தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 april 2013

உதயன் நாளிதழ் அலுவலகத்தின் மீது தாக்குதல்!ஐ.நா. பேரவை தலையிட திருமாவளவன் வலியுறுத்தல்!


உதயன் யாழ். பிரதான காரியாலயம் மீது இன்று அதிகாலை தாக்குதல்! அச்சு இயந்திரங்களும் பெற்றோல் ஊற்றி எரிப்பு
[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 12:51.47 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் பத்திரிகை நிறுவன பிரதான காரியாலயத்தின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உதயன் பிரதான அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அச்சு இயந்திரப் பகுதியும் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.
யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பிரதான அலுவலகத்திற்குள் இன்று அதிகாலை நுழைந்த இனந்தெரியாத நபர்கள் பணியாளர்களை ஆயுத முனையில் அச்சுறுத்தி அச்சுக்கூடப் பகுதிக்குள் நுழைந்தவர்கள் அச்சு இயந்திரங்களையும் பெற்றோர் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர்.
அத்துடன் உதயன் வளாகத்திற்குள்ளும் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2ம் இணைப்பு
யாழ்ப்பாண உதயன் அலுவலகம் மீது மீண்டும் தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை அலுவலகம் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.30 அளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று பேரைக்கொண்ட ஒரு குழு, அலுவலகத்துக்குள் பிரவேசித்து துப்பாக்கித்தாக்குதல் நடத்தியுள்ளது. பின்னர் அச்சு இயந்திரம், மற்றும் இணையத்தள உபகரணங்களை சேதப்படுத்தி பெற்றோல் ஊற்றி தீவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது பணியாளர்கள் அனைவரும் தப்பி ஓடி விட்டமையால் எவரும் பாதிக்கப்படவில்லை. இந்தநிலையில் பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
3ம் இணைப்பு
உதயன் பிரதான அலுவலகத்தில் விசமிகள் அட்டகாசம்;அச்சு இயந்திரங்களும் எரிப்பு அதிகாலை சம்பவம்
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன்நாளிதழ் மீது இன்று அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
துப்பாக்கிகளுடன் உள்நுழைந்த இனந்தெரியாதவர்கள் சரமாரியாகச் சுட்டபடி அச்சகத்தினுள் புகுந்து அச்சு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் பெற்றோல் ஊற்றி இயந்திரத்தையும் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். அச்சு இயந்திரம் இயங்க முடியாத அளவுக்கு பழுதடைந்திருப்பதுடன் அச்சு இயந்திரப் பெருமளவான அச்சுத் தாள்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
உதயன் நாளிதழினை முடக்கும் நோக்குடன் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலினால் பத்திரிகை அச்சிடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 13ம் திகதி அதிகாலை 4.30 மணி அளவில் உதயன் அலுவலக வாசலுக்கு தலைக் கவசம் அணிந்தபடி வந்த மூவரில் ஓருவர் "தூஷண'' வார்த்தைகளால் பாதுகாப்பு ஊழியர்களை ஏசியபடி, அங்கிருந்து ஓடுமாறு விரட்டியபடி வான்நோக்கி வேட்டுக்களைத் தீர்த்திருக்கின்றார். 
அவனோடு வந்த மற்றைய இருவரும் பிரதான அச்சு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குச் சென்று பணியாளர்களை வெளியேறுமாறு கூறி வேட்டுக்களைத் தீர்த்தனர். 
அச்சகப் பணியாளர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகத்துக்கு 9மில்லி மீற்றர் பிஸ்டல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் உயிர் தப்பிக் கொண்ட பணியாளர்கள் அச்சுக் கூடத்தை விட்டுஓடித் தப்பி விட்டனர்.
துப்பாக்கிதாரிகள் அச்சு இயந்திரத்தின் மீதும் பிரதான மின்மார்க்கத்தின் மீதும் துப்பாக்கியால் சுட்ட பின்னர் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த காகித றோல்களைத் தீயிட்டு கொழுத்தி அச்சு இயந்திரத்தின் பிரதான பகுதிகள் மீதும் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தியுள்ளனர்.
தமிழர்களின் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் உதயனின் குரல்வளையை நசுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. உதயன், மக்களின் கரங்களில் செல்வதைத் தடுக்கும் வகையில் விநியோகப் பணியை முடக்கும் செயற்பாடுகள் இந்த வருடத்தின் ஆரம்பம் முதலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஜனவரி 10ம் நாள் உதயன் நாளிதழ் விநியோகப் பணிகளில் ஈடுபட்டிருந்த சமயம் வடமராட்சிப் பகுதியில் வைத்து விநியோகப் பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டதோடு அவரது மோட்டார் சைக்கிளும், அவர் கொண்டு சென்ற பத்திரிகைகளும் நடு வீதியில் வைத்து தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
அத்துடன் ஜனவரி 15ம் நாள் உதயன் ஊடகவியலாளர் யாழ்.பஸ் நிலையத்தில் வைத்து மிக மோசமாகத் தாக்கப்பட்டார். 
இதன் தொடர்ச்சியாக யாழ். பஸ் நிலையத்தில் வைத்து உதயன் ஊடகவியலாளர் ஒருவருக்கு சீருடை தரித்த இராணுவ அதிகாரி ஒருவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 3ம் திகதி உதயன் கிளிநொச்சி பிராந்திய காரியாலயத்துக்குள் புகுந்து கொண்ட காடையர் குழு அங்கிருந்த பணியாளர்களைப் படுமோசமாகத் தாக்கி காயப்படுத்தியதுடன் பல லட்சம் பெறுமதியான பொருள்கள் சேதமாக்கப்பட்டிருந்தன. 
இது தவிர கடந்த காலங்களிலும் உதயன் பல சவால்களை எதிர்கொண்டிருந்தான். 2006ம் ஆண்டு மே 2ம் நாள் உலக ஊடக நாள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த வேளை மே முதலாம் நாள் இரவில் உதயன் வளாகத்தினுள் புகுந்த காடையர்கள் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். காடையர்களின் இந்தத் தாக்குதலினால் உதயன் விநியோக முகாமையாளர் மற்றும் உதயன் பணியாளர் ஒருவருமாக இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தின்போது கொல்லப்பட்டனர். 
அத்துடன் உதயன் ஆசிரியர் பீடத்தினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அலுவலகக் கணினி மற்றும் அதனுடன் இணைந்த உபகரணங்களையும் அழித்தனர்.
கடந்த 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் உதயன் அலுவலகத்தின் மீது கிரனைட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் உதயன் பிரதம ஆசிரியரின் வாசஸ்தலம் மயிரிழையில் தப்பியது.
கடந்த ஏப்ரல் 3ம் திகதி கிளிநொச்சியில் உதயன் அலுவலகம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபரிடம் மேலதிக பாதுகாப்புக் கோரி விண்ணப்பித்த போதும் இதுவரையில் அதற்குரிய எந்தவித நடவடிக்கைகளையும் பொலிஸ்மா அதிபர் மேற்கொள்ளவில்லை.
இதேவேளை இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸ் அவசரத் தொலைபேசி இலக்கமான 119க்குத் தொடர்பு கொண்ட போதும் மேலும் யாழ்.பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துக்கு உதயன் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்ட போதும் பொலிஸார் பதிலளிக்கவில்லை.
இதன் பின்னர் எமது கொழும்பு அலுவலகத்தின் ஊடாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி சமன்சிகேராவின் கைத்தொலைபேசிக்கு அறிவித்ததன் பின்னரே பொலிஸார் உதயன் பணிமனைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.


யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்! இலங்கைக்கு வைகோ கண்டனம்
[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 05:34.41 AM GMT ]
இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிக்கையான உதயன் அலுவலகத்திற்குள் புகுந்த சிங்கள இராணுவத்தினர் அலுவலகத்தை அடித்து நொறுக்கி பத்திரிக்கைக்கு தீவைத்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இன்று (ஏப்ரல் 13ம் தேதி)  அதிகாலை 4 :30 மணி அளவில், யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் தெருவில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய குண்டர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, அங்கு பணியாற்றியவர்களை அடித்து விரட்டி விட்டு, அங்குள்ள அச்சு இயந்திரங்களை உடைத்து நொறுக்கி தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.
இன்று நடந்த தாக்குதலை சிங்கள இராணுவத்தினரே செய்துள்ளனர். 2006ம் ஆண்டு மே 3ம் தேதி, இதே உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் சிங்கள இராணுவத்தினர் நுழைந்து, துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த யாழ்ப் பகுதி சிங்கள இராணுவத்தின் ஜெனரல் ஹத்ருசிங்க கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவர் தனிக் கூலிப்படை வைத்து அக்கிரமம் செய்வதாக முன்னாள் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில்தான் குற்றம் சாட்டினார். நேற்று இலங்கை நாடாளுமன்றத்திலும் இதுபற்றி குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில்தான் கிளிநொச்சியில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகம் சிங்களவர்களால் தாக்கப்பட்டது. அதுவும் இராணுவத்தினரின் வன்முறையாகவே தெரிகிறது. கிளிநொச்சி அலுவலகத்துக்கு இலங்கை அரசிடம் பாதுகாப்புக் கேட்டும் இதுவரை கொடுக்கப்படவில்லை.
தமிழர்களின் பத்திரிகை அலுவலகங்களை தீயிட்டுக் கொளுத்துவதும், இயந்திரத் துப்பாக்கிகளால் சுடுவதும் சிங்கள இராணுவத்தினுடைய கொடுஞ்செயலே ஆகும்.
உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரான சரவணபவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பத்திரிகை அலுவலகத்துக்கே இந்த நிலைமை என்றால், தமிழ் ஈழத்தில் வாழும் தமிழர்கள் உயிருக்கும் உடமைக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை என்பதும், சிங்கள இராணுவத்தின் அராஜகம் தமிழ் ஈழத்தில் தொடர்ந்து தலைவிரித்து ஆடுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து சிங்கள இராணுவமும் பொலிசும் முற்றாக வெளியேற்றப்பட்டாக வேண்டும். ஐ.நா. மன்றமும், அனைத்துலக நாடுகளும் அந்த நிலைமையை ஏற்படுத்த முன்வர வேண்டும். இலங்கைத் தீவில், தமிழ் ஈழத்தில் உள்நாட்டுப் பத்திரிகைகளோ, தொண்டு நிறுவனங்களோ சுதந்திரமாக செயல்படவே முடியாது.
மனித உரிமைகள் சிங்களவரால் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன என்பதை அனைத்துலக சமுதயாம் எண்ணிப் பார்த்து, ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்தும் சிங்கள அரசின் இக்கொடுமை இன்னும் தொடர்வதை தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


