தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 januari 2015

மைத்திரிக்கே ஆதரவு! யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!!

மஹிந்தவிடம் 2005ல் புலிகள் பணம் பெற்றனர் என கூறப்படுவதில் உண்மையில்லை!- சிவாஜிலிங்கம்
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 04:18.58 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்தவிடம் கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் பணம் பெற்றனர் என கூறப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வடமாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கின்றார்.
குறித்த தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஜ.தே.கட்சியிடம் இடைக்கால தன்னாட்சி உரிமைக்கு ஒப்புதல் கேட்டார்கள். அதற்கு மறுத்த ஐ.தே.க. பின்னாளில் அதற்காக வருந்தியது என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் நிலைமைகள் தொடர்பில் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருதது தெரிவிக்கையிலேயே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக அப்போதிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22பேரையும் புலிகள் கிளிநொச்சிக்கு அழைத்திருந்தனர்.
அங்கே நாங்கள் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றிருந்தோம்.
அப்போது சிங்கள தேசத்தின் ஜனாதிபதி தேர்தல் நமக்கு அவசியமற்றது. அதனை நாங்கள் புறக்கணிக்க வேண்டும் என அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறினார்.
அப்போது நான் கேட்டிருந்தேன். ஐ.தே.கட்சி சமாதான உடன்படிக்கை ஆகியவற்றை நடைமுறைப்படுத்தியது எனவே அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தால் என்ன என்று. உடனடியாகவே பதிலளித்த தமிழ்ச்செல்வன் அதற்கு நாங்கள் தயார். ஆனால் இடைக்கால தன்னாட்சி உரிமைக்கு அவர்கள் எழுத்துமூலம் எமக்கு உத்தரவாதம் கொடுப்பார்களா? அவ்வாறானால் இந்த விடயம் தொடர்பில் ஐ.தே.கட்சியின் தலைவருடன் யார் பேசுவது? என கேட்டிருந்தார். அந்தப் பொறுப்பை நானே எடுத்துக் கொண்டு உடனடியாக கொழும்பு சென்றேன்.
அங்கே நாடாளுமன்றில் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க முயன்ற போது அவர் தேர்தல் காலம் என்பதால் அவரை சந்திக்க முடியவில்லை.
பின்னர் அவரின் பிரத்தியேக செயலாளரிடம் விடயத்தை தெரியப்படுத்தி விட்டு, அதன் பின்னர் ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரிடமும் கூறியிருந்தேன்.
பின்னர் தேர்தல் முடிந்ததும், நாடாளுமன்றில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போது அவர் மிக சோகமாக இருந்தார்.
நான் அப்போது கேட்டிருந்தேன். நான் உங்களிடம் தெரிவிக்கும்படி ஒரு விடயத்தை உங்கள் செயலாளரிடம் கூறியிருந்தேன். அந்த விடயம் உங்களுக்கு கிட்டியதா? என்று அதற்கு அவர் எனக்கு கூறிய பதில் எனக்கு அது கிட்டியது, ஆனால் எங்கள் கட்சியில் உள்ள சிலர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். ஆனால் அதனை நான் செய்யாமைக்காக இப்போது வருந்துகிறேன் என்று.
எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் மஹிந்தவிடமிருந்து தேர்தலை புறக்கணிப்பதற்காக பணம் பெற்றார்கள். என கூறப்படும் பொய்யான கருத்துக்களை நாங்கள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. என அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKbls4.html

