வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, இராணுவத்தினரையும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரையும் முகாம்களுக்குள் முடக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
கடந்தவாரம், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் நடத்திய சந்திப்பின் போதே, தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
ஆனால், தேர்தல் ஆணையாளரோ, இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்கி வைக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும், அதனை தீர்மானிக்க வேண்டியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என்றும் பதிலளித்துள்ளார்.
வடக்கில் இராணுவத்தினர் செறிவாக நிலை கொண்டுள்ள போது தேர்தல் நியாய மாக நடத்தப்பட வாய்ப்பில்லை என்ற கருத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் முன்வைக்கவில்லை.
அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் இந்தக் கோரிக்கையை விடுத்திருந் தால், அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கும்.
அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் இந்தக் கோரிக்கையை விடுத்திருந் தால், அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், ஜே.வி.பி.யும் கூட, இராணுவத் தினர் செறிவாக நிலைகொண்டுள்ள நிலையில், அவர்களின் தலையீடுகள் இருக்கும் நிலையில், நியாயமான தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்றே கூறியுள்ளது.
தற்போதைய சூழலில், வடக்கில் நியாயமான தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு.இல்லை என்ற ஐ.தே.க.வின் நிலைப்பாடும், கிட்டத்தட்ட இதுவாகவே உள்ளது.
கடற்படை, விமானப்படை என்பனவற்றுக்குப் புறம்பாக, இலங்கை இராணுவத்தில் உள்ள மொத்தம் 288 பற்றாலியன்களில், 150 வரையிலான பற்றாலியன்கள் வரை வடக்கிலேயே நிறுத்தப்பட்டுள்ள சூழலில், வடக்கில் நியாயமான தேர்தலுக்கு வாய்ப்பில்லை என்ற கருத்தே வலுவாக உள்ளது.
இந்த சந்தேகத்துக்கு பல காரணங்கள் உள்ளன. போர் முடிவுக்கு வந்த பின்னர், கடந்த நான்கு ஆண்டுகளில் வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், எல்லாவற்றிலும் இராணுவத் தலையீடே காணப்பட்டது.
ஜனநாயக வழியிலான போராட்டம் ஒன்று நடத்தப்படும்போது, தாக்குதல் நடத்தப்படுவது, குழப்பம் விளைவிப்பது, அச்சுறுத்துவது போன்ற சம்பவங்கள் சாதாரணமாகவே இடம்பெற்றன.
சீருடை தரித்த படையினர் மட்டுமன்றி, சிவிலுடையில் செயற்படும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும், இயல்பு வாழ்வில் தலையிடுவது, தமது கட்டுப்பாட்டுக்கு அப்பால் செல்ல முற்படும்போது அடக்க முற்படுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அதைவிட, கடந்தகால தேர்தல்களில் இராணுவத்தரப்பு நடுநிலையுடன் செயற்பட்டதும் இல்லை. இந்தத் தேர்தலில் கூட, அரசதரப்பு வேட்பாளர்களைத் தீர்மானிப்பதில் யாழ்.படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க முக்கிய பங்கு வகித்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
அதனை அவர் நிராகரித்துள்ள போதிலும், அது எந்தளவுக்கு உண்மையானது என்ற கேள்வி உள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல்துறை முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டர் அரச தரப்பு வேட்பாளராக களமிறக்கப்படுவதன் பின்னணியில் கூட இராணுவப் புலனாய்வுத்துறையே இருப்பதான கருத்து உள்ளது.
பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஷ கடைசியாக யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, தயா மாஸ்டரை வரணியில் உள்ள 52வது டிவிஷன் தலைமையகத்துக்கு அழைத்துப் பேசியே அவரைப் போட்டியில் நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற உண்மையை அரசாங்கம் விளங்கிக் கொண்டாலும், அதை இராணுவப் புலனாய்வுத்துறையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே யதார்த்தம்.
எப்போதுமே ஒரு நாட்டின் அரசியல் அதிகாரபீடத்தினது எண்ணங்களையும், விருப்பங்களையும் மட்டும் பிரதிபலிக்கும் ஒன்றாக புலனாய்வுத்துறை இருப்பதில்லை.
அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. பல சந்தர்ப்பங்களில் சக்திவாய்ந்த நாடுகளின் புலனாய்வுத்துறைகள், அரசியல் அதிகாரபீடங்களையே ஆட்டி வைத்துள்ளன. அடக்கி ஆண்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதிகள் கூட அதற்கு விதிவிலக்கானவர்களில்லை.
இத்தகைய நிலையில், இலங்கை அரசாங்கம் வடக்கில் உள்ள அரசியல் ரீதியான யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டாலும், இராணுவப் புலனாய்வுத்துறை அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை சகிப்புத் தன்மையைக் கொண்டிருக்கிறதா? என்ற கேள்வி உள்ளது.
இந்தக் கேள்வி தான், நியாயமான தேர்தல் நடக்குமா? – நடத்தப்படுமா? என்ற சந்தேகம் எழுவதற்கான முக்கிய காரணம்.
நியாயமான தேர்தல் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும், உள்ளூர் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே இருக்கிறது. ஏனென்றால், போர் முடிந்து நான்கு ஆண்டுகளாகி விட்ட போதிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு விட்ட போதிலும், வடக்கை இராணுவ சூழ்நிலையில் இருந்து விடுவிக்க அரசாங்கம் தவறியுள்ளது.
இந்தமாத இறுதியுடன் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக பொறுப்பேற்கவுள்ள இராணுவத் தளபதி, ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, தனது காலத்தில், போர்க்கால இராணுவத்தை, போருக்குப் பிந்திய அமைதிக்கால இராணுவமாக மாற்றியமைப்பதில் வெற்றி கண்டிருப்பதாக கூறி வருகிறார்.
அவ்வாறு இராணுவத்தை, போர்க்காலத் தில் இருந்து அமைதிக்காலத்துக்கு மாற்றியமைத்த அரசாங்கம், வடக்கை போர்க்கால சூழலில் இருந்து விடுவித்து அமைதிக்கால சூழலுக்கு மாற்றியமைக்கவில்லை.
இதனால் தான் உலக நாடுகளுக்கெல்லாம், இந்தத் தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்தத் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் கொடுத்திருந்தாலும், அந்த வாக்குறுதி எந்தளவுக்கு காப்பாற்றப்படும் என்பதற்கு உத்தரவாதமில்லை.
ஆனால், அரசாங்கத்தைப் பொறுத்தவ ரையில், வடக்கு மாகாண சபைத் தேர்தல் நியாயமாக நடத்தப்பட்டது என்ற பாராட்டைப் பெறுவதற்கு அதற்கு முக்கியமான தேவையாக உள்ளது. சர்வதேச அரங்கில் அடுத்தகட்ட சவால்களை சந்திப்பதற்கு வடக்கின் தேர்தல் பற்றிய சாதகமான கணிப்பீடு ஒன்று தேவைப்படுகிறது. இந்த உண்மையை அரசாங்கம் உணராமல் போயுள்ளது என்று கருத முடியாது.
அதேவேளை, இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க முடியாது, அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்ற கருத்தை முன்வைப்பதும் அரசாங்கத்துக்குச் சிக்கலானது. ஏனென்றால், இலங்கையில், விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டதாக உரிமை கோரியுள்ளது அரசாங்கம். அதைவிட வடக்கில் இராணுவம் எந்தவித தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை, பாதுகாப்பைக் கூட பொலிஸாரே கவனித்துக் கொள்கின்றனர் என்றும் கூறிவருகிறது. இத்தகைய நிலையில், வடக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக படையினரை முகாம்களுக்கு முடக்குவதை மறுப்பதற்கு, அரசாங்கத்துக்கு நியாயமான காரணங்கள் இல்லை. ஆனாலும் அரசாங்கம் அதைச் செய்ய விரும்புமா? என்பது சந்தேகம் தான்.
எவ்வாறாயினும், வடக்கு மாகாண சபைத் தேர்தல் மட்டுமன்றி, அடுத்து வரும் காலப்பகுதியும் கூட அரசாங்கத்துக்கு மிகவும் முக்கியமானது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்னும் சுமார் ஒரு மாதத்தில் இலங்கைக்கு வரவுள்ளார்.
அதேபோல, நவம்பர் மாதம், கொழும் பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டின் போதும் வடக்கில் சிவில் நிர்வாகம் நடக்கிறது என்பதையும், அமைதி நிலவுகிறது என்பதையும் காட்ட வேண்டிய தேவையும் உள்ளது.
இதற்கிடையில், வடக்கில் நியாயமான தேர்தல் நடத்தப்பட்டால் தான், கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா முழு அளவில் பங்கேற்கும் என்று மிரட்டுவதான தகவலும் உள்ளது.
இத்தகைய நிலையில், வடக்கு மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் சர்ச்சைக்குரிய தாக மாற்ற விரும்பாது போனால், இராணுவத்தினரின் செயற்பாடுகளை முகாம்களுக்குள் முடக்கி வைக்கும் முடிவை எடுத்தாக வேண்டும். எனினும் இந்த முடிவை எடுக்கும் நிலையில், கொழும்பின் அரசியல் தலைமைகள் மட்டும் இல்லை.
பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஷவே இதனை தீர்மானிக்கும் நிலையில் உள்ளவர். அவர் அத்தகைய முடிவுக்கு இணங்கினாலும் கூட, இராணுவப் புல னாய்வுத்துறையின் செயற்பாடுகள் முடக்கப்படும் வாய்ப்புகளை எதிர்பார்க்க முடியாது.
ஏனென்றால், புலனாய்வுத்துறைகள் அர சியல் ரீதியான முடிவுகளுக்கு முற்றாக கட் டுப்பட்டு நடந்து கொள்வதில்லை என்ற வரலாற்று ரீதியான சான்றுகள் அத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு குறுக்கே உள்ளன.
-சுபத்ரா-
Geen opmerkingen:
Een reactie posten