தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 april 2013

இந்திய நாடாளுமன்றக் குழுவின் சிறிலங்கா பயணத்துக்கு சவுத் புளொக் கூறிய ஆலோசனை !


இந்திய நாடாளுமன்றக் குழுவின் சிறிலங்கா பயணத்துக்கு சவுத் புளொக் கூறிய ஆலோசனை

இந்திய நாடாளுமன்றக் குழுவின் சிறிலங்கா பயணத்துக்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்த போதிலும், இந்தப் பயணத்தை நிறுத்த வேண்டாம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு ஆலோசனை கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய சூழ்நிலையில் இந்திய நாடாளுமன்றக் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வது தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் என்றும், எனவே இந்தப் பயணத்தைக் கைவிடுமாறும் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், இந்திய வர்த்தக கைத்தொழில் கூட்டமைப்பின் தலைவர் நைனா லால் கிட்வாய்க்கு கடிதம் எழுதியிருந்தார்.
அத்துடன் இந்தப் பயணத்துக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இதனால், இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணம் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணம் கைவிடப்பட்டுள்ளதாகவும் கூட நேற்று சில இந்திய ஊடகங்களில் செய்தி வெளியானது.
எனினும் திட்டமிட்டபடி நேற்று முன்தினம் இரவே இந்திய நாடாளுமன்றக் குழு கொழும்புக்கு சென்றுள்ளது.
இந்தக் குழுவினர் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குச் சென்று சபாநாயகர் சமல் ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்தனர்.
அதன் பின்னர், நேற்று மாலை யாழ்ப்பாணம் சென்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், குடியியல் சமூகப் பிரதிநிதிகளையும் அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்தக் குழுவில் திரணமுல் காங்கிரஸ் உறுப்பினர் சௌகதா றோய், காங்கிரஸ் உறுப்பினர் சந்தீப் டிக்சித், பாஜக உறுப்பினர்களான அனுராக் தாகூர், பிரகாஸ் ஜவாடேகர், பகுஜன் சமாஜ் சட்சியின் தனஞ்ஜய் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக இந்தக் குழுவில் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர் மது கௌட் யஸ்க்கி, சிறிலங்கா பயணத்தில் பங்கேற்கவில்லை.
ஆந்திராவைச் சேர்ந்த இவர் ஒருவரே, இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த தென்மாநிலத்தைச் சேர்ந்தவராவார்.
மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும், சிறிலங்கா பயணத்தை தவிர்க்குமாறு தனித்தனியாக கடிதம் அனுப்பியிருந்தார்.
இதையடுத்தே, மதுகௌட் யஸ்க்கி சிறிலங்கா பயணத்தில் இருந்து விலகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எனினும், கர்நாடக சட்டசபைத் தேர்தல் தொடர்பான கட்சிப் பணிகள் காரணமாகவே அவர் இந்தப் பயணத்தில் பங்கேற்கவில்லை என்று இந்திய வர்த்தக கைத்தொழில் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணத்துக்கு புதுடெல்லியில் எதிர்ப்பு எழுந்த போதிலும், பயணத் திட்டத்தைக் கைவிட வேண்டாம் என்று சவுத் புளோக்கே ஆலோசனை கூறியதாக, இந்திய வர்த்தக கைத்தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தப் பயணம், இருநாட்டு அரசுகளுக்கும் இடையில் தொடர்புடைய ஒன்று அல்ல என்றும், இது கைவிடப்பட்டால் எதிர்நடவடிக்கையாகவே கருதப்படும் என்றும் சவுத் புளொக் ஆலோசனை கூறியுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர், நைனா லால் கிட்வாய், இந்திய வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு பயணத்தை கைவிட விரும்புவது குறித்து ஆலோசனை நடத்திய போதே, இந்த ஆலோசனை கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten