தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 januari 2015

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு

படகு கவிழ்ந்ததில் கர்ப்பிணிப் பெண் உட்பட இருவர் பலி
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 05:03.26 AM GMT ]
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் இருந்து சீனன்குடா நோக்கி சென்ற படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு பெண்ணும் ஆணுமே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். படகில் 4 ஆண்களும் மூன்று பெண்களும் பயணம் செய்துள்ளனர்.
இவர்களில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.
சம்பவம் குறித்து சீனன்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
கிண்ணியா, காக்காமுனை ஆரூப் பிரதேசத்திலிருந்து கப்பல்துறைக்கு படகில் சென்ற 7 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கச்சான் அறுவடைக்காக இன்று காலை சென்று கொண்டிருந்த போதே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மூன்று மாத கர்ப்பிணியான அஷ்மா (வயது 17) உவைஸ் தனூஷ் (வயது 12) மற்றும் கடாபி முனிஷா (வயது 7) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்களுடன் சென்ற மற்றைய நால்வருக்கும் எவ்விதமான ஆபத்துகளும் ஏற்படவில்லை. சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblp1.html
எதிரணியில் இணைந்து கொண்ட தந்தையின் முடிவை வன்மையாக கண்டிக்கிறேன்: சிந்தக ஏக்கநாயக்க
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 05:13.30 AM GMT ]
என்னுடைய தந்தையான நந்திமித்ர ஏக்க நாயக்க அரசைவிட்டு விலகி எதிரணி வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவு தெரிவிப்பதை கடுமையாக எதிர்ப்பதாகவும் நந்திமித்ர ஏக்கநாயக்கவின் புதல்வரும் மத்திய மாகாண சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினருமான சிந்தக ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடைபெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாக இருக்கும் போது வெற்றி பெறக்கூடிய வேட்பாளரை உதாசீனம் செய்து விட்டு எனது தந்தையான நந்திமித்திர ஏக்கநாயக்க எதிரணி வேட்பாளரை ஆதரிப்பது கேலிக் கூத்தாக இருக்கிறது.
மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் நிரந்தர சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்துவதே எனது நோக்கம்.
நாட்டில் ராஜபக்ஷ தலைமையிலான நீலப்படை அணியின் மாத்தளை மாவட்ட தலைமைத்துவத்தை ஏற்று மாத்தளை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தான் சேவை செய்து வருகிறேன்.
தந்தை கட்சி மாறினார் என்பதால் நான் மஹிந்த ராஜபக்ஷவை விட்டு ஒருபோதும் பிரிந்து போவதில்லை எனவும் மாகாண சபை உறுப்பினர் சிந்தக ஏக்கநாயக்க தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblp2.html
மஹிந்தவின் ஜனநாயகம் குறித்து கவலைப்படும் எதிரணி பொது வேட்பாளர்
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 05:53.10 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனநாயகம் குறித்து தான் மிகவும் கவலையடைவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பெல்மதுளை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நல்லாட்சி பற்றி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பேசி வருகிறது. மக்கள் நீதியானதும் நியாயமானதுமான தேர்தலை எதிர்பார்க்கும் போது இப்படியான வன்முறைகளில் ஈடுபடுவது தொடர்பில் தாம் மிகவும் வேதனைப்படுவதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளரின் பெல்மதுளை கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதல் காரணமாக 6 பேர் காயடைந்துள்ளனர்.
பொது வேட்பாளரின் கூட்டம் நடைபெற்ற மேடைக்கு பின்புறம் இருக்கும் கட்டிடத்தில் இருந்து இந்த கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார். எவ்வாறாயினும் தாக்குதல் காரணமாக ஆத்திரமடைந்த எதிரணி ஆதரவாளர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblp3.html

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 06:01.41 AM GMT ]
தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால் அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதிலிருந்து, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த தடை கடந்த ஆண்டு முடிந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த தடை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. இதற்காக தமிழகத்தின் முக்கியமான இடங்களில் தீர்ப்பாயம் மூலம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் என்பதை மீண்டும் தீர்ப்பாயம் உறுதி செய்து தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசும் புலிகள் இயக்க நடவடிக்கைகளுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் பொதுத் துறை முதன்மைச் செயலர் ஜிதேந்திரநாத் ஸ்வைன் பிறப்பித்துள்ள உத்தரவு:
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீடிப்பது தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதன் ஆதரவு நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்தது. அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் அகண்ட தமிழகம், தமிழர்கள் வாழும் பகுதியில் தனி நாடு, இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கையை நோக்கியுள்ளன. இதுதொடர்பாக கடந்த மே மாதம் 5ஆம் திகதி, விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன் தொடர்பு கொண்ட 6 இலங்கைத் தமிழர்கள் ராமநாதபுரம் மாவட்டம் அரிச்சல்முனை கடற்கரைக்கு கடவுச்சீட்டு இல்லாமல், சட்டத்துக்குப் புறம்பாக வந்திறங்கினர். அவர்கள் மீது தனுஷ்கோடி பொலிஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிவகங்கை மாவட்டம் மானகிரியில் உள்ள வீடு முன்பு தமிழ்நாடு விடுதலைப் படை என்ற புலிகள் ஆதரவு அமைப்பினர் கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி பிரிவினை வாசக நோட்டீஸ்களை எறிந்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி, ப.சிதம்பரத்தின் பண்ணை வீட்டில் பைப் குண்டு வைத்து வெடிக்க வைத்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் காருக்கு அடியில் பைப் குண்டு வைத்தனர். மதுரை உத்தங்குடியில் தமிழ்நாடு விடுதலைப் படையினர் இரும்பு பைப் குண்டு, பெட்ரோல் குண்டு வைத்துவிட்டுச் சென்றதை பொலிசார் கண்டுபிடித்தனர். மேலும் செங்கல்பட்டு, திருச்சி அகதிகள் முகாம்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.
பிரபாகரனின் மகன்கள் சார்லஸ் அன்டனி, பாலச்சந்திரன் பெயர் பொறித்த கல்வெட்டும் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இன்னும் தங்கள் நடவடிக்கைகளை தொடர்வது இதன்மூலம் தெரிகிறது. இதனால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால், அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblp4.html

Geen opmerkingen:

Een reactie posten