[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 01:21.38 AM GMT ]
வடக்கில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்க நகைகள் மற்றும் பெருந்தொகைப் பணத்தை வடமாகாணத் தேர்தலுக்கு முன் கைப்பற்றி விடும் முயற்சியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
வடக்கை மையமாகக் கொண்டு நடைபெற்ற இறுதிக் கட்ட போரின் போது விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து இடம்பெயர்ந்த மக்கள் கையளித்திருந்த நகைகள் மற்றும் பணம் என்பவற்றை பாதுகாப்பு கருதி விடுதலைப் புலிகள் இடத்துக்கிடம் புதைத்து வைத்திருந்தனர். இவற்றில் ஓரளவு நகைகள் மற்றும் பணம் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சியின் ஒரு பகுதியில் பெருமளவான தங்கம் மற்றும் நகைகளை விடுதலைப் புலிகள் மறைத்து வைத்திருப்பதாக பிரான்சில் வாழும் தமிழர் ஒருவர், பாதுகாப்புத் தரப்பிற்கு தகவல் வழங்கியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் ஊடாக இந்த தகவல் இலங்கை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விடுதலைப்புலிகள் புதைத்து வைத்தவற்றில் இங்குதான் மிகக் கூடிய அளவில் பெருந்தொகையான தங்கம் மற்றும் பணம் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன் இந்த தங்கம் மற்றும் பணத்தை கண்டுபிடித்து மீட்டெடுக்கும் தீவிர முயற்சியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதற்கென அவரது பணிப்புரையின் பேரில் கனிமப் பொருட்கள் திணைக்களம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம், இலங்கைச் சுங்கத்திணைக்களம் ஆகியவற்றில் இருக்கும் தங்கத்தைக் கண்டறியும் விசேட ஸ்கேனர் இயந்திரங்களைக் கொண்டு கிளிநொச்சிப் பகுதியில் தங்க வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பூமிக்கடியில் உள்ள தங்கத்தைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காககவே தற்போது பாதுகாப்புச் செயலாளர் ஆபிரிக்க நாடொன்றுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதாள உலகக் குழுக்களுக்கு இடமில்லை- கோத்தபாய ராஜபக்ச
நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு இடமில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் எந்தவொரு பாதாளக் குழுவோ அல்லது வேறு ஆயுதக் குழுவோ மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்த அனுமதியளிக்கப்பட மாட்டாது. இவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் மா அதிபர்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தவர்களை கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழுச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு சட்டத்திலிருந்து தப்பிக்க இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தெரனியாகல நூரியாவத்த பிரதேசத்தில் தோட்ட முகாமையாளர் படுகொலை மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் இந்த விசாரணைகளுக்கு தலைமைதாங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏமாற்றி கற்பழிக்கப்பட்ட வவுனியா யுவதி: பஸ் சாரதி, நடத்துனர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 01:28.40 AM GMT ]
கொழும்புக்குச் சென்று கொண்டிருந்த வவுனியா யுவதி ஒருவரை ஏமாற்றி கற்பழித்த பஸ் சாரதியொருவரும், நடத்துனரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது தாயுடன் சண்டை பிடித்துக்கொண்டு தனியார் பஸ்ஸொன்றில் கொழும்புக்கு பயணித்துள்ளார். இதற்கிடையே நைசாகப் பேசி அந்த யுவதியின் நிலை அறிந்து கொண்ட பஸ் சாரதியும் நடத்துனரும் அவரை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தலைமறைவாகி விட்டனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட யுவதியின் முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்திய பொலிசார் குறித்த சாரதியையும் நடத்துனரையும் கைது செய்திருந்தனர்.
பஸ்ஸின் சாரதியான மலிதுவ பகுதியை சேர்ந்த சிந்தக்க பிரசாத் அபேயதுங்க என்பவரும் அதே பஸ்ஸின் நடத்துனரான கலேவல பகுதியைச் சேர்ந்த துனு ஆராச்சிக்கே சனத்குமார என்பவருமே கைது செய்யப்பட்டிருந்தனர்.
கொழும்பு நீதிமன்ற நீதவான் நிரோசா பெர்னாண்டோ முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் பாதிக்கப்பட்ட யுவுதி அவர்கள் இருவரையும் அடையாளம் காட்டியுள்ளார்.
எனினும் சந்தேக நபர்கள் இருவரையும் ஐந்து இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்துள்ளார்.
மேலும் சந்தேக நபர்கள் இருவரும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை கோட்டை பொலிஸ் நிலையத்தில் சமுகம் அளித்து கையொப்பம் இட வேண்டுமெனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten