தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 oktober 2014

நிலச்சரிவு அனர்த்தத்திற்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்த முயற்சி: ஜே.வி.பி குற்றச்சாட்டு



மண்சரிவு இயற்கை அனர்த்தம் - தேசிய துக்க தினத்தை அறிவிக்க நடவடிக்கை
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 07:08.43 AM GMT ]
பதுளை மாவட்டம் ஹல்துமுல்லை மீரியபெத்த பிரதேசத்தில் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தை தொடர்ந்து தேசிய துக்கத் தினத்தை அறிவிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
இது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட உள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.பீ. அபேகோன் தெரிவித்துள்ளார்.
சுனாமி அனர்த்ததிற்கு பிறகு இலங்கையில் ஏற்பட்ட மிக கோரமான இயற்கை அனர்த்தமாக இந்த நிலச்சரிவை கருத முடியும்.
மண்சரிவு அனர்த்த நிவாரணப் பணிகள்! விசேட அமைச்சரவை கூட்டம்
கொஸ்லாந்தை மண்சரிவு நிவாரணப் பணிகள் தொடர்பான விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இன்று மாலை நடைபெறவுள்ளது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று மாலை நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு, சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற விடயங்கள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும் தற்போது வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு மாற்று குடியிருப்புகள் வழங்கப்படும் வரை தற்காலிக வசிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கான நிதியுதவி குறித்தும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது.
ஹட்டனில் துக்கம் அனுஷ்டிப்பு
கொஸ்லாந்தை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு அனர்த்தத்தைத் தொடர்ந்து ஹட்டன் பகுதியில் உள்ள முச்சக்கரவண்டியிலும் கடைகளிலும் வெள்ளை மற்றும் கறுப்பு கொடிகளை பறக்க விட்டு தமது துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkt3.html

