தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 oktober 2014

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கிலிருந்து உதவி- நிவாரணப் பொதிகளுடன் புறப்படுகின்றது கூட்டமைப்பு

மீட்புப் பணிகளை கைவிடத் திட்டம்? ஐ.தே.க.பகீர் குற்றச்சாட்டு - பொதுமக்களின் துன்பத்தில் எதிர்க்கட்சி குளிர்காய முயற்சி!
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 02:59.49 PM GMT ]
கொஸ்லாந்தையில் மீட்புப் பணிகளை கைவிடும் ரகசிய திட்டத்தை அரசு கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இது தொடர்பில் இன்று தனது நாடாளுமன்ற உரையில் குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும் கடைசி சடலம் கண்டெடுக்கப்படும் வரை மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“சர்வதேச நாடுகள் இது போன்ற அனர்த்தங்களின் போது கடைசி சடலத்தைக் கண்டுபிடிக்கும் வரை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டுவதுண்டு. ஆனால் அரசாங்கம் இதனை கைவிடும் நிலையில் இருப்பது போன்று தெரிகின்றது. அப்படிச் செய்ய வேண்டாம் என்று நான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, மண்சரிவுக்குள்ளான இடத்தில் மீட்புப் பணிகளில் பெரும் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அங்கு தோண்டும் போது மேற்புறத்தில் இருக்கும் பிரதேசத்தில் இன்னுமொரு மண்சரிவு உண்டாகும் அபாயம் உள்ளது. அதன் காரணமாக இதனை அவதானத்துடனேயே மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
எனினும் கடைசி சடலம் கண்டுபிடிக்கப்படும் வரை மீட்புப் பணிகள் தொடரும் என்று அவர் உறுதியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் துன்பத்தில் எதிர்க்கட்சி குளிர்காய முயற்சி! அரசாங்கம் குற்றச்சாட்டு
பொதுமக்களின் துன்பத்தில் எதிர்க்கட்சி குளிர்காய முயற்சிப்பதாக ஆளுங்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஆளுங்கட்சி சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொஸ்லாந்தை மண்சரிவு அனர்த்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆனால் பொதுமக்கள் துயரத்துக்குள்ளாகும் தருணங்களில் அரசாங்கம் எந்தவித வேறுபாடுகளும் பார்க்காது நிவாரணப் பணிகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலும் கொஸ்லாந்தை சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயற்சித்தால் நாடாளுமன்ற விவாதமொன்றை வழங்கவும் தயார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjr2.html


மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கிலிருந்து உதவி- நிவாரணப் பொதிகளுடன் புறப்படுகின்றது கூட்டமைப்பு
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 03:02.15 PM GMT ]
வடமாகாண மக்களுக்கு இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்கள் புதிய விடயங்கள் அல்ல என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு உதவி திட்டங்களை வடமாகாண மக்கள் சார்பிலும், வட மாகாண சபை சார்பிலும் வழங்குவதற்கான ஒழுங்கமைப்பு கூட்டம் இன்றைய தினம் வடமாகாண சபையில் நடைபெற்றபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதனாலேயே பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்த பிரிவில் உள்ள ஹல்துமுல்ல- மீரியபெத்த பகுதியில் மண் சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை வழங்க வேண்டும் என எங்கள் மக்கள் நினைக்கிறார்கள்.
மக்களிடமிருந்து எல்லாவற்றையும் நாங்கள் வாங்கவில்லை. ஏனெனில் தேவையற்ற பொருட்களை கொண்டு சென்று கொடுப்பது சரியல்ல. எனவே சில பொருட்களை நாங்கள் தெரிவு செய்து அவற்றை வழங்குமாறு கேட்டிருக்கின்றோம்.
மேலும் பொதுச் சுகாதார தேவைகள், உடனடி சிகிச்சை தேவைகள் மற்றும் உளரீதியான பாதிப்புக்களுக்கான சிகிச்சை தேவைகள் என அனர்த்தம் நடைபெற்ற பகுதிகளில் 3விதமான மருத்துவ தேவைகள் இருக்கும்.
அந்தவகையில் எங்கள் மாகாண சுகாதார அமைச்சின் ஒழுங்க மைப்பில் வைத்தியர்கள் அனர்த்தம் நடைபெற்ற பகுதிக்கு சென்று, சேவையாற்ற தயார் செய்யப்பட்டுள்ளனர்.
அது தொடர்பில் பதுளை பகுதி சுகாதார திணைக்களத்திற்கும், சுகாதார அமைச்சுக்கும் அறிவித்திருக்கின்றோம்.
எனவே அவர்கள் தேவை என அழைக்கும் பட்சத்தில் உடனடியாக எங்கள் வைத்தியர் குழு அங்கே சென்று வைத்திய உதவிகளை வழங்கும்.
மேலும் மாகாணசபை உறுப்பினர்களும் தலா 10ஆயிரம் நிதி உதவி வழங்கியுள்ளனர். எனவே அனைத்து மக்களும் அவ்வாறான உதவிகளை வழங்கி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் செவ்வாய்கிழமை முதலமைச்சர் மேற்படி அனர்த்தம் நடைபெற்ற பகுதிக்கு செல்லவுள்ளதுடன், மாகாணசபையினால் திரட்டப்படும் உதவிகள் 6ம் திகதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
நிவாரணப் பொதிகளுடன் புறப்படுகின்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு
பாரிய மண்சரிவால் பாதிக்கப்பட்டு உயிர்கள் சொத்துக்களை இழந்து, பாதிக்கப்பட்டு துயர் நிறைந்த மனதுடன் அகதிகளாகி வேறு இடங்களில் தங்கி இருக்கும் உறவுகளுக்கு உடனடி உதவி வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகியுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பொதுச்சந்தை வர்த்தகர்கள், நகர வர்த்தகர்கள் மற்றும் கருணை உள்ளம் படைத்தவர்களால் வழங்கப்பட்ட உலர் உணவுகள், ஆடைகள் குழந்தைகளுக்கான பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை, கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் உள்ளடங்கிய அணி மலையகம் நோக்கி நாளை புறப்படுகின்றது.
இன்று முழுவதும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நாவை.குகராஜா, வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன், உறுப்பினர்களான பாலாசிங்கசேதுபதி, பொன்னம்பலநாதன் சுகந்தன், சிவபாலன்
மற்றும் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உப தலைவருமான பொன்.காந்தன், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சர்வானந்தா, கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர் ஜெயக்குமார், கரைச்சி பிரதேச சபையின் பணியாளர்கள், கட்சியின் தொண்டர்கள் நேரடியாக வர்த்தக பெருமக்களிடம் சென்று பொருட்களை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க, கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் அனுசரணையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக மலையகத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நல்ல உள்ளம் படைத்த வர்த்தகர்கள் கருணையுள்ளம் படைத்தவர்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமாக நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர்.
கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு, கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjr3.html

Geen opmerkingen:

Een reactie posten