தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 januari 2015

ஜனாதிபதி தேர்தலில் இந்தியப் பாதிப்பு!

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு இந்தியாவின் பாதிப்பை இந்தமுறை அதிகளவில் உணரக் கூடியதாக இருக்கிறது.
இந்தத் தேர்தலில் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வெற்றிக்காக போட்டியிடுகின்ற இரண்டு பிரதான வேட்பாளர்களும் இந்தியாவின் தாக்கங்களுக்கு உடன்பட்டிருப்பதை நடைமுறை ரீதியாக அவதானிக்க முடிகிறது.
தமது வெற்றிக்காக இந்தியத் தொடர்புகளையும் செல்வாக்கையும் உத்திகளையும் பயன்படுத்துவதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இணையாக எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் போட்டி போடுபவராகவே இருக்கிறார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த டிசம்பர் 8ம் திகதி வேட்புடி மனுவைத் தாக்கல் செய்த பின்னர், உடனடியாக கண்டிக்கோ அல்லது அநுராதபுரத்துக்கோ செல்லவில்லை.
இவையிரண்டும் தான் பௌத்த சிங்கள மக்களால் இலங்கையில் புனித நகரங்களாக கொண்டாடப்படுபவை.
அநுராதபுரத்தில் சங்கமித்தை கொண்டு வந்த வெள்ளரச மரம் பௌத்த மக்களின் வழிபாட்டுக்குரிய இடமாக இருந்து வருகிறது. கண்டியில் புத்தபிரானின் பற்கள் எனக் கருதப்படும் புனிதப் பொருட்கள் தலதா மாளிகையில் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளன.
1988ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஆர். பிரேமதாச தலதா மாளிகையின் மாடத்தில் இருந்துதான் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.
1996ம் ஆண்டு ரிவிரச நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்ட பின்னர் அந்த வெற்றிச் செய்தியை தலதா மாளிகையின் மாடத்தில் வைத்துத் தான், அப்போதைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்தை ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்கவிடம் கையளித்திருந்தார்.
சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவருமே கண்டியில் அல்லது அநுராதபுரத்தில் வழிபாடுகளை நடத்திவிட்டுத் தான் எந்தக் காரியத்தையும் மேற்கொள்வது வழக்கம்.
ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதற்கு முரணான வகையில் வேட்புமனுத் தாக்கல் செய்தவுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து தனது பரிவாரங்களுடன் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு பறந்து சென்றார்.
அங்கிருந்து திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசனம் செய்துவிட்டு வந்த பின்னரே கண்டிக்கும் அநுராதபுரத்துக்கும் சென்று வழிபாடுகளை நடத்தியிருந்தார்.
சிங்கள் பௌத்த அரசியல்வாதிகளின் வழக்கமான நடைமுறைகளுக்கு அப்பால் திருப்பதிக்குச் சென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செய்த வழிபாடு கூட இந்தியச் சார்பு நிலையைத் தான் வெளிப்படுத்தியது.
இந்திய ஆலயங்களின் மீது அண்மைக்காலமாக இலங்கை அரசியல் தலைவர்களுக்கு ஒரு ஈர்ப்பு வந்திருக்கிறது.
இந்திய ஜோதிஜடர்களை நம்பும் அவர்களின் மாந்திரீக சக்திகளை நம்பும் போக்கும் அதிகமாகவே உள்ளது. ஜனாதிபதி தனது கையில் வைத்திருக்கும் வஜ்ரம் என்ற பொருள் கூட இந்திய மாந்திரீகர்களினால் வழங்கப்பட்ட ஒன்று என்றே கூறப்படுகிறது.
பலத்தைக் கொடுக்கும் ஆயுதமாக நம்பியே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் சில வேளைகளில் அவரது மகன் நாமல் ராஜபக்சவும் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தேர்தல் பிரசாரங்களின் போது கூட இந்த வஜ்ரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கையில் இருப்பதைக் காண முடிகிறது.
இந்தத் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஹொலோகிராம் எனப்படும் முப்பரிமாண தொழில் நுட்பத்தையும் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தி வருகிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தான் இந்தியாவில் தேர்தல் பிரசாரங்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர்.
குஜராத் முதல்வராக இருந்த போதே அவர் இந்த முப்பரிமாணத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.
ஒரு இடத்தில் இருந்து கொண்டு பல பிரசார மேடைகளில் நேரடியாகத் தோன்றுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம் பிரசாரம் செய்ய முடியும்.
இந்திய பாராளுமன்றத் தேர்தலில் இந்தத் தொழில்நுட்பம் நரேந்திர மோடிக்குப் பெரிதும் கைகொடுத்திருந்தது.
அதே தொழில்நுட்பத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முதல் முறையாக இலங்கையில் அறிமுகம் செய்திருந்தார்.
இந்தியப் பிரதமரிடம் இருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தத் தேர்தலுக்காகப் பெற்றுக்கொண்ட இன்னொரு விடயம் நரேந்திர மோடியின் சமூக வலைத்தள பிரசாரங்களுக்குப் பொறுப்பான அரவிந்த குப்தா என்ற தகவல் தொழில்நுட்ப நிபுணரை பிரசாரத்துக்கு அமர்த்தியதாகும்.
அரவிந்த் குப்தாவே பாஜக வின் தகவல் தொழில்நுட்ப  பிரிவின் தலைவராக இருக்கிறார். அவரே நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றிக்கு சமூக வலைத்தளங்களை வெற்றிகரமாக பயன்படுத்தியவர்.
அரவிந்த குப்தா மேலும் நான்கு பேருடன் கொழும்பு வந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான வலைத்தளப் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவையெல்லாம் போதாதென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக பிரசாரம் செய்வதற்காக பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானும் நடினை ஜக்குலின் பெர்னாண்டஸூம் கூட வரவழைக்கப்பட்டனர்.
இந்தியாவில் திரை நட்சத்திரங்களைப் பயன்படுத்திடி தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இலங்கையிலும் கூட மாலினி பொன்சேகா, அனார்கலி ஆகாஷா, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட பல சிங்களத் திரையுலகப் பிரபலங்கள் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதுடன் சிலர் தேர்தல் பிரசாரங்களுக்கும் உதவி வருகின்றனர்.
ஆனால் முதல் முறையாக இந்திய நடிகர் ஒருவரை அழைத்து வந்து தேர்தலுக்காக பயன்படுத்தி இருக்கிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இது சர்ச்சைக்குரிய ஒரு விடயமும் கூட
கொழும்பு அரசியல் அரங்கில் மட்டுமன்றி இந்திய அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது சல்மான் கானின் தேர்தல் பிரசாரம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இம்முறை தனியே போர் வெற்றியை மட்டும் நம்பி பயனில்லை என்பதால் தான் பல்வேறு இந்திய யுத்திகளை கையாண்டு வெற்றி பெறுவதற்கு முயற்சிக்கிறார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மட்டுமே இந்திய உத்திகளைப் பயன்படுத்துகிறார் என்றில்லை. அவருக்குப் போட்டியாக எதிரணியால் களமிறக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவும் கூட இந்திய அரசியலின் பாதிப்பில் இருந்து தப்பிக்கவில்லை.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சோதிட நம்பிக்கைகளை கிண்டல் செய்த மைத்திரிபால சிறிசேனவும் அவரைப் போலவே வஜ்ரத்தைக் கையில் வைத்துக் கொண்டு தேர்தல் பிரசாரத்தில் இறங்கியிருந்தார்.
அதைவிடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாணியில் உடையணிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.
கண்டியில் முதல்முறையாக நரேந்திர மோடியைப் போன்று கோர்ட் ஒன்றை அணியத் தொடங்கிய மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து அதையே பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்.
நரேந்திர மோடியை பின்பற்றுவதாக ஆளும் கட்சியினர் செய்த விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் அந்த உடையை அவர் தொடர்ந்து அணிய ஆரம்பித்துள்ளார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் சிங்கள அரசியல் தலைவர்கள் யாரும் இதுபோன்ற உடையை அணிந்ததில்லை.
இதுவரையில்லாத ஒரு தலைவராக தன்னை காட்டிக்கொள்ள மைத்திரிபால சிறிசேன முனைகிறாரா அல்லது நரேந்திர மோடியின் பாணி வெற்றி கண்டது என்பதால் அதனைப் பின்பற்ற முனைகிறாரா என்று தெரியவிலலை.
இந்தியாவைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடியின் பாணி வெற்றியளித்துள்ளது.
இதற்கு முன்னரும் இந்தியத் தலைவர்கள் பலரும் இதுபோன்ற உடையை அணிந்திருந்தாலும் நரேந்திர மோடியின் அடையாளமாகவே இது மாறியிருக்கிறது.
அதுபோல மைத்திரிபாலவின் அடையாளமாகவும் இந்தியப் பிரதமரின் கோர்ட் மாறிவருகிறது.
இந்திய நடைமுறைகளும் வழக்கங்களும் இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இதில் அதிகளவில் இந்தியச் சார்பு நிலையை வெளிப்படுத்தும் மகிந்த ராஜபக்சவோ சீனாவின் நிழலில் ஆட்சியை நடத்த விரும்புபவர்.
ஆனால் மைத்திரிபால சிறிசேனவோ இந்தியாவின் நிழலில் ஆட்சியை நடத்த விரும்புகிறார். இவர்களில் யாருக்கு நாட்டை ஆளும் வாய்ப்புக் கிடைக்கப் போகிறது?
இந்த வாரம் முடிவு தெரிந்து விடும்.
ஹரிகரன்
http://www.newstamilwin.com/show-RUmtyBTYKblu6.html

Geen opmerkingen:

Een reactie posten