தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 oktober 2014

நாட்டில் 10 நாட்களாக மழை: 10802 பேர் பாதிப்பு- எச்சரிக்கை தொடர்கிறது!

கடந்த 10 நாட்களாக நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் அடை மழையினால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 208 குடும்பங்களிலுள்ள 10802 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
காற்று, மண்சரிவு என்பவற்றில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். 192 பேர் காணாமல் போயுள்ளனர். 350 இற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
பாதுகாப்பான இரு இடங்களில் 243 குடும்பங்களைச் சேர்ந்த 818 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு நேற்று மாலை விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற வானிலை காரணமாக குறித்த எச்சரிக்கை அறிவித்தல் மேலும் நீடிக்கப்படலாம் என தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு முன்னெச்சரிக்கை பிரிவின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் காமினி ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே மண்சரிவு அபாயம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பகல் மற்றும் இரவு வேளைகளில் அனர்த்தங்கள் தொடர்பில் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறும் தமது சுற்றுச்சூழல் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் காமினி ஜெயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
மண்சரிவு அபாயம் அல்லது நிலம் தாழிறங்கள் தொடர்பில் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அங்கிருந்து வெளியேறி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்படுமாயின் உடனடியான கிரம சேவையாளர், பிரதேச செயலாளர்கள் ஊடாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்திற்கு அறிவிக்குமாறும் சிரேஷ்ட புவியியல் நிபுணர் காமினி ஜெயதிஸ்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் முன் எச்சரிக்கையின் பிரகாரம், பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை – எல்ல – பசறை – ஊவா பரணகம – ஹல்தும்முல்ல – ஹப்புதளை மற்றும் ஹாலிஎல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் நிலவுகின்றது.
பசறை – லுணுகல வீதியின் அடம்பிடிய – வெலிமடை வீதி, பதுளை – பண்டாரவளை வீதி, பதுளை – மஹியங்கனை வீதி மற்றும் ஹாலிஎல – வெலிமடை ஆகிய வீதிகள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.
பதுளை மாவட்டத்தின் எல்ல – வெல்லவாய வீதி,   ஹப்புத்தளை – பெரகல வீதி, பெரகல – வெல்லவாய வீதி, பதுளை – ஸ்பிரிங்வெளி வீதி ஆகியன பதுளை மாவட்டத்தில் அவதானமிக்க வீதிகளாகும்.
நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்துவிழும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதென இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
கண்டி – ராகல ஊடான வலப்பனை வீதியின் நுவரெலியா  – ஹட்டன் வீதி, கண்டி – பதுளை ஊடான ரந்தெனிகல வீதி ஆகியன மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
இதேவேளை, கண்டி மாவட்டத்தின் அனைத்து பிரதே­ச செயலாளர் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தை மேற்கோள்காட்டி இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கண்டி – மஹியங்கனை, கண்டி – குருநாகல் மற்றும் கண்டி – நுவரெலியா ஆகிய வீதிகளும் அதில் உள்ளடங்குகின்றன.
மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை – உக்குவெல – மாத்தளை – அம்பன்கங்க – யடவத்த – பல்லேபொல மற்றும் நாஉல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் நிலவுகின்றது.
கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல – அரநாயக்க – தெரணியகல – எட்டியாந்தோட்டை – தெஹிஓவிட்ட மற்றும் புலத்கொஹூபிடிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் நிலவுகின்றது.
குறிப்பாக தெஹிஓவிட்ட – தெரணியகல, அரநாயக்க – அம்பலகந்த, ஹெம்மாதகம – கம்பளை  மற்றும் கலிகமுவ – அவிசாவளை ஆகிய வீதிகளிலும் மண்சரிவு அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.
இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை – இம்புல்பே – எஹெலியகொட – கலவான மற்றும் கொடகவெல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அபாயம் நிலவுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjo2.html

Geen opmerkingen:

Een reactie posten