நேற்றைய மலைக்காற்றில் தோற்றுவிட்ட என் கவிதை
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 07:36.20 AM GMT ]
நேற்றைய மலைக்காற்றில் தோற்றுவிட்ட என் கவிதை
தேயிலை பச்சை நிறம்
செந்தமிழர் ரத்தமடா
முன்னாளில் ஒரு பாவலன் பாடிற்றான்
உண்மைதான்
நேற்றைய மலைக்காற்றில்
தோற்றுப்போய்விட்டன என் காதல் கவிதைகள்
தள்ளி நின்று பார்க்கையிலே
மலைச்சாரல்களில் குந்தியிருந்து கும்மியடிக்கும்
என் கவிதைகளுக்கு
மீரியபெத்தவில்
கண்ணீர் பரிசொன்றை மலையாள் கொடுத்தாளே!
ஒரு சின்னக்கிராமம் கல்லறையான கதையை
காலத்தில் எழுதிவைக்கும் சாபம்.
ஐயகோ!
கொழுந்துபறிக்கும் எம் குலத்துக்கு இப்படியுமா இடிவீழும்
நூற்றாண்டுகளாய்
வாழவைப்பாயென்று  நம்பி
குறிஞ்சி நிலத்தில் குந்திய எம் சொந்தங்கள் மேல்
மலை வெறிகொண்டதே!
தொட்டிலும் கட்டிலும் இடுகாடும்
எல்லாமும் லயன்களாய் முடிந்தது.
இப்படித்தான் முன்பொருகால்
கணப்பொழுதில் ஆயிரக்கணக்காய் சுனாமி
சுருட்டிச்சென்றது எம் கனவுகளை
எப்படி ஆறும் நெஞ்சு.
கடலின் அலையிலும்
மலையின் நதியிலும்
இளைப்பாறச்செல்லும்  மனதுகளுக்கு
இனி எது அமைதியின் சந்நிதி.
விண்ணைத்தோண்டினாலும்
விடைபெற்ற உயிர்களை இனி சந்திக்க முடியாதென்று
எந்தச்சமாதியில் சத்தியம் செய்து வந்தான் காலன்.
மண்ணென்றால்
மரிக்கவும் சித்தமான எம் இனத்தின் மேல்
என்ன நியாயத்தில் இடிந்துவிழுந்தாய் மலையே!
குன்றுகளின் நட்டுவைத்து
கொழுந்து பறித்துக் கிடைக்கும் கூலியில்
பொங்கிப்படைத்து புளகாங்கிதம் அடைந்த
காளியும் சூலியும் ஆத்தாளும்
குறி சொல்லிக்கு ஏன் சொல்லவில்லை
மலை இடியுமென்று.
ஏழைகளை கடவுளும் ஏமாற்றப்பழகிவிட்டாரென
புதிய பதிகத்தை பாடித்தொலைக்கவா!
இன்னும் விடியாத மலையகத்தில்
இருளின் கூத்தையும் காமன் கூத்தோடு சேர்த்து இனி ஆடிவையுங்கள்.
ஒற்றைக்கல்லறையில்
ஓராயிரம்பேரை நினைத்து கட்டி அழுகிற தலைவிதி
இன்னும் தமிழர்க்கு தொடர்கதைதான்.
மலைகளின் கீழ் கணப்பொழுதில்
அடங்கிப்போன ஆத்துமாக்கள் கடைசிநேரத்தில் சொல்ல
வார்த்தைகள் இருந்திருக்குமா!
மலையின் வர்ணம் கறுப்பென்று கத்தியிருப்பார்களா!
கடவுளோடு சேர்ந்தே புதைகின்றோம்
கவலைப்படவேண்டாமென ஆறுதலை
புதைபொருளில் கிறுக்கியிருப்பார்களா!
விடியாத வாழ்வு எப்படி முடிந்தாலென்ன என்று
விம்மியிருப்பார்களா!
கிள்ளுகிற தேயிலையாய் துளிரோம்
வெல்லுகிற வில்லாய்  முளைப்பொமென
சபதமிட்டிருப்பார்களா!
என்ன நினைத்திருக்கும் எங்கள் இதயஜீவன்கள்
சொல்லு மலையே சொல்!
கடைசியாய் கண்டவை
லயன்களின் துருப்பிடித்த கூரைத்தகடுகள்
நெடுங்காலம் வர்ணம் பூசப்படாத பழைய சுவர்கள்
பழந்துணிகள்
மலையில் பிறந்து மடிந்த மனிதர்களின் வெளிறிய புகைப்படங்கள்
கூலிக்கணக்கு துண்டுகள்
கங்காணியாரின் சில கடிதங்கள்
கடவுளே!
தேடுகின்றேன் எங்கே  அவர்களின் கனவுகள்!
இலங்கை வரைபடத்தில் குறித்து கொள்ளுங்கள்
பதுளை கொஸ்லாந்தை மீரியபெத்தையில் கண்ணீர் ஆறு ஓடுகின்றது.
ஓ! மலையின் மாந்தர்களே!
உங்கள் மரணத்தின் பின் இனி ஆயிரம் அறிக்கைகள் விவாதங்கள் இரக்கங்கள்......
ஏன் எதற்கு எப்படி.....
உங்களை வைத்து திரைப்படங்கள் சிறுகதைகள் நாவல்கள் கவிதை தொகுப்புகள்........
இன்னும் ஏராளம் நிகழும்
மீண்டும் மண் தின்னக்காத்திருக்கும் கிராமங்களை தேடவோ
நெடுந்துயரை தரக்காத்திருக்கும் காலங்களை கணக்கிடவோ
லயன்களின் வாழ்வில் இருந்து மாற்றியெழுதவோ
ஆபத்பாந்தவர்கள் வருவார்களா?
வருவார்கள்
பச்சை மலைகளின் இடையில்
நதிக்கரைகளில்
தேயிலைத்தோட்டங்களில்
நெடுதுயர்ந்த மலைச்சோலைகளில்
வளைந்து வளைந்து செல்லும் வீதிகளில்
அலைந்துகொண்டிருக்கும் உங்கள் ஆத்துமாக்களை வைத்து
அரசியல் நடத்தவும்
கனவுகளை மூடிக்கட்டிய நினைவுதூபிகளில் மாலையிட்டு
உங்கள் மனதுகளுக்கு வெள்ளையடிப்பதாய் கொள்ளையடிக்கவும்
வருவார்கள்!
எதுவரை நீளும் உங்கள் நூற்றாண்டுத்துயர்கள்!
கொழுந்து பறிப்பதோடு எங்கள் வாழ்வு முடிந்ததென்று
நீங்கள் எப்படி நினைக்க முடியும்
மலை உங்கள்மீது சரிந்ததென்று அறிந்தவுடன்
நெஞ்சிலடித்து நெடுஞ்சாணாய் விழுந்து
