[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 03:30.25 AM GMT ]
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்தும், அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருணாநிதி பதில் அளித்தார்.
"தமிழகத்தில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை கட்டுப்படுத்த முடியாமல் இருக்குமேயானால், அதைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள், கட்டுப்படுத்துவார்கள்.அது அவர்களுடைய கடமை.
அவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என்று நீங்கள் கேட்கிறீர்கள். எதிர்பார்ப்பதில் தவறில்லை" என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும்படி குடியரசுத் தலைவரிடம் மனு கொடுக்க திமுக திட்டம்?
தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை காரணமாக வைத்து ஆட்சியை கலைக்கும்படி தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரிடம் மனு கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளது.
இதற்காக கடந்த 10 நாட்களில் தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்த புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் அவசரக் கூட்டத்தை கட்சித் தலைமை கூட்டியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் இன்று கூட்டம் நடக்கிறது.
இதில் பங்கேற்கவரும் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தில் கடந்த 27-ம் திகதி முதல் நடந்த சம்பவங்கள், போராட்டங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்த புள்ளிவிவரங்களுடன் வரும்படி கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
முடிந்தவரை கூட்டத்துக்கு முன்னதாகவே இந்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும் உத்தர விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், “தமிழகத்தில் அரசியல் சட்டப்படி எதுவும் நடக்கவில்லை. சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்து விட்டதால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டும் என்று ஆளுநர், குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோரிடம் மனு கொடுக்க உள்ளோம்.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது, கருணாநிதி, ஸ்டாலின் அமைதியாகத்தான் இருந்தனர்.
அதிமுகவினர்தான் அவர்கள் வீட்டில் தாக்குதல் நடத்தினர். ஆனால், தேவை இல்லாமல் கருணாநிதி, ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்” என்றனர்.
இதற்கிடையே, தமிழக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை திரட்டவும் திமுக தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே வைகோ வீட்டுக்கு அருகில் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்ததை கண்டித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.
தமிழக அரசுக்கு எதிரான மனநிலை யில் இருக்கும் தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், பாஜக ஆகிய கட்சிகளையும் ஒருங்கிணைக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழக சட்டம் - ஒழுங்கை சீரமைக்க மத்திய அரசு தலையிட வேண்டும்: திமுக தீர்மானம்
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீரமைக்க மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கைது செய்யப்பட்ட நாள் முதல் தமிழகத்தில் நடந்து வரும் வன்முறை வெறியாட்டங்களை திமுக கடுமையாகக் கண்டிப்பதோடு, மத்திய அரசு உடனடியாக இதிலே தலையிட்டு இத்தகைய அராஜகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திட முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்தின் விபரம்:
கடந்த 27-9-2014 அன்று அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதா மற்றும் அவருடன் சேர்ந்த ஒரு சிலர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்தது தொடர்பாக 17 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, தமிழகத்தில் எப்படிப்பட்ட அராஜகங்கள், ஆணவச் சேட்டைகள், வன்முறைச் செயல்கள், ஆர்ப்பாட்டங்கள் சட்டத்தின் ஆட்சி என்பதையே கேலிக்குரியதாக்கும் வகையில் நடைபெற்று வருகின்றன என்பதைத் தமிழ்நாடு மிகுந்த கவலையோடும், கனத்த இதயத்தோடும் அன்றாடம் கண்டு வருகிறது.
குறிப்பாக நடுநிலையாளர்களும் பத்திரிகை தர்மம் பேணும் ஏடுகளும் வரவேற்றுப் பாராட்டும் இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி குன்ஹாவைப் பற்றியும், கழகத் தலைவர் கலைஞரைப் பற்றியும் எந்த அளவுக்குக் கடுமையான முறையில் விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்குக் காட்டுமிராண்டி மொழியில் சுவரொட்டிகளை அச்சடித்து ஒட்டுவதோடு, தேவையில்லாமல் தி.மு.கழகத்தை வம்புக்கு இழுக்கின்ற வகையில் கழகத் தலைவர் கலைஞரின் கொடும்பாவியைக் கொளுத்துவதாக அறிவித்துக் கொண்டு அப்படிப்பட்ட அநாகரிகமான காரியங்களிலே அ.தி.மு.க. வினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாகக் கூறிக் கொண்டு, காவல் துறையினரிடம் முறைப்படி அனுமதி பெறாமல், தாங்கள் நினைத்த இடங்களில் எல்லாம் நூறு பேர் இருநூறு பேர் கூடிக் கொண்டு அந்தச் சாலை வழியாகச் செல்பவர்களுக்கு இடைஞ்சல் செய்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து வருகிறார்கள்.
மேலும் அரசுக்குச் சொந்தமான பேருந்துகளைத் தடுத்துத் தீயிட்டுக் கொளுத்துகின்ற காரியங்களிலும் ஈடுபட்டு, அரசின் பொதுச் சொத்துகளுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
பொறுப்பான நீதிமன்றத்தினால் சட்ட விதி முறைகளின்படி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, வழங்கப்பட்ட தீர்ப்பையும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக அவமதிக்கின்ற செயலில் ஈடுபட்டுப் பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்குக் குந்தகம் ஏற்படுத்துவது முறைதானா என்றெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப் படாமல், அ.தி.மு.க. வினர் சட்டத்தைத் தங்கள் கையிலே எடுத்துக் கொண்டு, வன்முறைத் தர்பாரை தமிழ்நாட்டிலே கடந்த பத்து நாட்களாகக் கட்டவிழ்த்து விட்டு, அதன் காரணமாக தமிழ்நாடே அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.
சட்ட நெறிமுறைகளை நசுக்கி அழிக்கும் அ.தி.மு.க. வினரின் இப்படிப்பட்ட சமூக விரோத நடவடிக்கைகளைத் தடுக்க முடியாத கையறு நிலையில் இருப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாடு காவல் துறையினர் ஆளுங்கட்சியினரின் செயல்களுக்கு துணை போய்க் கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். அ.தி.மு.க. வினரின் இந்தக் கொடூரத்தாக்குதல்கள் செய்திகள் வெளியிடும் நிறுவனங்களையும், பத்திரிகையாளர்களையும் விடவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஆளுங்கட்சியையும், அ.தி.மு.க. வினரையும் மனசாட்சிக்கு மாறாகப் பாராட்டி வந்த பத்திரிகைகள் எல்லாம் கூட, அவர்கள் செய்கின்ற அக்கிரமங்களை அனுபவ ரீதியாக உணர்ந்த பிறகு, இந்த வன்முறைகளைக் கடுமையாகக் கண்டித்து எழுத முற்பட்டுள்ளார்கள்.
சுருக்கமாகக் கூற வேண்டுமேயானால், தமிழகத்தில் அரசமைப்புச் சட்ட இயந்திரம் என்பது முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டது.
இன்னும் சில நாட்களுக்கு இந்த நிலை தொடர அனுமதிக்கப்படுமேயானால், பொது மக்களின் வாழ்க்கைக்கும், அவர்களின் சொத்துகளுக்கும் பொது அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு சட்டம், ஒழுங்குப் பிரச்சினை மீட்க முடியாத அளவுக்குத் தமிழகத்தில் மிகவும் மோசமாகி விடும்.
தமிழகத்திலே நடைபெறும் அ.தி.மு.க. வினரின் இந்த வன்முறை வெறியாட்டங்களை தி.மு. கழக மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடுமையாகக் கண்டிப்பதோடு, மத்திய அரசு உடனடியாக இதிலே தலையிட்டு இத்தகைய அராஜகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திட முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது என்று அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
http://www.tamilwin.com/show-RUmszATcKWmw3.html
வன்னியில் பிராந்திய அபிவிருத்தி வங்கியை திறக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 05:17.15 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த வாரத்தில் வடக்குக்கு விஜயம் செய்யும் போது இந்தக்கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் கடந்த வியாழக்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற விவசாய நிகழ்வு ஒன்றின்போது ஏற்றுமதியாளர்களின் தேசிய அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு வரும் பொருளாதார நிலையத்தை முழுமைப்படுத்தி தருமாறு அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கவும் இதன்போது முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன் வன்னி விவசாயிகளுக்காக மாங்குளத்தில் பழச்சந்தை ஒன்றை அமைத்துத்தருமாறு கோருவதென்றும் இந்த கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWmw7.html
தமிழர்கள் தமது ஆட்சியை நிறுவ இந்தியா முழு நடவடிக்கையினையும் எடுக்க வேண்டும்: உ.த.ப. இயக்கத்தின் மாநாட்டுத் தீர்மானங்கள்
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 02:50.20 AM GMT ]
ஜேர்மனி ஹம் ஆலயத்தின் யாகத்துடன் ஆரம்பமான மாநாடு கடந்த வெள்ளி, சனி ஞாயிறு தினங்களில் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பல கலை, கலாச்சார நிகழ்வுகளுடன் தமிழரின் பழமையான சஞ்சிகைகள் பத்திரிகைகள் மற்றும் பல புத்தகங்களை ஆவணங்கள் எனும் அமைப்பு ஆவணப்படுத்தியிருந்ததுடன் பல நாடுகளின் நாணயங்கள் மற்றும் இன்றைய சந்ததி அறியாத பல சரித்திர படைப்புக்களும் ஆவணப்படுத்தப்பட்டிருந்தமை பலரதும் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிகழ்விற்கு வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உட்பட பல புத்திஜீவிகளும் இக் கண்காட்சியை பாராட்டியமை குறிப்பிடத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் உலகெங்கும் 50க்கும் அதிகமான நாடுகளில் கிளைகளில் இருந்து வருகை தந்த அரசியல் பிரமுவர்கள் கல்வித் துறைசார் பேராசிரியர்கள் அடங்கலாக இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் ஹம் ஆலயத்தின் வழிபாட்டுடன் இரண்டாம் நாள் நிகழ்வுகளை ஆரம்பித்தனர்.