மைத்திரிக்கே ஆதரவு! யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 03:41.27 PM GMT ]
ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் சார்பில் போட்டியிடவிருக்கும் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும், சமூக நீதிக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்றைய தினம் திறந்த அறிவிப்பினை விடுத்திருக்கின்றனர்.
குறித்த இரு அமைப்புக்களின் சார்பில் இன்றைய தினம் மாலை யாழ்.நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அ.இராசகுமாரன் கலந்துகொண்டு குறித்த அறிவிப்பினை விடுத்திருந்தார்.
மேலும் மஹிந்த ஆட்சியில் தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதளவு அழிவுகளை சந்தித்ததாகவும் அதனை மனதில் கொண்டு தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும், அடக்கப்பட்ட சிங்கள மக்களுக்கும் கிடைத்திருக்கும் ஜனநாயக சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
இதேவேளை இன்றைய தினம் நடைபெபற்றிருந்த பத்திரிகையாளர் சந்திப்பின் விரிவை இங்கே தருகிறோம்.
தமிழர்கள் ஏன் அரசியல் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும்?
இலங்கையில் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பாரம்பரியமாக நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு, சிங்கள மக்களுக்கு சமமாக அனைத்து அரசியல், பொருளாதார, உரிமைகளை பெற்று வாழும் உரிமை உண்டு. இது மறுக்கப்பட்டது மட்டும் அல்ல, தமிழ் இனத்தை அழிப்பதற்கு பல இன ஒடுக்கு முறைகள் கடந்த காலத்தில் நடை பெற்றது.
ஆனால் ஒடுக்கு முறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக போராட்டங்கள் ஆயுத முனையில் அடக்கப்பட்டதன் காரணமாக தமிழர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள்.
அப்போராட்ட முறைகளை பயங்கரவாதம் எனக் கூறி தமிழர் உரிமைகளை ஜனநாயக வழியில் கொடுப்பதற்கு புலிகள் தடையாக இருப்பதாக அரசு கூறியது.
புலிகளை அழித்து கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பதவியில் இருந்து வரும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்தும் தமிழருக்கான அரசியல் உரிமை வழங்குவதில் தடையாக எந்தப் பயங்கரவாதமும் இல்லாத போதும், யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும், அரசியல் தீர்வுக்கான எந்த ஓர் முயற்சியும் எடுக்கவில்லை.
தமிழர் தரப்பு ஒன்று தற்போதைய ஜனாதிபதியுடன் மிக இறுக்கமான உறவை கொண்டிருந்தது. எனவே அரசின் தமிழ் தோழமைக் கட்சிகளுடன் இணைந்தாவது இந்த நாட்டில் தமிழர்களின் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டு இலங்கை தீவில் நிரந்தரமான அமைதி ஏற்பட எந்;தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அனைத்துக் கட்சி மாநாட்டுக்கு தமிழ் கூட்டமைப்பு பங்குபற்றவில்லை என்பது எல்லாம் நொண்டிச் சாட்டாகும். கூட்டமைப்பு ஏற்க்கனவே பங்கு பற்றி கால இழுத்தடிப்பால் விலகிக் கொண்டது. 
இப்படிப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் பாராளுமன்ற நிறைவேற்று அதிகாரத்தையும் கொண்டிருந்த ஜனாதிபதியாலேயே தமிழர் பிரச்சினைக்கு கடந்த இரண்டு பதவிக் காலத்திலும் தீர்வு காணப்படவில்லையாயின் எதிர்காலத்தில் மீண்டும் பதவி ஏறினாலும் அவர் எதுவுமே செய்யமாட்டார் என்பது வெளிப்படையாகின்றது. 
தமிழருக்கு கிடைத்த உரிமைகளையும் பறித்த ஜனாதிபதி  2009 மே இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான எம் உறவுகளுக்கு இதுவரையில் நியாயமான முறையில் நீதி விசாரணை  எதுவும் நடத்தப்படாமை.
புலிகளின் முக்கியமான தலைவர்கள் எந்தவித தண்டனைகளும் பெறாமல் சுதந்திரமாக வலம்வரும்போது நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைத்திருக்கும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எதுவித நடடிவடிக்கையும்  மேற்கொள்ளப்படாமை. 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக்கு பல்கலைக்கழக சமூகம் மற்றும் தமிழ் கூட்டமைப்பு சிபார்சு செய்த உறுபபினர்கள் எவரையும் கவனத்தில் கொள்ளாது 14 உறுப்பினர்களையும் ஒரு அரச சார்பாக கட்சி சார்பில் நிமித்து தமிழர்களின் உயர்கல்வியையும் கலாசார விழுமியங்களை அழித்தமை.
இது பற்றி அரசுடன் கலந்துரையாடுவதற்கு கூட வாய்ப்பு கொடுக்காமை. 14 இல்  குறைந்தது ஒன்றையாவது தமிழ் மக்களின் பாரிய ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பு சார்பாக நியமிக்காத அரசிடம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எதிர்பார்க்க முடியாது.
13வது திருத்தத்தில் வடக்கு கிழக்கு இணைந்து இருந்தது. தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை ஓரளவுக்கு பூர்த்தி செய்திருந்தது. இது தற்போதைய ஜனாதிபதியின் காலத்தில் பிரிக்கப்பட்டது.
வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்று ஒரு வருடகாலம் முடிவடைந்த நிலையில், மாகாணசபையை தடைகளை இட்டு தடுத்தமை. உதாரணமாக இராணுவ பின்புல அளுநரை மாற்றுவதாக உத்தரவாதம் கொடுத்து மாற்றாமை. பிரதாம செயலாளரை முதலமைச்சரின் விருப்பிற்கு ஏற்ப மாற்றாமை. முதலைமைச்சர் நிதியத்தை தடுத்தமை. 
யுத்தம் முடிவடைந்து 5 வருடம் நீங்கியும் ஏறத்தாழ 28000 அதிகமானவர்கள் சொந்த காணிகளில் குடியேற்றப்படாமை.
யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கும் மற்றும் கிழக்கு என விசேட அபிவிருத்தித் திட்டம் சலுகைகள் எதுவும் இடம் பெறாமை.
உள்ளக குடியேற்றங்கள் மற்றும் இராணுவத்துக்கு காணிகளை எடுத்தல் அரச ஆதரவுடன் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் இடம் பெறுகின்றமை.
தமிழ் மொழிக்கு தமிழ் பிரதேசத்தில் கூட சம அந்தஸ்து இல்லாமையும் சிங்கள மொழி மற்றும் பௌத்த மதத்தின் விஸ்தரிப்பும்.
தமிழ் மக்கள் தொழில் செய்ய முடியாத வகையில் கடல் வளம் பிற பிரதேச மக்களாலும் பிறநாடுகளினாலும் எடுத்துச் செல்லப்படுதல். 
அபிவிருத்தி திட்டங்களில் பிரதேச வளங்களை பயன்படுத்தாது பிரதேச மக்களின் வருமானத்தை குன்றச் செய்தல். 
வடக்கு - கிழக்கு மக்களின் தொழில்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமை. 
தற்போதைய ஜனாதிபதியால் தேசிய அபிவிருத்தி அடைகின்றதா?
கல்விக்கு 1970 களில் GDP இல் 5-6 வீதம் ஒதுக்கப்பட்டது. தற்போது இது 1.7 - 2.5 இடைப்பட்ட வீதத்தில் இருக்கின்றது. இது கல்வி அபிவிருத்தியா? 
பொருளாதார புள்ளி விபரங்கள் யதார்த்தத்துடன் ஒத்து இருக்கவில்லை. பணவீக்கம் குறைவடந்துள்ளது என அரசின் புள்ளிவிபரம் கூறுகின்றது. ஆனால் பொருட்கள் சேவைகளின் விலைகள் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது.
2005 இல் 12 வீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 6 வீதமாம். ஆனால் 2005 இல் ரூ 72 விற்ற பெற்றேல் தற்ப்போது ரூ 150 ஆகும். வறிய மற்றும் இடைத்தர மக்களின் குறிப்பாக விவசாயிகள் பயன்படுத்தும் மண்ணெண்ணையின் விலை 2005 இல் ரூ 28.5 ஆகும். இது 2013 இல் ரூ 106 ஆகும். இலங்கையில் எரிபொருள்களின் விலை உயர்வு ஏனைய பொருட்களின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக இருக்கிறது. 
அரசியல் வாதிகளுக்கும் ஒப்பந்தகாரர்களுக்கும் அதிக நன்மையை கொடுக்கும் கார்பெற் வீதியும் நவீன துறைமுகமும் மட்டும் அபிவிருத்தி அல்ல. இவைகளால் சாதாரண மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது?
பல்கலைக்கழக நிர்வாகத்தில் முன்னரை விட அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன.எ  வேலை வாய்ப்பில் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நேர்முகப்பரீட்சைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நியமனங்களை அரசியல்மயமாக்குதல்.
இலங்கைக்கு சொந்தமான மக்களின் உரிமைகளை அடக்கி இலங்கை மக்கள் அனைவரையும் வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருதல்.
சட்டம் ஒழுங்கு, நல்லாட்சி இல்லாமை.
குடும்ப ஆட்சியை தவறாக பயன்படுத்தல். 
புதிய தலைவர் சிறந்தவரா? கடந்த காலத்தில்; வாக்குறுதிகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் எதுவும் செய்யாத தலைவர்களை விட வெளிப்படையாக எதுவும் கூறாத புதிய தலைவர், என்ன செய்யப் போகின்றார் என்ற கேள்வி எம் மக்கள் பலரிடம் இருக்கின்றது.
கடந்த 15 ஆண்டுகளாக எதுவும் செய்யாது அடக்கு முறையை அதிகரித்து தமிழ் மக்கள் மூச்சுக் கூட விட முடியாது அவர்களை அடக்கிய தலைவரை விட புதிய தலைவர் ஒருவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கி அவர்களுடன் சேர்ந்து ஆட்சியில் பங்கு கொண்டு, புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி, எமது உரிமைகளை புதிய வழியில் பெற ஏன் முயற்சிக்க கூடாது.
உரிமைகளை பெற்றோமோ, இல்லையோ, அழிவடைந்து கொண்டு இருக்கும் எங்கள் இனத்தை அழிவின் விழிம்பில் இருந்து நிலைமையை மோசமாக செல்ல விடாது தடுப்பதற்கு புதிய ஒருவருடன் நாம் ஏன் கூட்டு சேரக் கூடாது.
புதிய தலைவர் மைத்திரியானால் இலங்கைத் தீவில் சிறுபான்மை மக்களுக்கு பெரியளவில் நன்மை சேராவிட்டாலும், சிறுபான்மையினரை அழிக்க முற்படும் பேரினவாதத்தில் இருந்து அழிப்பின் வேகத்தை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தி அடுத்த நகர்வுக்கான தளத்தை அமைப்பதற்க்கு ஆட்சிமாற்றம் அவசியமாகும்.
பலமுறை வாக்களித்து, வாக்களிக்காது விட்டு ஏமாந்து அடிமைப்பட்டுப் போன தமிழினம் ஏற்க்கனவே ஏமாற்றியவர்ருக்கு வாக்ளிக்காமல் புதியவர் ஒருவரை தெரிவு செய்ய ஒன்றிணையுமாறும் தவறாது வாக்களிக்குமாறும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எமது மக்களை அன்பாக கேட்டுக் கொள்கின்றது.
தமிழ்ப் புத்திஜீவிகள், மாணவர்கள் மற்றும் பொதுநலன் விரும்பிகள் இம்மாற்றத்திற்கு கடுமையாக உழைக்குமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKbls3.html

Geen opmerkingen:

Een reactie posten