நல்லூர் சட்டநாதர் கோயிலுக்கு அண்மையில் அமைந்துள்ள சங்கிலி மன்னன் ஆட்சிக்காலத்திலான மந்திரி மனையை மத்திய அரசு கையேற்று தொல்லியல் திணைக்களத்திடம் வழங்க வேண்டும் என்ற வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவின் பிரேரணை அடுத்த அமர்விற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் செவ்வாய்கிழமை (28) இடம்பெற்றது.
இதன்போது, பருத்தித்துறை வீதி நல்லூரில் அமைந்துள்ள சங்கிலியன் மந்திரி மனையினை மத்திய அரசு கையேற்று அதனை தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திற்கு பாரப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் பிரேரணை கொண்டு வந்தார்.
பிரேரணையை முன்வைத்து எதிர்க்கட்சி தலைவர் உரையாற்றுகையில், ‘மேற்படி மந்திரிமனையின் வளாகத்தை தனியார் ஒருவர் குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளார். அவர் அந்த வளாகத்தில் பாரிய வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளார். அந்த வாகனங்கள் இயக்கும் போது மந்திரிமனையின் கட்டிடம் பாதிக்கப்படுகின்றது.
இந்த மந்திரிமனையின் உரிமையாளராக சீனிவாசகம்பிள்ளை தம்பிப்பிள்ளை சமாதி நிதியத்தினரின் உரிமையை கொண்டதாக இருக்கின்றது. எனினும், அந்த மந்திரிமனையை பலர் உரிமை கொண்டாடி வருகின்றனர்.
வரலாற்று விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மந்திரிமனையை தற்காலிக பாதுகாக்கும் நடவடிக்கையை வடமாகாண சபை மேற்கொள்ள வேண்டும்’ என கூறினார்.
இது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
‘இது யாருக்குரிய காணியென்பது பற்றியும் இந்த காணி தொடர்பான முழு விபரங்களையும் அறிய வேண்டும். மத்திய அரசாங்கத்திடம் இதனை கொடுத்தால் புத்தர் சிலையொன்று உருவாகும்.
தொடர்ந்து விகாரை அமைக்கப்படும். தொடர்ந்து காவி உடுத்த ஒருவர் அங்கு இருப்பார். ஆகையால் உடனடியாக மத்திய அரசிடம் கையளிக்க முடியாது.
ஆகவே, இந்த மந்திரிமனை யாருக்குரியது என்பது தொடர்பில் தொல்லியல் அறிஞர்கள் மூலம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். சரித்திர ஆசிரியர்களிடமிருந்து இது தொடர்பில் தகவல்களை பெறவேண்டும். அதன்பின்னரே, இந்த பிரேரணையை சபையில் ஏற்றுக்கொள்ள முடியும்’ என தெரிவித்தார்.
இது தொடர்பில் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
‘தமிழர்களின் ஆட்சி 1619ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்துள்ளது. எமது வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மேற்படி மந்திரிமனை வளாகத்தை உடனடியாக வடமாகாணசபை குத்தகை அடிப்படையில் பொறுப்பேற்று வைத்திருக்க வேண்டும்.
இதற்கு வருடாந்தம் 60 ஆயிரம் ரூபாய் குத்தகைக் கட்டணம் தேவைப்படுகின்றது. குத்தகைக்கு எடுத்து வைத்துக்கொண்டு, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளலாம்’ என்றார்.
இது தொடர்பில் உறுப்பினர் ஆயுப் அஸ்வின் கருத்து தெரிவிக்கையில்,
‘மந்திரிமனை மட்டுமல்ல யாழ்.மாவட்டத்தில் 92 வரலாற்று சின்னங்கள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 7 வரலாற்று சின்னங்கள் நல்லூரில் அமைந்துள்ளன.
இவை அனைத்தையும் வடமாகாண சபை பொற்பேற்று பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இவை அனைத்தையும் வடமாகாண சபை பொற்பேற்று பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/85197.html
Geen opmerkingen:
Een reactie posten