தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 april 2013

பிபிசி மீது அதிருப்தி வெளியிட்டுள்ளது பிரபல லண்டன் பல்கலைக்கழகம்!


பிபிசி மீது அதிருப்தி வெளியிட்டுள்ளது பிரபல லண்டன் பல்கலைக்கழகம்

தி லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்
பிபிசியின் பிரபல ஆவணப்பட நிகழ்ச்சியான பனோரமாவை பிரிட்டனின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான தி லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் விமர்சித்துள்ளது.
பனோரமா செய்தியாளர் ஒருவர் ஒரு பேராசிரியர்போல இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களோடு சேர்ந்துகொண்டு வடகொரியா சென்று அங்கு ஆவணப்படம் எடுத்தமைக்காக இந்த விமர்சனம் வந்துள்ளது.
அதிகம் ரகசியமாக இயங்கும் வடகொரியாவில் பிபிசி செய்தியாளர் ஜான் ஸ்வீனி பயணம் செய்வதும், இராணுவம் குவிக்கப்பட்ட பகுதியான தென்கொரியாவுடனான வடகொரிய எல்லைக்கு அவர் செல்வதும் இந்த பனோரமா ஆவணப்படத்தில் காட்டப்படுகிறது.
வடகொரியாவுக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் மாணவர்களுடைய ஒரு பேராசிரியர் போல ஜான் ஸ்வீனி நடித்துள்ளார்.
பிபிசியின் திட்டங்கள் குறித்து இந்த மாணவர்களிடம் போதுமான அளவுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் அவர்களால் சிந்தித்து ஒப்புதல் அளித்திருக்க முடியவில்லை என்று அப்பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.
மூன்று பேர் அடங்கிய ரகசியக் குழு ஒன்று தங்களுடன் வருகிறது என்பதோ அவர்கள் ரகசியமாக முக்கியமான ஆவணப்படும் ஒன்றை எடுப்பார்கள் என்பதோ அந்த மாணவர்களிடம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.
பிபிசியின் காரியத்தால் அந்த மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அது கூறுகிறது.
தம் பல்கலைக்கழகத்தின் நற்பெயரையும் இது மோசமாகப் பாதிக்கும் என அது தெரிவித்துள்ளது.
பிபிசி பனோரமா குற்றச்சாட்டுகளை மறுக்கிறது
பயணம் சென்ற மாணவர்கள் அனைவரிடமும் பத்திரிகையாளர் ஒருவர் தங்களோடு வருகிறார் என்று இரண்டு முறை தெரிவித்ததாகவும், வடகொரியாவில் கைதுசெய்யப்படுவதற்கோ தடுத்துவைப்பதற்கோ ஆபத்து இருக்கிறது என மாணவர்களிடம் வெளிப்படையாக எச்சரித்திருந்ததாகவும் பிபிசி கூறுகிறது.
நாஜி அரசாங்கம் போல செயல்படும் வடகொரியா பற்றிய உண்மைகளை உலகுக்கு சொல்ல வேண்டும் என மாணவர்கள் நம்பியதால்தான் தங்களை அம்மாணவர்கள் உடன் அழைத்துச் சென்றார்கள் காட்டிக்கொடுக்காமல் இருந்தார்கள் என பத்திரிகையாளர் ஸ்வீனி கூறினார்.
இருந்தாலும். வடகொரியாவில் தமது மாணவர்களை பிபிசி மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியுள்ளது என இப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் குற்றம்சாட்டினார்.
நற்பெயருக்கு மோசமான களங்கம் ஏற்படும் என்று பல்கலைக்கழகம் கூறுகிறது.
வடகொரியாவில் எடுத்த ஆவணப்படத்தை ஒளிபரப்பாமல் நிறுத்த முடியாது என பிபிசி தலைமை இயக்குநர் முடிவெடித்திருப்பது பெரிய வருத்தம் தருகிறது என இப்பல்கலைக்கழகம் கூறுகிறது.
திட்டமிட்டபடி வரும் திங்கட்கிழமை இரவு வடகொரியாவில் எடுத்த ஆவணப்படத்தை ஒளிபரப்பப்போவதாக பிபிசி கூறுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten