தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 juli 2013

நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்கால் செல்லக்கூடாது! கடும் நிபந்தனைகளுடன் அனுமதிப்பதற்கு அரசு தீர்மானம்

பிடரியில் பிடித்து தள்ளும்வரை அரசில் இருந்து வெளியேற தயாரில்லை!- ரவூப் ஹக்கீம்
[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 12:31.02 AM GMT ]
முஸ்லிம் காங்கிரஸ் என்பது அதிகாரத்துக்கு எதிரான சதிகார கட்சியல்ல அரசுக்கு விசுவாசமான ஒரு பங்காளிக் கட்சி. பிடரியில் பிடித்து வெளியே தள்ளும்வரை அரசில் இருந்து கொண்டே சமுதாய நலனுக்காக நான் போராடிக்கொண்டே இருப்பேன். இவ்வாறு தெரிவித்தார் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டி மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றிய போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.
மூவின மக்களும் கலந்துகொண்ட இங்கு அவர் மேலும் பேசுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு சிறந்த அரசியல் இராஜதந்திரி, தெளிவான சிந்தனை கொண்டவர். சுயமாக சிந்தித்து செயலாற்றும் திறன் படைத்தவர். எனவே அவரது அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இல்லை.
முஸ்லிம் காங்கிரஸ் என்பது அதிகாரத்துக்கு எதிரான சதிகார கட்சியல்ல அரசுக்கு விசுவாசமான ஒரு பங்காளிக் கட்சி. உள்நாட்டு சக்திகளுக்கு உடந்தையாக இருந்தோ அல்லது சர்வதேச சதிகளின் பக்கம் சார்ந்திருந்தோ நாட்டைக் காட்டிக்கொடுத்து பலவீனப்படுத்த வேண்டிய அவசியம் எமது கட்சிக்கு இல்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து கொள்கையை விட்டுக் கொடுக்கும் கட்சியோ தலைசாய்க்கும் கட்சியோ அல்ல.
பதின்மூன்றை பூதாகாரமாக்கி சிலர் பயமுறுத்த நினைக்கிறார்கள். இரு மாகாணங்களின் இணைப்பை மாகாண சபைகளால் மேற்கொள்ள முடியாது. பாராளுமன்றத்தின் அங்கீகாரம் அதற்கு அவசியம். பெரும்பான்மை இனத்தவரையே பெரும்பான்மையாகக் கொண்ட பாராளுமன்ற அதிகாரம் ஒருபோதும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை.
நாற்பது வருட கால அரசியல் அனுபவம் வாய்ந்த ஜனாதிபதியின் கைகளைப் பலப்படுத்துவதால் தான் சிறுபான்மை உரிமைகளைப் பேண வழி ஏற்படும். எவரின் தேவைக்காகவும், எவரின் கொந்தராத்துகளுக்காகவும், சதிகளுக்கும் பணிந்து நான் அரசைவிட்டு வெளியேறத் தயார் இல்லை.
பிடரியில் பிடித்து வெளியே தள்ளும்வரை அரசில் இருந்து கொண்டே சமுதாய நலனுக்காக நான் போராடிக்கொண்டே இருப்பேன்’ என்றார்.
நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்கால் செல்லக்கூடாது! கடும் நிபந்தனைகளுடன் அனுமதிப்பதற்கு அரசு தீர்மானம்
[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 12:10.41 AM GMT ]
வரும் ஆகஸ்ட் மாதம்  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சில கட்டுப்பாடுகளுடனேயே நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தங்கியிருக்கும் காலங்களில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை அவர் சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் செல்வதற்கும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திக்கவும் நவநீதம்பிள்ளைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நவநீதம்பிள்ளையுடன் சேர்ந்து வரும் ஏனையோர் தொடர்பான தகவல்களையும் முன்கூட்டியே தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும்  இலங்கை வெளிவிவகார அமைச்சு கேட்டுள்ளதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten