தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 oktober 2014

நெல்சிப் திட்டத்தில் 100 மில்லியன் ரூபாய் கொள்ளை: த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு

மண்சரிவு அபாயம்: நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்க​ள் இடம்பெயா்வு
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 11:53.17 AM GMT ]
தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவகலை தோட்டப் பகுதியில் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் 80ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 300 பேரை தங்ககலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த தோட்டப்பகுதிக்கு மேலே மலைப்பகுதியில் ஒரு பாரிய கல் ஒன்று கீழே விழும் அபாயத்தில் இருப்பதனால் இதனை அறிந்து தேசிய கட்டிட நிர்மான ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய இவர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவித்தார்.

குறித்த மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களையும் உணவு வகைகளையும் நிவாரண உதவிகளையும் வழங்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சும், தோட்ட நிர்வாகமும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவில் மண்சரிவு அபாயம்! 150 குடும்பங்கள் வெளியேற்றம்
நுவரெலியாவில் மண் சரிவு அபாயம் நிலவும் பிரதேசங்களிலிருந்து 150 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
தேசிய கட்டட நிர்மான ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு 150 குடும்பங்கள், தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற்றயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்காலிக அடிப்படையில் ஆபத்து நிலவக் கூடிய அபாயம் காணப்படும் பிரதேசங்களில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நுவெரலியா, ராகலை தியனில்ல மற்றும் கொத்மலை வௌன்டன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 150 குடும்பங்கள் இவ்வாறு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் பீ.ஜீ. குமாரசிறி தெரிவித்துள்ளார்.
தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அனர்த்த நிவாரணப் பிரிவின் ஊடாக உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மண் சரிவு மற்றும் பாரிய கற்கள் சரிந்து விழக் கூடிய அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து குடும்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.
பதுளை ஹல்துமுல்ல கொஸ்லந்த மீரியபெத்த என்னும் இடத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுவரெலியா மாவட்ட குடும்பங்கள் தற்காலிகமாக இடம் நகர்த்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு பிரதேசங்களில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு அபாயம் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீரியபெத்த மண்சரிவினால் 63 வீடுகளுக்கு சேதம்
கொஸ்லாந்த, மீரியபெத்த மண்சரிவினால் 63 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மண்சரிவினால் 148 பேர் வரை மண்ணில் புதையுண்டிருக்கலாம் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகின்றார்.
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 808 பேர் பாதுகாப்பான இரண்டு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ வசதிகள், நீர், உணவு போன்ற மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
இதன்பொருட்டு இடர் முகாமைத்துவ அமைச்சினால் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்களின் கண்காணிப்புடன் நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
மீரியபெத்த பகுதியில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களை சேர்ந்த சுமார் 330 பேர் வாழ்ந்தமை தொடர்பில் தமக்குப் பதிவாகியுள்ளதாகவும் இடர்முகாமைத்துவ நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, கொஸ்லாந்த, மீரியபெத்த மண்சரிவின் காரணமாக அநாதரவான சிறுவர்கள் குறித்து 1 9 2 9 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுபோன்ற பேரழிவுகளின்போது சிறுவர்களை கடத்திச் செல்லல் உட்பட பல்வேறு துஷ்பிரயோகங்கள் இடம்பெறக்கூடும் என்பதால், பாதிக்கப்பட்ட பிள்ளைகள் குறித்து தகவல்களை சேகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை குறிப்பிடுகின்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் குழுவொன்று மண்சரிவினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.




http://www.tamilwin.com/show-RUmszAQUKXkvy.html


நெல்சிப் திட்டத்தில் 100 மில்லியன் ரூபாய் கொள்ளை: த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 12:45.10 PM GMT ]
உலக வங்கியின் நிதிப் பங்களிப்புடன் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உட்கட்டுமாண திறன்களை விருத்தி செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் 100 மில்லியன் ரூபாவுக்கும்மேல் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருக்கும் த.தே.கூட்டமைப்பு, கொள்ளையர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

அவர் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த நெல்சிப் திட்டத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த ஸ்ரெயிலாதரன் என்ற பொறியியலாளர் தன்னுடைய வேலைக்கு அதிகமாக கட்டுமான வேலைகளுக்கான ஒப்பந்த கேள்வி கோரல் சபையின் தலைவராகவும் இருந்து பல ஊழல்களை செய்துள்ளார்.
வவுனியாவில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்று இலங்கையின் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற் கு வழங்கியிருக்கும் முழுமையான ஆதாரங்களுடன் கூடிய முறைப்பாட்டின் படி சுமார் 100 மில்லியனுக்கும் மேலதிகமான நிதி கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. அல்லது ஊழல் செய்யப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக ஒப்பந்த வேலைகளுக்கான கேள்வி கோரல் பத்திரங்களில், பெறுமதிகளில் மாற்றம் செய்தமை, மற்றும் உப ஒப்பந்த வேலைகளுக்காக பல மில்லியன் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டமை போன்றவற்றின் ஊடாகவே 100 மில்லியனுக்கும் அதிகளவான நிதியினை கொள்ளையடித்துள்ளார்.
இவை தொடர்பிலான முழுமையான ஆவணங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றது.
எனவே மேற்படி நெல்சிப் திட்டத்திற்குப் பொறுப்பாக இருக்க வேண்டிய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரை தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுடன், மேற்படி திட்டத்திற்காக நிதி மூலங்களை கையாண்ட பிரதம செயலாளர் மீதும் கேள்வி எழுப்பப்பட வேண்டும்.
இந்த ஊழல் நடவடிக்கையில் பிரதம செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக நாம் நம்புகின்றோம்.
குறிப்பாக மேற்படி பொறியியலாளர் 10 மில்லியன் ரூபா பெறுமதியான நிலத்தை வாங்கி, அதில் 10 மில்லியன் ரூபா செலவில் வீடு கட்டியுள்ளார்.
மேலும் தனது மனைவியின் பெயரில் 5 மில்லியன் ரூபா நிதி வங்கியில் வைப்பு செய்து வைத்திருந்ததுடன், 5 மில்லியன் ரூபா நிதியில் கார் ஒன்றும் வாங்கியுள்ளார்.
இதேபோன்று உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகியோரும் சமகாலத்தில் புதிதாக சுகபோகங்களுடன் கூடிய வீடுகளை கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
எனவே இது எவ்வாறு சாத்தியமானது? இவ்வாறு சொத்து சேர்க்கும்போதும், மேற்படி பொறியிலாளர் தனது தந்தை மற்றும் நண்பரின் பெயரில் கட்டுமான நிறுவனம் ஒன்றை உருவாக்கும்போதும், உப ஒப்பந்தங்களுக்கு மில்லியன் கணக்கில் நிதியினை பெற்றுக் கொள்ளும்போதும் இந்த உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் பிரதம செயலாளர் என்ன செய்தார்கள்?
வடமாகாணத்தில் பல லட்சம் மக்கள் முறையான வீதி, வீடுகள் இன்றி, விவசாயம் செய்ய முடியாமல், தண்ணீர், வாழ்வாதாரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் 100 மில்லியன் பணத்தை ஒருவர் கொள்ளையடிப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
உலக வங்கி வடகிழக்கு தமிழர்களுக்காக மேற்படி திட்டத்தின் கீழ் 3500 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியது.
அதில் வடக்கில் 125 வேலை திட்டங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஆனால் திட்டம் முடிக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. எனவே இதனை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
நாங்கள் நாடாளுமன்றில் இது தொடர்பில் பேசுவோம். மேலும் இந்த விடயம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் உடனடியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkv0.html


கொஸ்லாந்த அனர்த்தம் குறித்து விசாரணைக்குழு அமைப்பு: ஜனாதிபதி உத்தரவு
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 01:13.19 PM GMT ]
கொஸ்லாந்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவு அனர்த்தம் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று பொலிஸ் மா அதிபரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி, சிறப்பு விசாரணைக் குழுவொன்றின் மூலமாக மேற்குறித்த விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணித்துள்ளார்.
மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் பொதுமக்கள் முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்தார்களா, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததா, அல்லது அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து விசாரணையின் போது விசேட கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரையை அடுத்து இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் விசேட விசாரணைக் குழுவொன்றை உடனடியாக நியமித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் இந்த விசாரணைக்குழு செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten