[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 11:27.30 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராம யாத்திரையின் தொடர்ச்சியாக வேரவில் கிராமத் தரிசிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இத்தரிசிப்பில் பாராளுமன்ற பாராளுன்ற உறுப்பினர் சி.சிறீதரன், பூநகரிப் பிரதேச அமைப்பாளரும் ஆசிரியருமான செ.சிறீரஞ்சன், கிளிநொச்சி பிரதேச இளைஞர் அணிச் செயலாளர் கு.சர்வானந்தா, கிளிநொச்சி பிரதேச இளைஞர் அணிச் செயற்பாட்டாளர் கிருபாகரன் ஆகியோருடன் வேரவில் கிராம பொது மக்கள், விவசாயிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில், மிக முக்கியமாக இன்றுள்ள அரசியல் சூழ்நிலைகள் பற்றி, குறிப்பாக வரப்போகின்ற மாகாணசபைத் தேர்தல் பற்றியும் மக்கள் அதனை எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றார்கள் என்பதனையும் தமிழர்கள் பட்ட வலிகள், துன்பங்களுக்கு வரப் போகின்ற தேர்தல் தீர்வாக அமையுமா? என்பதையும் தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அரசியல் அபிலாசைகளைக் கையாள்வதற்கு இந்த மாகாண சபை ஊடாக எதனையாவது சாதிக்க முடியுமா என்ற பல கோணங்களில் மக்களுடன் கலந்துரையாடப்பட்டது.
மேற்படி கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள்,
“13ம் திருத்தம் என்பது இலங்கை இந்திய அரசுகளால் திடீரெனக் கொண்டுவரப்பட்ட ஒரு குறைப் பிரசவமாக உலகத்தால் பார்க்கப்படுகிறது.
இந்தப் 13ம் திருத்தத்தின் மூலம் தமிழ் மக்களின் அபிலாசையானது, பூர்த்தி செய்யப்படும் என்ற எண்ணப்பாட்டை நாம் முதலில் கைவிட வேண்டும். 13ம் திருத்தம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்காக நீடித்து நிலைக்கக் கூடிய ஒரு தீர்வைத் தமிழர்கள் பெறுவதற்கு ஒரு ஆரம்பப் புள்ளியாகவோ அல்லது இடைக்காலத் தீர்வாகவோ நினைத்துத் தமிழர்கள் ஏமாறக் கூடாது.
நாங்கள் எங்கள் இலட்சியத்தினை அடைவதற்குத் தொடர்ந்து ஜனநாயக ரீதியில் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என நாம் முதலில் உணர வேண்டும்.
முழு இராணுவப் பிரசன்னத்துள்ளும், நேரடியான இராணுவ ஆட்சி முறைக்குள் வைத்திருக்கப்படும்வரை, மானிட தர்மத்துக்கு மாறாக எம்மீது குற்றம் புரிந்தோரே எம்மைக் காப்பதாகவும், அவர்களே எம்மீது நடாத்தப்பட்ட குற்றங்களிற்கெதிராக விசாரிப்பதென்பது எவ்வளவு தூரம் நியாயமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர்களாகிய நாம் முதலில் தோல்வி மனப்பாங்கிலிருந்து வெளியே வரவேண்டும். தம் இலட்சியம் நோக்கிய ஆயுதப் போராட்டத்தில் பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கலாம் அல்லது மௌனிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஏற்பட்ட தோல்வி என ஒப்புக் கொள்ளலாம்.
ஆனால் அரசியல் ரீதியாகத் தமிழர்கள் தோற்கடிக்கப்படவில்லை. உலகம் விரும்பும் ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி அகிம்சை முறையில் ஜனநாயக வழியில் தமிழர் தொடர்ந்து போராடுவதற்கான வல்லமையினைக் கொண்டிருக்கிறார்கள். எனவே, தோல்வி என்ற மன நிலையிலிருந்து எம்மை மீட்டு வெளிவர வேண்டும்.
இக்கிராம ரீதியான யாத்திரை அல்லது மக்கள் சந்திப்பென்பது ஒவ்வொரு தமிழனதும் மன உணர்வை சர்வதேசத்தின் காதுகளிற்கு கொண்டு செல்கிறது என்பதனை நாம் அறிய வேண்டும்.எனவே வலி சுமந்த தமிழர் அனைவரும் விழித்தெழ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் கூறினார்.
இந்நிகழ்வில் லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் “ நம்பிக்கை ஒளி” அமைப்பின் அனுசரணை மூலம் அங்கு கலந்து கொண்டிருந்த விவசாயிகளுக்கு மண்வெட்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ராஜீவ் கொலை வழக்கு: கே.பியை விசாரிக்குமாறு மனுத் தாக்கல்
[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 09:51.52 AM GMT ]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரான குமரன் பத்மநாபன் என்பவரை விசாரணை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஜெபமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில், இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை.
எனவே அவரை விசாரித்தால் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான உண்மைகள் வெளிவரும் என கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ராஜேஷ்குமார், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten