தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தேவையானதையே இந்த அரசாங்கம் செய்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்கள் வடக்கிற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கினை ஏன் வெளிநாடு ஒன்றாக அரசாங்கம் கருதுகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்கள் இரண்டு வீசா பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும், ஒன்று நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும் எனவும் மற்றையது வடக்கிற்குள் பிரவேசிப்பதற்கு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே பிரபாகரன் விரும்பியதாகவும் அதனையே அரசாங்கம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கிற்கு பயணம் செய்வதற்கு தனியான அனுமதி எதற்கு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் மக்களின் மெய்யான பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதனை ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதற்கு அப்பாலான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் முனைப்பு காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் போலிப் பிரச்சாரங்களைக் கண்டு மக்கள் ஏமாற்றமடைந்து விட மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பது அரசாங்கத்திற்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். |
Geen opmerkingen:
Een reactie posten