இம் மாநாட்டில் பழைமையான பத்திரிகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல உரைகளும் இடம்பெற்றதுடன் ஜேர்மனி நாட்டின் மாகாண மட்ட அரசியல் பிரமுகர் ஒருவரும் இம் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எதிர்காலத்தில் தமிழை பலமுள்ள மொழியாக மாற்ற அனைவரும் ஒருமித்து உழைக்க வேண்டும் என்கிற பலமான கருத்து இம் மகாநாட்டில் ஓங்கி ஒலித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மாநாட்டின்போது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தினால் தீர்மானங்கள் வெளியிடப்பட்டன.
அவை பின்வருமாறு,
1.இலங்கைத் தமிழர் தம் சொந்த தாயகத்தில் வாழுவதற்கும் ஆளுவதற்கும் தமிழ் மொழி, கலை, கலாச்சாரங்கள் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் வாழும் நிலம் தமிழர் நிலமாக இருக்க வேண்டும். அவை பாதுகாக்கப்பட வேண்டும். தமிழர் ஆட்சியை தமிழர் நிலத்தில் நிறுவுவதற்கு சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா முழு நடவடிக்கையினையும் எடுக்க வேண்டும். என்பதுடன் அவர்களின் போராட்டங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களும் சர்வதேச நாடுகளும் ஆதரிக்க வேண்டும் என இம்மாநாடு அறைகூவல் விடுக்கின்றது.
இலங்கையில் வாழும் தமிழர்கள் பூரண உரிமையுடன் வாழ இம்மாநாடு தனது பூரண ஆதரவையும் உதவிகளையும் வழங்க வேண்டுமென தீர்மானம் மேற்கொள்கிறது..
2. உலகலாவும் வாழுகின்ற மக்களுக்கென பொதுத் தமிழர் வங்கி ஒன்றினை ஆரம்பிப்பதற்கு இம்மாநாடு சிபாரிசு செய்கிறது.
3. புலம்பெயர் தமிழர்களிடையே பொதுவான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என இம்மாநாடு அறை கூவல்விடுக்கின்றது.
4. உலக நாடுகளில் தமிழர்கள் வாழும் நாடுகளில், தமிழர் குடியேற்றத்திற்கான நினைவுத் தூபி நிறுவப்பட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
5.தமிழர் வாழும் நாடுகளிலெல்லாம் தமிழர் கலை, கலாச்சார பண்பாட்டு, விழுமியங்களை பிரதிபலிக்கும் ஊர்தி, ஊர்வலம், தமிழர் மரபு மாதமான தை மாதத்தில் நடத்தப்பட வேண்டுமென இம்மாநாடு தீர்மானம் எடுக்கிறது.
6.தமிழர் மரபு விளையாட்டுக்களை வளர்க்கவும், தமிழர் மரபு அடையாளங்களை சேகரிக்கப்பட வேண்டுமென இம்மாநாடு தீர்மானம் எடுக்கிறது.
7. புலம்பெயர் தமிழர் மத்தியில் தமிழ்ப் பணி செய்யும் தமிழ் புரவலர்களை அடையாளம் கண்டு, தமிழர் மத்தியில் புதிய ஆய்வுகள் மேற்கொண்டு தமிழ் சமுதாயத்திற்கு சிறப்புச் செய்யும் தமிழர்களை அடையாளம் கண்டு, தமிழர் விருது விழா ஒன்றை நடாத்தி அவர்களைக் கௌரவம் செய்ய வேண்டுமென இம்மாநாடு தீர்மானம் எடுக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWmw0.html
Geen opmerkingen:
Een reactie posten