உங்கள் பெயர்களை கண்ணிலொற்றிக்கதறுகிறாள்
காதுகிழிந்து கிழவியொருத்தி வன்னி மண்ணிருந்து.
உன் முப்பாட்டன் அடி
மதுரையில் இருந்தோ
மன்னார் குடியிலிருந்தோ
நீலமங்கலத்திலிருந்தோ மன்றாடுகின்றது கடவுளை
மண்ணை பெயர்த்துக்கொண்டு உங்களை உயிருடன் ஏந்தி ஒரு தேவதை எழுமாட்டாளா என்று.
தனித்திருப்பதாய் நீ நினைக்காதே மலையகமே!
உனக்காக உருகி நிற்கின்றது தமிழினம்
இந்தியா வம்சாவழி என்றும்
மலையக சமுகம் என்றும்
உங்களை கூறுபோட்டு நாறல் அரசியல் நடத்துகின்ற நரிகளின் கையில் அல்ல உலகம்
நீயும் நானும் நாம் தமிழர் என நினைக்கின்ற நட்புரிமையில்தான் உருள்கின்றது நமக்கான உலகம்
இதை புரிந்துகொள்ளும்வரை
மண்மூடுகின்றவராய்
மலை தின்கின்றவராய்
கைகட்டுகின்றவராய் கைதட்டுகின்றவராய் எங்கள் காலம் முடியும்.
கனவுளோடு உலவிய எம் கங்கைகளை காவு கொண்டுவிட்டாய்
மலையாளே!
நெடுங்காலமாய் உனைபற்றி நெஞ்சில் பதிந்துவைத்த பசுமை நினைவுகளை ஒரு நொடிப்பொழுதில் உருக்குலைய வைத்துவிட்டாய்
எந்த முகட்டில் இருந்து என் சொந்தங்களுக்கான அற்புதமான அசரீரி கேட்கும்! சொல்!
அங்கே உயிர் கொடுக்கவும் தயார்.
-பொன்.காந்தன்-
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkt5.html
நிலச்சரிவு அனர்த்தத்திற்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்த முயற்சி: ஜே.வி.பி குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 09:07.28 AM GMT ]
ஹல்துமுல்லை, கொஸ்லாந்த பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு அனர்த்தம் தொடர்பான பொறுப்பை பாதிக்கப்பட்ட மக்கள் மீது சுமத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜே.வி.பியின் அரசியல் சபை விடுத்துள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஹல்துமுல்லை கொஸ்லந்த, மீரியபெத்த கிராமத்தில் நேற்று காலை ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு காரணமாக 10க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த சோகத்தை தெரிவித்து கொள்ளும் நாம். காயமடைந்தவர்கள் சீக்கிரமாக குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.
அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்பதுடன் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் இருக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
நிலச்சரிவு என்பது இயற்கை அனர்த்தம் என கருதினாலும் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தால், உயிர் சேதங்களை குறைத்திருக்க முடியும்.
2004 மற்றும் 2011 ஆண்டுகளில் மீரியபெத்த பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் இதனால் அங்குள்ள மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறும் பிரதேச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தாக அரசாங்கத்தின் சுரங்கம் மற்றும் ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆலோசனைகள் எதுவும் செயற்படுத்தப்படவில்லை என்பதையே இந்த அனர்த்தம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே அப்பிரதேசம் ஆபத்தானது என்பதால் அங்கிருந்து வெளியேறுமாறு மக்களுக்கு ஏற்கனவே அறிவித்திருந்தாக அரசாங்கத்தின் பல தரப்புகள் தெரிவித்துள்ளன.
ஏற்பட்ட அனர்த்தத்திற்கான பொறுப்பை மண்ணில் புதையுண்டு போன மக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். எனினும் இவ்வாறு கூறி அரசாங்கம் தனது பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது.
மக்களை அப்பிரதேசத்தில் இருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்திருந்தாலும் அவர்களுக்கு செல்வதற்கு வேறு இடமில்லை.
பாதுகாப்பற இடத்திலிருந்து மக்களை பாதுகாப்பான இடம் என அடையாளம் காணப்படும் இடத்தில் நிரந்தரமாக குடியேற்றுவது தமக்குரிய பொறுப்பு என்பதை பொறுப்பு வாய்ந்தவர்கள் உணராதது ஆச்சரியமான விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkt7.html

Geen opmerkingen:

Een reactie posten