[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 11:52.35 AM GMT ]
பரிசுத்த பாப்பரசரின் வருகயை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட ஒன்றுகூடல் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் மடு திருத்தலத்துக்கு வருகை தரக்கூடிய அனைத்து பாதைகளும் தற்போது பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் அவைகளை உடனடியாக புனரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்கமைவாக சம்பந்தப்பட்ட வீதிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மன்னார் மாவட்ட பொறியியலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் மற்றும் மாவட்ட பொறியியலாளர் ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
தற்போது உள்ளக வீதிகளை செப்பனிடத் தொடங்கியிருக்கும் மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையினரை அமைச்சர் டெனீஸ்வரன் பாராட்டினார்..
அத்துடன் இந்த அனைத்து வீதிகளும் பரிசுத்த பாப்பரசரின் வருகைக்கு முன்னதாக செய்து கொடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblr4.html
தபால்காரரை தாக்கிய செந்தில் தொண்டமான்
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 12:15.32 PM GMT ]
ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் வாக்காளர் அட்டை விநியோகம் செய்து விட்டு திரும்பிய தபாற்காரர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
தபால்காரர் பெரியசாமி ஞானசேகரன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகி பதுளை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பசறை-எல்ல வீதியிலுள்ள நீர்போட் தோட்டத்தில் வாக்காளர் அட்டைகளை விநியோகித்துவிட்டு இன்று பிற்பகல் பெரியசாமி ஞானசேகரன், திரும்பி கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தனது ஆதரவாளர்களுடன் வாகனத்தில் அந்த தோட்ட பாதையில் பயணித்துள்ளார்.
அங்கிருந்து வந்துகொண்டிருந்த தபாற்காரரை கண்டதும் வாகனத்திலிருந்து இறங்கிய செந்தில் தொண்டமான், நீ என்ன பெரிய அய்யாவா, என்று கேட்டுகேள்வியில்லாமல் தபாற் காரரை கன்னத்தில் அறைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில், தபாற்காரர் எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டில் தான் விநியோகிப்பதற்கு வைத்திருந்த 35 வாக்காளர் அட்டைகளையும் தன்னுடைய கைத்தொலைபேசியையும் காணவில்லை என்று கூறியுள்ளார்.
பொலிஸார் சம்பவம்தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblr5.html
இரகசியமான நாட்டுக்கு ஏற்றப்பட்ட புதல்வர்களின் பெறுமதியான கார்கள்!– தப்பிச் செல்ல விமானங்கள் தயார் நிலையில்
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 12:23.53 PM GMT ]
தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ள ராஜபக்சவின் அடிவருடிகள் தமது பெறுமதியான ரேஸ் பந்தய கார்களை யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த 31ம் திகதியே 4 ஆடம்பர கார்களை வெளிநாட்டுக்கு ஏற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க, சமையல் எரிவாயு ஒப்பந்த பேரங்களுடன் சம்பந்தப்பட்ட இரண்டு பிரதான அதிகாரிகள் மூல கோப்புகளை எதிர்க்கட்சிக்கு கிடைக்கச் செய்து விட்டு நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் 9ம் 10ம் திகதிகளில் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமானங்கள் பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்படாமல் புளொக் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
விமான பயணச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டது என பயணிகளுக்கு கூறியே அந்த விமானங்கள் புளொக் செய்யப்பட்டுள்ளன.
விசேட குழுவொன்று நாட்டில் இருந்து செல்லவே இந்த விமானங்கள் இவ்வாறு புளொக் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblr6.html
ஐ.தே.கட்சி தலைமையக முற்றுகை! மங்கள சமரவீரவை கைது செய்யும் முயற்சியா?
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 01:02.08 PM GMT ]
தேர்தல் ஒன்று நடைபெற உள்ள சந்தர்ப்பத்தில் புலனாய்வு பிரிவினர் அரசியல் கட்சி ஒன்றின் தலைமையகத்தை முற்றுகையிட முயற்சித்தமை இலங்கையின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
குடும்ப மரம் என்ற புத்தகம் ஒன்று அச்சிடப்பட்டமை தொடர்பாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தை சோதனையிட முயன்றதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், குடும்ப மரம் புத்தகத்தை ஆக்கிய மங்கள சமரவீரவை எப்படியாவது கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் டி.ஆர். எல். ரணவீரவுக்கு நேரடியாக உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையில் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் 8 தேடுதல் அனுமதிகளை நீதிமன்றத்திடம் இருந்து பெற்றுக்கொண்டிருந்தார்.
