[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 09:48.22 AM GMT ]
இது தொடர்பாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலருடன் ஜனாதிபதி ஆலோசனையொன்றை நடத்தியுள்ளார் என்றும் அலரிமாளிகைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள நிலையில் அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தி, அமைச்சர்களின் கட்சித் தாவல் நிலைப்பாடுகள் என்பன தொடர்பில் ஜனாதிபதி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதே நிலையில் ஜனாதிபதித் தேர்தலை சந்திக்கும் போது அரசாங்கத்தின் தோல்வி தவிர்க்க முடியாததாகி விடும் என்பது உளவுத் துறையின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் ஜனவரியில் இடம்பெறவுள்ள புனித பாப்பரசரின் விஜயமும் ஜனாதிபதித் தேர்தல் தினத்தைப் பொறுத்தே உறுதிப்படுத்தப்படவுள்ளது.
இதன் காரணமாக தேர்தலைப் பிற்போட்டு, பாப்பரசரின் வருகையை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ வற்புறுத்தியுள்ளார்.
மறுபுறத்தில் அதுரலியே ரத்ன தேரர் மூலமாக எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்த மேற்கொண்ட முயற்சிகளும் எதிர்பார்த்தளவுக்கு கைகூடவில்லை.
இதுவும் போதாதற்கு எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, ஜீவகாருண்ய அமைப்பொன்றின் மூலமாக அவரது மகன் விமுக்தியை பொதுவாழ்விற்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளார்.
சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் அதற்கான அடித்தளம் இடப்பட்டபோதும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டோர் விமுக்திக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தனர்.
எனவே இவற்றைக்கருத்திற் கொண்டு ஜனாதிபதித் தேர்தலை பிற்போட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் மார்ச் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறலாம் என்பதே இப்போதைக்குள்ள மேலதிக தகவலாகும்.
எனினும் புனித பாப்பரசரின் வருகை ,வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் போன்ற கவசங்களை முன்வைத்து தேர்தலை பிற்போடும் திட்டத்தில் அரசாங்கம் உள்ளது.
இதன் மூலம் கிறித்தவர்களின் அமோக ஆதரவையும் பெற்றுக் கொள்ளலாம் என்று ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பாகவும் எதிர்வரும் வாரங்களில் மேல்முறையீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது, அதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய சட்டவல்லுனர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் அவர்களைத் தடைசெய்துவிட முடியும் என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனையும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்குச் சாதகமான பிரச்சாரமாக பயன்படுத்திக் கொள்ளவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதித் தேர்தல் பிற்போடப்படுவது தொண்ணூறு வீதம் உறுதி என்றும் அதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் அலரி மாளிகைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARcKXluy.html
ஜனாதிபதி வழங்கிய காணி உறுதிப்பத்திரங்கள் சட்டவிரோதமானவை: நாடாளுமன்றில் சுமந்திரன் எம்.பி
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 10:00.51 AM GMT ]
கிளிநொச்சியில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் முழு வடிவம் பின்வருமாறு,
சட்டவிரோதமானதும் அரசியலமைப்பிற்கு முரணானதுமான காணி கையளிப்பு
இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் அதன் முன்னுரையில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திக் கொள்கைளை தொடரும் வகையிலும் உலகலாவிய ரீதியில் ஒருங்கிணைக்கப்படடுள்ள ஒரு சூழ்நிலையின் பின்னணியிலும்தான் குறைந்தளவில் காணப்படும் ஒரு வளமாகிய காணியை அறிவார்ந்த வகையில் பயன்படுத்துவதை உறுதி செய்வது பயன்மிக்கதென்றும் அவசிமானதென்றும் கருதப்படுகிறதென்று குறிப்பிடுகின்றது.
இந்தக் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கதொன்று என்பதோடு, மொத்தத்தில் இந்தச் சட்டமூலம் அது நகர்கின்ற திசையைப் பொறுத்தவரையிலாவது வரவேற்கத்தக்கதுதான்.
எனினும், அதில் பல தவறுகள் காணப்டுகின்றன. பல குறைபாடுகள் காணப்படுகின்றன. எனது உரையில் அவற்றுள் சிலவற்றை இனங்காண விளைகின்றேன். முன்னுரையின் இரண்டாம் பகுதி ஒரு தேசியக் கொள்கை பற்றி குறிப்பிடுகின்றது:
“காணியின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதே தேசியக் கொள்கையாதலாலும்”. இவ்விடத்தில் ஒரு கணம் கருத்தைச் செலுத்த நான் விரும்புகிறேன்.
அரசியலமைப்பிற்கமைய தேசியக் கொள்கையை அறிவிப்பது, குறிப்பாக காணி தொடர்பாக தேசியக் கொள்கையை அறிவிப்பது அரசாங்கமல்ல. அரசியலமைப்பிற்கான 2வது பின்னிணப்பை நாம் பார்த்தால், தேசிய காணி ஆணைக்குழு ஒன்று இருக்க வேண்டும் என்பது தெரியும்.
எனினும், இப்போது தேசிய காணி ஆணைக்குழு ஒன்று இல்லை. இந்தப் பின்னிணைப்பு 1987 இல் கொண்டுவரப்பட்டது.
எனினும் இன்றுவரை தேசிய காணி ஆணைக்குழு ஒன்று இல்லை. இதுதான் தேசியக் கொள்கை என்று கூறிக்கொண்டு அரசாங்கம் சட்டமூலங்களைச் சமர்ப்பிக்கின்றது.
காணி தொடர்பான தேசியக் கொள்கை எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் என்பதை அறிவிக்கும் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு முரணான ஏதோ ஒன்றை தேசியக் கொள்கை என்று அரசாங்கம் கூறுகின்றது. முதலாவதாக, தேசிய காணி ஆணைக்குழு ஒன்று இருத்தல் வேண்டும். அது இங்கு இல்லை.
இரண்டாவதாக, தேசிய காணி ஆணைக்குழு தாபிக்கப்பட்டதும் தேசியக் கொள்கைகளை வகுப்பது அந்த ஆணைக்குழுவின் பொறுப்பாக இருக்கும் என்று அது கூறுகின்றது.
எனவே, இந்தச் சட்டமூலத்தை அங்கீகரித்து தமது உறுப்பினர்களுள் ஒருவர் மூலமாக இச்சபைக்கு அதனைச் சமர்ப்பித்த அமைச்சரவைக்கு அப் பொறுப்பு உரியதல்ல. தேசிய காணி ஆணைக்குழுதான் காணி தொடர்பான தேசியக் கொள்கையை வகுக்க வேண்டும். எனவே, இங்கு மிகவும் பாரதூரமான அரசியலமைப்பு மீறலொன்று உள்ளது.
அடுத்ததாக, இத் தீவிலுள்ள அனைத்து மாகாண சபைகளின் பிரதிநிதிகளையும் இந்த ஆணைக்குழு உள்ளடக்கியிருக்கும் என்று அது கூறுகிறது. அதைத்தான் அரசியலமைப்பு விதித்துரைக்கின்றது.
மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பிரயோகிப்பது தொடர்பாக, அவ்வதிகாரங்கள் தேசிய காணி ஆணைக்குழுவினால் வகுக்கப்பட்ட தேசியக் கொள்கையை உரிய முறையில் கருத்திற்கொண்டு மாகாண சபைகளினால் பிரயோகிக்கப்பட வேண்டுமென அது வாசகம் 3.4 இல் கூறுகின்றது.
எனவே, காணி தொடர்பான தேசியக் கொள்கையை யார் வகுப்பது என்பதுபற்றியும் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அந்த அதிகாரங்களை அவ்வாறு வகுக்கப்பட்ட தேசியக் கொள்கைக்கு அமைவாக யார் பிரயோகிப்பது என்பது பற்றியும் அரசியலமைப்பு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
இதனை முழுமையாக மீறியே அரசாங்கம் தற்போது இவ் அதிகாரங்களை பிரயோகிக்கின்றது.
எனக்கு முன்னர் பேசிய கௌரவ உறுப்பினர் அண்மையில் கிளிநொச்சியில் மிகுந்த ஆரவாரத்தோடு வழங்கப்பட்ட 20,000 காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் காணி அனுமதிப் பத்திரங்கள் பற்றி குறிப்பிட்டார்.
அச்சந்தர்ப்பத்தில் அதன் பயனாளிகளை தெரிவு செய்வதில் பின்பற்றப்பட்ட நடைமுறையானது, அரசியலமைப்பில் விதித்துரைக்கப்பட்டிருக்கும் நடைமுறைக்கு முற்றிலும் எதிரானதாகும். இதுவும் அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறியமைக்கான இன்னொரு உதாரணமென நாம் இனங்காண முடியும்.
