநாகம் குடியிருக்கும் நிலையே இந்த தமிழ் மக்களின் பிரச்சினை தீர்வுக்கு பாதகமாக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ் மக்கள் ஒன்றிணைந்து அளித்த வாக்குகளின் பயன் தமிழ் பொது மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக வேண்டும். இதை சிங்களம் நன்கு புரிந்தும் புரியாத புதிராக நாடகமாடும் செயலாக்கப்பட்டு வருகின்றது.
இன்று சட்டத்திற்கு மேலாக நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதியாக இன்னும் இருக்கின்றார் மைத்திரிபால. அவருக்கு சரத்பொன்சேகா அவர்களுக்கு சகல உரிமைகளும் பெற்று கொடுக்க முடியும். லஞ்சம் ஊழல் செய்தவர்களின் கடவுச்சீட்டை ரத்து செய்ய முடியும். மற்றும் ஊழல் செய்த விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் சர்வ அதிகாரத்தை பாவித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க சட்ட பிரச்சினை என்ற நொண்டி காரணத்தை கூறி ஏமாற்ற முடியும் என்றால் நாம் இன்றும் கண்கெட்டு சூரிய நமஸ்காரம் செய்ய அரசியல்வாதிகளை அனுமதிக்கலாமா?
எமது அரசியல் தலைமைகள் ஏமாற்றப்படலாமா? ஏமாறலாமா? இது 100 நாட்களுக்குள் நாமும் நமது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் நம்பி நடவாதே என்பதே எமது கோரிக்கையாகும்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgqz.html
Geen opmerkingen:
Een reactie posten