கோட்டை நீதவான் திலின கமகே இந்த தேடுதல் அனுமதியை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நீதவானுக்கு ராஜபக்ஷ குடும்பத்திருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் புலனாய்வுப் பிரிவு! கோத்தாவின் வெறியாட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்குள் புலனாய்வுப் பிரிவினரைக் கொண்டு சோதனையிட முயன்ற கோத்தபாய ராஜபக்ஷவின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பணிப்புரையின்பேரில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் டீ.ஆர்.எல். ரணவீர இதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருந்தார்.
கோட்டை நீதவான் திலிண கமகே விடுமுறையில் இருந்த நிலையில், புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நேரடியாக அவர் முன் ஆஜராகி ஸ்ரீகொத்தா உள்ளிட்ட ஒன்பது இடங்களை சோதனை செய்வதற்கான உத்தரவைப் பெற்றுள்ளார்.
சோதனை நடவடிக்கைக்காக புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி உத்தரவு பெற்றுக் கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்று கூறப்படுகின்றது.
இதனையடுத்து ஸ்ரீகொத்தாவை பெரும் பொலிஸ் படை முற்றுகையிட்ட போதிலும், அங்கு குவிந்திருந்த ஊடகவியலாளர்களை மீறி உள்நுழைய முடியாமல் திணற நேரிட்டுள்ளது. அத்துடன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறிய பொலிசார் தமது நோக்கத்தை கைவிட்டு திரும்பிச் செல்ல நேரிட்டுள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஊழல்களை அம்பலப்படுத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள பவுல்கச (குடும்பமரம்) என்ற புத்தகம் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட தரப்பினரை கடும் ஆத்திரக்குள்ளாக்கியுள்ளது.
இதில் ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஊழல்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே குறித்த புத்தகங்களை கைப்பற்றி அழிப்பதுடன், அதனை வடிவமைத்த நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவையும் கைது செய்யும் நோக்கிலேயே ஸ்ரீகொத்தா நோக்கி புலனாய்வுப் பிரிவினர் ஏவி விடப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblr7.html
அதாவுல்லா கட்சி முக்கியஸ்தர் மைத்திரி அணியில் இணைவு! நொண்டிக் குதிரையானது கட்சி
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 01:34.40 PM GMT ]
அமைச்சர் அதாஉல்லா தரப்பைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் தற்போது இணைந்து கொண்டுள்ளார்.
பொலநறுவை தம்பாளையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் வைத்து பொது வேட்பாளர் மைத்திரியின் மேடையில் ஏறிய ஆரிப் சம்சுத்தீன், மைத்திரி ஆட்சியை உருவாக்குவதற்கான தனது பகிரங்க ஆதரவை தெரிவித்துள்ளார்.
கல்முனையைச் சேர்ந்த முன்னாள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான தூதுவருமான சட்டத்தரணி மர்ஹூம் சம்சுதீனின் புதல்வரான ஆரிப் கடந்த மாகாண சபைத் தேர்தல் மூலம் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவானார்.
அதற்கு முன்னதாக சுனாமி நிவாரணக் குழுவிலும் அங்கத்துவம் வகித்து, அதன் மூலம் தனது செல்வாக்கை பொதுமக்கள் மத்தியில் வளர்த்துக் கொண்டிருந்தார்.
அதன் மூலம் அமைச்சர் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
எனினும் தற்போதைய நிiயில் அமைச்சர் அதாஉல்லா தொடர்ந்தும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கும் போக்கு முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து ஆரிப் சம்சுத்தீன் கட்சி மாறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblsy.html
கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கு மக்களுக்கு சுவிஸ் எழுகை அமைப்பு வெள்ள நிவாரண உதவி
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 02:35.39 PM GMT ]
கிளிநொச்சி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு புலம்பெயர் உதவி அமைப்புக்கள் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க நிவாரணப் பொதிகளை வழங்கி வருகின்றனர்.
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க சுவிஸ் எழுகை அமைப்பு பெறுமதி வாய்ந்த நிவாரண பொதிகளை வழங்கி வந்துள்ளது.
இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேல் பெறுமதியுள்ள நிவாரண பொதிகளை வழங்கியுள்ளது.
இதன் இன்னொரு கட்டமாக இன்று கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கில் நூற்றுக்கு மேற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண பொதிகளை சுவிஸ் எழுகை அமைப்பு வழங்கியுள்ளது.
இந்த நிவாரணம் வழங்கும் பணிகளில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலநாதன், கட்சியின் மத்திய குழுவை சேர்ந்த ஜெயக்குமார், ஆனந்தபுரம் கிழக்கு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாராட்சி கிழக்கு அமைப்பாளர் சூரியகாந் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKbls0.html
மகிந்தவா... மைத்திரிபாலவா? - இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 02:48.53 PM GMT ] [ விகடன் ]
இலங்கையில் தேர்தல் திருவிழா ஆரவாரத்துடன் நடந்து வருகிறது. பல லட்சம் உயிர்களை கொன்று குவித்து தமிழர் பகுதிகளை சுடுகாடாக்கிய இலங்கை அதிபர் ராஜபக்சவை எதிர்த்து ஓரணியில் திரள ஆரம்பத்திருக்கின்றன.
அங்குள்ள எதிர்க் கட்சிகள். முன்னர், ராஜபக்ச அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறீசேன, அனைத்துக் கட்சிகளாலும் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
தேர்தல் நெருக்கத்தில், ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தூதுவிட்டு காத்திருந்தனர்.
ராஜபக்ச அமைச்சரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பிக்கள் இருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களுடனான உறவு சுமுகமாகவே இருக்கும் என்று எண்ணியது ராஜபக்ச தரப்பு.
ஆனால், மைத்திரிபால சிறீசேன பொது வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே ராஜபக்ச அமைச்சரவையில் அங்கம் வகித்த தமிழ் எம்.பிக்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து ராஜபக்சவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தனர்.
மேலும், மைத்திரிபால சிறீசேனவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தனர். அதை ராஜபக்ச எதிர்பார்க்கவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை ராஜபக்சவை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
''யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இன்னும் மறு குடியமர்த்தம் செய்யப்படவில்லை. அவர்களுக்கு வீடுகளோ வாழ்வாதாரங்களோ பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
மாறாக, ஆயிரக்கணக்கான தனியார் காணிகளை ராஜபக்ச அரசு ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.
வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு உணவும் இல்லை. பாதுகாப்பும் இல்லை. சுயமரியாதையும் இல்லை. பெண்களும் பிள்ளைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
ராஜபக்ச அரசு தமிழ் மக்களுக்கு மோசமான துன்பங்களையும் துயரங்களையும் மட்டுமே வழங்கி உள்ளது. இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தும் குழுக்களுக்கு ஊக்கமளித்து வேடிக்கை பார்க்கிறது.
இன்னமும் தான் நடத்திய இன, மத வன்செயல் தாக்குதல்களுக்கு நியாயம் கற்பிக்கிறது. 'நிறைவேற்று’ அதிகாரம் படைத்த ஜனாதிபதி முறையினால் இலங்கையில் நீதித்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களும் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலை உள்ளது. ராஜபக்சவின் அரசாங்கத்தில் நாடாளுமன்றம் மதிப்பிழந்து போய் உள்ளது.
பணத்தைக் காட்டி எதிர்க் கட்சி உறுப்பினர்களை தன்பக்கம் இழுத்து, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்தைப் பெற்று அதனைப் பயன்படுத்தி நாட்டுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன் விளைவாக இன்று எமது நாடாளுமன்றம் ஜனாதிபதியின் கைப்பொம்மையாக மாறிக்கிடக்கின்றது.