அது, உண்மையிலேயே குற்றஞ்சாட்டத்தக்க ஒரு குற்றமாகும். இவ்வதிகாரங்களை யார் பிரயோகிக்க முடியும் என்பது தொடர்பான சில ஏற்பாடுகளை நான் இனங் கண்டுள்ளேன்.
மாகாண சபைகள்தான் இவ்வதிகாரங்களைப் பிரயோகிக்க முடியும். நான் அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளை வாசித்துப் பார்த்தேன். அது தேசிய காணிக் கொள்கைக்கு அமைவானதாக இருத்தல் வேண்டும்.
எனினும், அந்த தேசியக் காணிக் கொள்கை தேசியக் காணி ஆணைக்குழுவினால் வகுக்கப்பட வேண்டும் என்பதோடு, தேசிய காணி ஆணைக்குழு என்ற ஒன்று இப்போது இல்லை. அது நியமிக்கப்படவே இல்லை.
அது மட்டுமல்ல, அரச காணிகள் தொடர்பாக விதித்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை நாங்கள் வாசித்துப் பார்ப்போம். பின்னிணைப்பு 2 இல் உள்ள வாசகம் 1.3 ஒரு மாகாணத்தில் இருக்கும் அரச காணிகளை எந்தவொரு பிரசைக்கோ அல்லது நிறுவனத்துக்கோ பராதீனப்படுத்தல் அல்லது கையளித்தலானது, அவ் விடயத்துக்குரிய சட்டங்களுக்கு அமைவாக சம்பந்தப்பட்ட மாகாணசபையின் ஆலோசனையின்பேரில் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரச காணியை ஜனாதிபதியினால்தான் பராதீனப்படுத்த முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பராதீனப்படுத்தலின் இறுதிக் கட்ட நடவடிக்கை, ஜனாதிபதியிடமே முழுமையாகத் தங்கியுள்ளது.
அவரது கையொப்பத்துடனும் குடியரசின் முத்திரையுடனும் அது வழங்கப்பட வேண்டும். எனினும், இவ் விடயத்தை ஆளுகின்ற சட்டமாகிய அரசியலமைப்புக்கு அமைவாக அது சம்பந்தப்பட்ட மாகாண சபையின் ஆலோசனையின் பேரிலேயே அவர் அதனைச் செய்ய வேண்டும்.
இதுதான் நான் தற்பொழுது வாசித்த பின்னிணைப்பு 2 இல் உள்ள வாசகம் 1.3 எனும் அரசியலமைப்பு ஏற்பாடாகும்.
இது இப்பொழுது மீறப்பட்டுள்ளது என்பதோடு, நாங்கள் ஏன் அங்கு பிரசன்னமாகி இருக்கவில்லை என்று கௌரவ உறுப்பினர் ஓர் அசாத்தியத் துணிவோடு, என்னை கேள்வி கேட்கின்றார். விரும்பியோ விரும்பாமலோ நாட்டின் சட்டம் மீறப்படுகின்ற, அரசியலமைப்பே மீறப்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் அங்கு பிரசன்னமாகி இருக்கவில்லை.
பயனாளிகளைத் தெரிவு செய்வதில் மாகாண சபை எதுவுமே செய்ய முடியாதிருந்தபோது, அல்லது இது எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதுபற்றி மேதகு ஜனாதிபதிக்கு ஆலோசனை கூற முடியாதிருந்தபோது,
நான் முன்னர் குறிப்பிட்டவாறு, அதில் பாரதூரமான குறைபாடுகள் இருந்தபோதும், இங்கிருக்கும் சட்டமூலத்தின் உணர்வுகளுக்கு முழுமையாக உடன்படுகிறேன். அந்த குறைபாடுகளை நான் எடுத்துக் கூறுவேன்.
எனினும், இங்கு ஒரு சூழ்நிலை நிலவுகிறது. இந்த நாட்டு பிரசைகளுக்கு காணியைப் பகிர்ந்தளிப்பது தொடர்பான மிகவும் பாரியதொரு பிரச்சினை எமக்குண்டு. வெளிநாட்டவர்களுக்கு காணிகளைக் கையளிப்பது தொடர்பான பிரச்சினை ஒன்று உள்ளது.
அது, தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அது, மட்டுப்படுத்தப்பட வேண்டும். எனவே, அதை நோக்கிய உங்களுடைய முயற்சிகளை நாம் வரவேற்கின்றோம். இந்த விடயத்தில் இதைவிட இன்னும் கூடுதலாக் செய்யப்பட வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.
இந்த நாட்டின் பிரசைகள் அல்லாதவர்களால் சொந்தமாக வைத்திருக்கக்கூடிய காணி தொடர்பாக எச்சரிக்கையாக இருக்கும் அதேவேளை, எமது பிரசைகளுக்கு காணிகளைக் கையளிப்பது தொடர்பான சட்டங்களை நீங்கள் ஏன் கடைப்பிடிக்கக்கூடாது?
கௌரவ அமைச்சர் அவர்களே, நீங்கள் எனது உரையை செவிமடுத்தால் நான் ஏன் அதனை எதிர்க்கின்றேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
தமிழ் மக்களுக்கோ அல்லது சிங்கள மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ காணி வழங்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. இந்த நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் காணி வழங்கப்பட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
இந்த நாட்டிலுள்ள சகல பிரசைகளுக்கும் காணி வழங்கப்பட வேண்டுமென நான் விரும்புகின்றேன். எனினும், அது சட்டத்திற்கு அமைவாக செய்யப்பட வேண்டுமேயன்றி, எவரோ ஒருவரின் மனம் போன போக்கில் அல்ல என்று விரும்புகின்றேன்.
இந்த நாட்டில் சட்டம் ஒன்று உண்டு. இந்த நாட்டில் சட்டம் ஒன்று இருக்குமானால், நான் இந்த நாட்டின் அதி உயர் சட்டமான அரசியலமைப்பிலிருந்து மேற்கோள் காட்டுகிறேன். நான் சுமத்துகின்ற குற்றச்சாட்டுக்கு எதிராக உங்களால் ஒரு வார்த்தைகூட கூற முடியாது. மாகாண சபையிடமிருந்து எவ்வித ஆலோசனையும் பெறப்படவில்லை. அது பற்றி உங்களால் என்ன கூற முடியும்?
அமைச்சர் சரத் அமுணுகம: எனது நல்ல நண்பர் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கான பதில் அவருக்கே தெரியும். அரசியலமைப்பிற்கு முரணான சட்டம் எதுவும் இருக்குமானால் ……..
நான் இந்த சட்டமூலத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை……
மாகாணசபையின் ஆலோசனைப் பெறப்படாது வழங்கப்பட்ட 20,000 காணி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் காணி உறுதிப் பத்திரங்கள் பற்றிய ஒரு கேள்வியை நான் நான் எழுப்பியுள்ளேன்.
அதற்கு உங்களால் எனக்கு ஒரு பதில் கூற முடியுமா? …எனவே அதற்கு பதில் கூறுங்கள். ஏன் நீங்கள் அதற்கு பதில் கூறவில்லை. நான் உங்களுக்கு இடம் தருகிறேன். நீங்கள் அந்தக் கேள்விக்கு பதில் கூறுங்கள். உங்களிடம் பதில் இல்லை. உங்களிடம் பதில் இல்லை…..
….. எனவே, அந்த 20,000 காணி உறுதிப் பத்திரங்களும் காணி அனுமதிப் பத்திரங்களும் சட்ட விரோதமாகவே வழங்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் இப்போது ஏற்றுக் கொள்கிறீர்கள்.
அமைச்சர் சரத் அமுணுகம 20,000 காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் காணி அனுமதிப் பத்திரங்கள் பற்றி நீங்கள் கூறுகின்றவற்றிற்கு நான் பொறுப்பு அல்ல. பாராளுமன்றத்தில் பிறிதொரு நடைமுறையின்கீழ் நாங்கள் இதனை விவாதிக்கலாம்.
நீங்கள் அதற்கு பொறுப்பு இல்லை என்ற உங்களுடைய பதில் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
தமது காணிகளை பயன்படுத்த விடாது தடுக்கப்படும் காணிச் சொந்தக்காரர்கள்
தனியார் காணி உறுதிப் பத்திரங்களைக் கொண்டவர்களும் தமது காணிகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாதவர்களுமான இந்த நாட்டின் பிரசைகளுக்குச் சொந்தமான பரந்தளவு காணிகள் குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.