தமிழர்களுக்கு நீதியான முறையில் அரசியல் உரிமையை வழங்க வேண்டும்: புதுவருட வாழ்த்துச் செய்தியில் யோகேஸ்வரன் எம்.பி! உதயன் தாக்குதலுக்கும் கண்டனம்!
[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 07:34.55 AM GMT ]
இவ்வருடம் உதயமாகும் “விஜய” புதுவருடமானது, இந்து தமிழ் மக்கள் வாழ்வில் இன்ப ஒளியை மலரச் செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து நல்வாழ்த்து தெரிவிக்கின்றேன் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிபிட்டுள்ளதாவது,
இப்புதுவருடம் இந்து, பௌத்த மக்களின் புதுவருடமாக திகழ்கின்றது. ஆனால் இம்மண்ணில் பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் இன்றும் தமது சொந்த மண்ணில் சுதந்திரமின்றி அடிமையாக வாழும் நிலை விளங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்நாட்டில் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்த விரும்பாத சுயநலத்துடன் விளங்கிக் கொண்டிருக்கும் இவ்வரசாங்கம் நீதி நியாயமான முறையில் தமிழர்களின் அரசியல் உரிமையை வழங்க முன்வர வேண்டும். இதற்கு சர்வதேசம் அரசாங்கத்துக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இந்நிலை உருவாகும் ஆண்டாக இவ் விஜய புதுவருடம் திகழ வேண்டும் என அனைத்து தமிழ் இந்து மக்களும் இறைவனை பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றேன்.
கடந்த கால யுத்த சூழலால் பாதிக்கப்பட்டு உறவுகளின் உயிர்களை இழந்தும், காணாமல் பறிகொடுத்தும், உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும், இயற்கையாகவும், சேர்க்கையாகவும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு விதவையாகவும், தபுதாரனாகவும், அனாதைகளாகவும், அதிகளாகவும், சிறைக்கூட வாழ்வை அனுபவிப்பவர்களாகவும், பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிர்ப்பவர்களாகவும் உள்ள எமது உறவுகளின் துன்ப நிலையை துடைக்க இயன்றவு ஆதரவுகளை வழங்கி அம்மக்களின் அகத்தில் மலரும் இன்ப நிலை கண்டு மகிழ்வுறும் தமிழனாக நாம் இப்புதுவருடத்தை கொண்டாடுவோம்.
அதுமட்டுமின்றி இந்நாளில் கேலிக்கை நிகழ்வுகனை தவிர்த்து, பிற உயிர்களை வதைத்து அவற்றின் ஊணை உண்டு இன்பம் காணும் போலி இந்துவாக வாழாது சைவ உணவு உண்டு உண்மையாக இந்துவாக இப்புதுவருடத்தில் திகழ்வோமாக.
எங்கள் தமிழ் மக்கள் மத்தியில் சுயநலம் நீங்கி பொது நல உணர்வு மேலோங்கும் நல்லாண்டாக இவ்ஆண்டு மலர இறைவனை வேண்டி மீண்டும் நல்வாழ்த்தை தெரிவிக்கின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்தார்.
2ம் இணைப்பு
யாழப்பாணம் உதயன் பத்திரிகை நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். சீ.யோகேஸ்வரன் பா.உ
யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை நிலையத்தின் மீது இன்று அதிகாலை துப்பாக்கி ஏந்திய மூவர் சென்று பத்திரிகை நிலையத்தை தாக்கி எரித்தமை மிகவும் கண்டிக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயல். இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் விடுத்துள்ள கண்டன செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது!
அண்மையில் கிளிநொச்சி உதயன் பத்திரிகை நிலையத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல் காயம் ஆறும் முன் மீண்டும் யாழ் உதயன் தலைமையகத்தில் இனம்தெரியாத ஆயுதக்குழு தாக்கி உள்ளமை திட்டமிட்ட ஒரு சதிமுயற்சி என்பதை யாரும் மறுக்க முடியாது.
கிளிநொச்சி தாக்குதலின் பின் யாழ் உதயன் பத்திரிகை நிலையத்துக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. ஜனநாயகத்துக்கு விடுக்கும் அச்சுறுத்தலாகவே தமிழ் மக்களின் குரலாக ஒலித்த உதயன் பத்திரிகை நிலையமும், அனைத்து பொருட்களும் எரிக்கப்பட்டது எடுத்துக் காட்டுகின்றது.
தொடர்ந்து தமிழனத்தின் ஜனநாயகத்தை பாதிக்கும் இச்செயற்பாட்டை சர்வதேசம் அனுமதிக்க கூடாது எனவே இவர்கள் இலங்கை தமிழ் மக்கள் சார்பாக விரைந்து செயற்படுவதன் அவசியத்தை இவ் உதயன் பத்திரிகை எரிப்பு நினைவுபடுத்தி நிற்கின்றது.
ஜனநாயகத்தை பாதுகாக்க முற்படும் ஊடகங்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டுவரும் இவ்வேளை உதயன் பத்திரிகை ஊடகம் சார்பாக தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஊடக அமைப்புக்கள் சர்வதேசத்தை கோர முன்வரவேண்டும்.
நமது தமிழ் மக்களின் துன்பத்தை தீர்த்து நியாயமான தீர்வை சர்வதேச சமூகம் காலம் தாழ்தாது விரைவாக பெற்று தரவேண்டும். இல்லாவிடில் தமிழ் மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளும் முற்றாக அத்தொழிக்கப்படுவதை யாராலும் நிறுத்த முடியாது என தமது கண்டன அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

உதயன் இயந்திரப் பகுதி பொலிஸாரினால் சீல் வைப்பு: சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பார்வை
[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 04:16.56 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையின் இயந்திரப் பகுதி இனந்தெரியாத ஆயுத தாரிகளால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதையடுத்து, இயந்திரப் பகுதிக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு கூட்டமைப்பினர் பா.உ சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்
கொழும்பில் இருந்து இரசாயனப் பகுப்பாய்வாளர்கள் வரும் வரை எரிக்கப்பட்ட உதயன் இயந்திரப் பகுதி பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 4.50 மணிக்கு உதயன் பத்திரிகையின் இயந்திரப்பகுதி இனந்தெரியாத ஆயுத தாரிகளால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் வருகை தந்த பொலிஸார் குறித்த பகுதியை ஆய்வு செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை நடத்த கொழும்பில் இருந்து இரசாயனப் பகுப்பாய்வாளர்கள் வருகை தரவுள்ளதாகவும் அவர்கள் வரும் வரை இயந்திரப்பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அதுவரை இயந்திரப்பகுதி சீல் வைக்கப்பட்டுளளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.உ சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

உதயன் நாளிதழ் அலுவலகத்தின் மீது தாக்குதல்!ஐ.நா. பேரவை தலையிட திருமாவளவன் வலியுறுத்தல்!
[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 10:43.20 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழ் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தலைக்கவசம் அணிந்து துப்பாக்கிகளோடு அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்தியும் அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கியும் விரட்டியடித்துள்ளனர்.
அதன் பின்னர் அங்கிருந்த அச்சு இயந்திரங்கள் மற்றும் பத்திரிகை அச்சிடுவதற்குரிய காகிதங்கள் போன்றவற்றை பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் அந்த நாளேடு செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் ஊடகத்தினர் மீது தொடுக்கப்படும் ஐந்தாவது தாக்குதல் இது.
அரசாங்கத்தின் ஆதரவோடும் இராணுவத்தின் தூண்டுதலோடும் நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையில் ஊடகச் சுதந்திரம் முற்றாகப் பறிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.நா. பேரவை உடனடியாக இதில் தலையிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
இலங்கையிலுள்ள ராஜபக்ச அரசை விமர்சிக்கிற ஊடகங்களின் மீது தொடர்ந்து இவ்வாறு கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை, இலங்கையைச் சேர்ந்த 23 ஊடகவியலாளர்கள் அங்கிருந்து வெளியேறி அயல்நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிங்கள இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் கூடத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். சிலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
உலகிலேயே ஊடக சுதந்திரம் மிக மோசமாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது.
கடந்த மாதத்தில் ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானமும்கூட அங்கு நடைபெற்றுவரும் வன்செயல்களைக் கட்டுப்படுத்த உதவவில்லை.
அந்தத் தீர்மானத்தை தாம் ஏற்கவில்லையென்றும், ஐ.நா. கூறியபடி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பிக்க முடியாது என்றும் ராஜபக்ச அரசு திமிர்த்தனமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை ஐ.நா. பேரவைக்கு உள்ளது.
அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் மட்டுமின்றி இணையத்தளங்களும்கூட இலங்கை அரசாங்கத்தின் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.
இதுவரை, 5 இணையதளங்கள் மூடப்பட்டுள்ளன. 2 இணைய தள அலுவலகங்களில் இராணுவத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. புகழ்பெற்ற பிபிசி வானொலியும்கூட இலங்கை அரசால் அச்சுறுத்தப்பட்டு சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போதான இனப்படுகொலை வெளிஉலகுக்குத் தெரியாதவண்ணம் எப்படி ஊடகங்களை இலங்கை அரசு கட்டுப்படுத்தியதோ, அதுபோலவே இப்போதும் செய்துகொண்டுள்ளது.
இது இலங்கையில் வாழும் அனைத்துத் தரப்பினருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
இலங்கையைக் கண்டிக்க வேறு எந்த நாடும் முன்வராத நிலையில் ஐ.நா. பேரவை தலையிடுவதைத் தவிர வேறுவழியில்லை.
அங்கு மிச்சம் மீதி இருப்பவர்களும் கொன்றொழிக்கப்பட்ட நிறகு தீர்மானம் நிறைவேற்றுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
எனவே இனியும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக ஐ.நா. பேரவை தலையிட்டு இலங்கையில் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இது தொடர்பாக ஐ.நா. பேரவைச் செயலாளருக்கும், ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கும் கடிதங்கள் எழுதப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு உள் விவகாரமே காரணம்!- அரசாங்கம் கண்டுபிடிப்பு
[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 06:34.08 AM GMT ]
யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை அலுவலகத்தின் அச்சு இயந்திர பிரிவு, இனந்தெரியாத ஆயுததாரிகளால் தாக்கப்பட்டமை தொடர்பில் நடாத்தப்பட்ட விசாரணையில் உள் விவகாரமே தாக்குதலுக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது உதயன் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷமன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையின் பிரதான அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை 4.50 மணியளவில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், அச்சு இயந்திரப் பகுதியும் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.

உதயன் தாக்குதலுக்கு மகிந்த தலைமையிலான அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்!- ஐதேக
[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 06:28.14 AM GMT ]
இன்று அதிகாலை யாழ்ப்பாணம்  உதயன் பத்திரிகை அலுவலகம் மீது இனந்தெரியாத மூவர் கொண்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விடுத்துள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
சாந்தி, சமாதானம் ஏற்படுத்தும் தமிழ்-சிங்கள புதுவருடம் பிறக்கவுள்ள நிலையில், இன்று சனிக்கிழமை அதிகாலை யாழ், உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த சிலர் அதன் அச்சுயந்திரத்திற்கு துப்பாக்கிச்சூடு நடாத்தி, கட்டடத்திற்கு தீ வைத்துள்ளனர்.
இது சிறுகுணம் படைத்தவர்கள் செய்த செயல் இது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த தாக்குதலில் முழு பொறுப்பையும் மகிந்த ராஜபக்ச அரசு பொறுப்பேற்க வேண்டும். 
புலிகளை ஒழித்தது போன்று அரச தீவிரவாதத்தை தோற்கடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
குறுகிய காலத்தில் உதயன் பத்திரிகை மீது நடாத்தப்படும் 4வது தாக்குதல் இதுவாகும்.

இவ்வாறு திஸ்ஸ அத்தநாயக்கவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Geen opmerkingen:

Een reactie posten