அரசியலமைப்பின் 17-வது சட்டத்திருத்தத்தை மாற்றியதன் மூலம், உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், நீதிச் சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு, கணக்காய்வாளர், நாயகம் போன்ற உயர் பதவிகளுக்கு தாம் விரும்பியவர்களை நியமிக்கும் சர்வாதிகாரத்தை இந்த ஜனாதிபதி பெற்றுள்ளார்.
இது நாட்டுக்கு மிகப்பெரிய கேட்டையும் ஆபத்தையும் விளைவிக்கும். இந்த அமைப்பு முறை ஊடகங்களுக்கும், சிவில் அமைப்புகளுக்கும் தகவல் பரிமாறும் சுதந்திரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.
ராஜபக்ச அரசாங்கம் எப்போதும் தமிழர்களுக்கு பாதகமாகவே செயல்பட்டு வந்துள்ளது. இந்தத் தேர்தல் மூலம் 'நிறைவேற்று’ அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறையை ஒழித்து, 18வது சட்டத் திருத்தத்தை நீக்கி, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் உன்னத நோக்கத்தில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு களம் இறங்கி உள்ளது.
எங்கள் கருத்துடன் ஒத்த கருத்துடைய பொது எதிரணி வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கிறோம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷே அரசை தோற்கடிக்க வேண்டும்'' என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டார்கள்.
இதுகுறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் பேசினோம். ''எங்கள் மனதுக்குள் இருந்த கருத்துகளைத்தான் அந்த அறிக்கை பிரதிபலிக்கின்றது. ராஜபக்ஷேவை எதிர்த்துப் போட்டியிடும் மைத்திரிபால சிறீசேனவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறோம்.
அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதனை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கின்றோம். மாற்றத்துக்கான தேர்தலாக இது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேர்தல் வரவிருப்பதால் தமிழர்கள் மீது ராஜபக்சவுக்கு திடீர் அக்கறை பிறந்துள்ளது.
யுத்தம் முடிந்த பிறகும் இலங்கையின் உண்மை நிலையை உலகத்துக்கு மறைத்தது எதனால்? மனித உரிமைகளை நிலைநாட்டி தமிழர்கள், சிங்களவர்கள் என்ற வேற்றுமைகளைக் களைந்து இந்து, முஸ்லிம் என்ற பாகுபாடில்லாமல் அனைத்து மக்களும் சரிசமமான ஆட்சி அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். ராஜபக்சவுக்கு மாற்றாக மைத்திரிபால் சிறீசேன இருப்பார் என் நம்புகிறோம்'' என்றார் அவர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பிரதான எதிர்க் கட்சியான ரணில் விக்கிரமசிங்காவின், 'ஐக்கிய தேசிய கட்சி’ உட்பட 49 கட்சிகளின் ஆதரவோடு களத்தில் இறங்கியிருக்கிறார் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறீசேன.
இலங்கை அரசியல் வரலாற்றிலேயே ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியிலிருந்து 25 உறுப்பினர்கள் விலகி எதிர்க் கட்சிக்கு தாவியது இதுதான் முதல் முறை. இதனால், நாளுக்கு நாள் மைத்திரிபால சிறீசேனவின் ஆதரவு வட்டம் விரிந்துகொண்டே செல்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பிரசாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றன.
வவுனியாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்திலும் பேசிய மைத்திரிபால சிறீசேன, ''இத்தனை ஆண்டுகளில் ராஜ்பக்ஷேவின் குடும்பம் பெருமளவில் பயன் அடைந்திருக்கிறது. இந்த நிலை, முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டு மத வழிபாட்டுக்கான சுதந்திரமும், பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படும். அதிகார வெறியில் திளைத்து, ஊழலில் மலிந்து மோசடிகளை தடுப்பதற்காக ஜனாதிபதியின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளாக குறைக்கப்படும்'' என்று சூளுரைத்திருக்கிறார்.
தேர்தல் தேதி நெருங்க நெருங்க இலங்கை அதிபர் ராஜபக்சவின் கூடாரம் காலியாகி வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKbls1.html
Geen opmerkingen:
Een reactie posten