காணி உரிமையாளர்களினால் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படாத 67,000 ஏக்கர் காணிகள் உண்டு. இதுதான் நாங்கள் அதிகம் கவலை கொள்கின்ற ஒரு விடயமாகும். இது தொடர்ந்து இடம்பெறுகின்ற பிரதேசங்களை நான் எடுத்துக் கூறகின்றேன்.
திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் நானே சென்று கண்டேன். கங்குவேலி மற்றும் தென்னமரவடி ஆகிய -இரண்டு பகுதிகளில் இக்காணிகளில் பயிர்ச்செய்து வாழ்ந்து, இடம்பெயர்ந்து, திரும்பிவந்து மீண்டும் பயிர்ச் செய்கையைத் தொடங்கிய மக்கள் தமது காணிகளில் பயிர்ச் செய்யவிடாது தடுக்கப்படுகின்றனர்.
தற்போது, அரசாங்க உத்தியோகத்தர்கள் அவர்களுக்கு முட்டுக் கட்டை இடுகின்றனர், ஏனையவர்களுக்குச் சார்பாக இருந்து கொண்டு காணி அனுமதிப் பத்திரங்கள் வைத்திருப்பவர்களைக் கூட அக் காணிகளில் பயிர்ச்செய்ய விடாது தடுக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் மேற்கு பாலையடிவேட்டை, கருணான்கூவை ஆகிய பகுதிகளில் 251 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. 1976 ஆம் ஆண்டு தொடக்கம் அவர்கள் அக் காணிகளில் பயிர்ச் செய்கை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அவர்களுள் பெரும்பாலானோர் முஸ்லிம்களாவர். 1996 தொடக்கம் 2011 வரையிலான ஒரு குறுகிய இடைவெளியைத் தவிர, ஏனைய காலம் முழுதும் அவர்கள் அங்கு தொடர்ச்சியாக பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்துள்ளனர். தற்போது அவர்கள் தடுக்கப்படுகின்றனர்.
அரசாங்க உத்தியோகத்தர்களினால் அவர்கள் தடுக்கப்படுகின்றனர். அரசாங்க அதிபரிடமிருந்தும் லவுகல பிரதேச செயலாளரிடமிருந்தும் ஒரு கடிதம் வந்துள்ளது. அவர்கள் அக் காணிகளில் பயிர்ச்செய்ய முடியாதென்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அந்தக் காணிகளைப் பயன்படுத்தவிடாது அவர்கள் பலவந்தமாகத் தடுக்கப்பட்டுள்ளனர்.
ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது? ஏன் தென்னன்மரவடியில் இவ்வாறு நடைபெறுகிறது? குங்குவெளியில் ஏன் இவ்வாறு நடைபெறுகிறகு? தமிழ் மற்றும் முஸ்லிம் விவசாயிகள் - அவர்களுடைய இனத்தைக் குறிப்பிட்டுக் கூறுவதில் நான் வெட்கமடைகின்றேன்.
ஆனால் அதுதான் நடைபெறுகின்றது – வாழுகின்ற பாலையடிவேட்டையில் ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது? அமைச்சர் சரத் அமுணுகம: நிர்வாக பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கக்கூடும்.
ஆனால் ஆலோசனைக் குழுவிற்கு அதனைக் கொண்டுவருவது உங்களது கடமையாகும். அங்கு ஒரு பதில் தருவதற்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் இருப்பார்கள்.
நாங்கள் அதனைக் கொண்டுவந்திருக்கிறோம். அக்குழுவிற்கு இவ்விடயத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்.
அமைச்சர் சரத் அமுணுகம: நீங்கள் கற்பனை செய்துகொள்கின்றீர்கள். நான் இதனைக் குறிப்பிட விரும்புகிறேன்- அரசாங்க தரப்பில் ஒரு தீய எண்ணம் இருப்பதாக நீங்கள் கற்பனை செய்துகொள்கிறீர்கள். அத்தகையதொன்று இல்லை.
கௌரவ அமைச்சர் அவர்களே, அது ஏதாவது ஒரு பகுதியில் இடம்பெறும் ஒரு தனிப்பட்ட சம்பவமாக இருந்தால் நான் அரசாங்கத்தின் அத்தகைய கொள்கைபற்றி அனுமானிக்க மாட்டேன்.
எனினும், அது கிழக்கு மாகாணத்தின் வடக்குப் பகுதியிலிருந்து கிழக்கு மாகாணத்தின் தென்கோடி வரை இடம்பெறுமாயின் அத்துடன் அது தமிழ் மற்றும் முஸ்லிம் விவசாயிகளுக்கு மட்டும் ஏற்படுமாயின், அங்கு ஏதோ ஒரு வகையிலான கொள்கையொன்று அமுல்படுத்தப்படுகிறது என்று சந்தேகிப்பதற்கு எனக்கு நிச்சயமாக உரிமையுண்டு.
அதனால்தான், கிழக்கு மாகாணத்தின் வட கோடியிலிருந்து தென் கோடி வரையிலான பகுதியை நான் இனங்கண்டேன்.
அமைச்சர் சரத் அமுணுகம: தயவு செய்து இந்தக் கேள்விக்கு பதில் கூறுங்கள். நீங்கள் ஒரு தேசியப் பட்டியல் பா.உ என்ற வகையில் நிர்வாக அதிகார பீடத்திலும் இப்பிரச்சினையை எழுப்பினீர்களா?
ஆம். நாங்கள் இவ் விடயத்தை எழுப்பியிருக்கிறோம்.
அமைச்சர் சரத் அமுணுகம: அப்போது என்ன பதில் கிடைத்தது?
எங்களுக்கு ஒருவித பதிலும் கிடைக்கவில்லை. நாங்கள் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறோம், எங்களுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இது ஒரு மிகவும் பாரதூரமான பிரச்சினை என்பதனால் நான் இதனைப் பாராளுமன்றத்தில் எழுப்புகிறேன்.
எனக்கு எழுதப்பட்ட கடிதங்கள் நிரம்பி வழியும் ஒரு கோப்பு என்னிடம் உண்டு. இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
எனவே, நான் இந்தக் கேள்வியைக் கேட்கின்றேன்: கள்ளத்தனமாக ஏதாவது நடைபெறுகின்றதா? ஏனெனில், இது ஓர் இடத்தில் மட்டும் நடைபெறாது பல இடங்களிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் நடைபெறுகின்றது.
தற்போது நான் வட மாகாணத்திற்கு வருகின்றேன். வட மாகாணத்தில் 67,000 ஏக்கர் காணி உள்ளதெனக் குறிப்பிட்டேன். அவற்றுள் பெரும்பாலானவை அரச காணி அல்ல. அவற்றுள் பெரும்பாலானவை தனியார் காணி உறுதிகள் கொண்ட தனியாருக்குச் சொந்தமான காணிகளாகும் என்பதோடு, அம் மக்களுக்கு அங்கு செல்ல முடியாதுள்ளது.
அம்பாந்தோட்ட மாவட்டத்தின் ஐ.தே.க இன் கௌரவ உறுப்பினர் மொனராகலையில் எங்கோ ஓரிடத்தில் உள்ள ஒரு கோல்ப் திடல் பற்றிய பிரச்சினையொன்றை எழுப்பினார்.
அதே வகையிலான கோல்ப் திடல் வட மாகாணத்திலும் - வலிகாமம் வடக்கில் உண்டு. அந்தப் பகுதியில் உள்ள 7 அல்லது 8 கிராமங்களின் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட முடியாது.
அவர்கள் இன்னமும் நலன்புரி நிலையங்கள் என்று அழைக்கப்படும் இடங்களில் - அடிப்படையில் இடம்பெய்ர்தோர் முகாம்களில் - வாழ்ந்துகொண்டிருக்கும்போது, பாதுகாப்புப் படைகளுக்கான ஒரு கோல்ப் திடலுக்கென 350 ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏன் நடைபெறுகின்றது?
(காணி பராதீனப்படுத்தல் சட்டமூலம் தொடர்பாக) காணிகளை சொந்தமாக வைத்திருப்பதற்கான பிரசைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கே நீங்கள் இதனைச் செய்வதாகவும் காணிகளைச் சொந்தமாக வைத்திருப்பதற்கான பிரசைகளின் உரிமைகள் இந் நாட்டுக்கு வந்து காணிகள் அனைத்தையும் கொள்வனவு செய்துவிடும் வெளிநாட்டுக் கம்பனிகளாலும் வெளிநாட்டவர்களினாலும் பறிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றும் கூறுகின்றீர்கள்.
அது வரவேற்கத்தகுந்த ஒரு கருத்தாகும். ஆனால், ஏற்கனவே காணிகளைச் சொந்தமாகக் கொண்டிருப்பவர்கள் பற்றி, ஏற்கனவே காணி அனுமதிப்பத்திரங்கள் கொண்டிருப்பவர்கள் பற்றி என்ன கூறுவீர்கள்?
அவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சாராதவர்கள் என்பதற்காக அவர்கள் உழுது பயிர்செய்த காணிகள், பல தலைமுறைகளாக அவர்களது மூதாதையர்களிடமிருந்து வழிவழி வந்த காணிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவை கையகப்படுத்தப்படுகின்றன என்று கூறும் இராணுவத்தின் கோல்ப் திடல்களுக்காகவும் டென்னிஸ் மைதானங்களுக்காகவும் நீச்சல் தடாகங்களுக்காகவும் பயன்படுத்தப்படும்.
அதேவேளை, 24, 25 வருடங்கள் நலன்புரி நிலையங்களில் வாழுகின்ற இழிநிலையை அனுபவிக்க வேண்டுமா? நீச்சல் தடாகங்களிலும் டெனிஸ் மைதானங்களிலும் இருக்கும் பாதுகாப்பு நோக்கங்கள்தான் என்ன?
நீங்கள் .இங்கு ஒரு வேறுபாட்டைக் காணவில்லையா? இங்கு ஒரு பிரச்சினையை நீங்கள் காணவில்லையா? இவை எல்லாம் இருக்கத்தக்கதாக காணியை சொந்தமாக கொண்டிருப்பதற்கான பிரசையின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நீங்கள் ஒரு சட்டமூலத்தை சமர்ப்பிக்கின்றீர்கள்.
ஊழல்
நான் எழுப்ப விரும்புகின்ற பிரச்சினை மூலோபாய அபிவிருத்தி சட்டத்தின் கீழ் இனங்காணப்பட்ட காணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் பரந்த முக்கியத்துவம் தொடர்பானதாகும்.
இங்குதான் பெருந்தொகை ஊழலுக்கான வாய்ப்பு நிலவுகிறது. ஒரு குறிப்பிட்ட கொள்கையை விதித்துரைத்து அதற்குரிய சட்டத்தைக் கூறுவீர்களானால் அச்சட்டம் மிகவும் தெளிவானதாக இருக்க வேண்டும்.
மூலோபாய அபிவிருத்தி கருத் திட்டமென இனங்காணப்பட்ட ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அங்கீகாரம் கோரப்படுகிறது. எனவே, அது விவாதத்திற்கு வருகின்றது.
அவற்றுள் எதற்கு இவ்விரு அமைச்சர்களும் பிரிவு 2 இன் ஏற்பாடுகளிலிருந்து விதிவிலக்களிப்பார்கள் என்பது அவர்களைப் பொறுத்தது…… களத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தற்துணிபு அதிகாரங்களின் பாரதூரமான துஷ்பிரயோகத்தை நாம் கண்டிருக்கிறோம்.
ஒரு கைத்தொழில் அல்லது தொழில் முயற்சி மூலோபாய அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இனங்காணப்படும்போது தானாகவே அது பிரிவு 2 இலிருந்து விலக்களிக்கப்பட்டுவிடும் என்று அது கூறவில்லை. அது அவ்வாறு கூறவில்லை.
அது சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களுக்கும் அவற்றுள் எதற்கு பிரிவு 2 இலிருந்து விலக்களிப்பதற்கான தற்துணிபை சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களுக்கும் வழங்குகிறது.
நீங்கள் .இதனை பெரும் துஷ்பிரயோகங்களுக்கு திறந்து விடுகிறீர்கள். நான் இதனை மிகுந்த பொறுப்புணர்வுடன் கூறுகிறேன். நான் இதன் மீது சரி பிழை கூற வரவில்லை. எனினும், இந்த நாட்டில் இன்று நிலவுகின்ற ஊழலின் அளவினை முழு நாடுமே அறியும்.
அந்த ஊழல் எங்கு இருக்கின்றது என்பதை முழு நாடுமே அறியும். ஒரு ஏவலாளி ரூபா 50ஃ-இலஞ்சம் பெறுகின்ற கீழ் மட்டத்திலா அது நிலவுகின்றது- இல்லை, அது அல்ல இந்த நாட்டில் நடைபெறுவது.
அதற்கு எதிர்மாறானதுதான் நடைபெறுகின்றது. ஊழல் மிக உயர்ந்த மட்டத்திலே தான் நிலவுகிறது. அவ்வாறு இருக்கும்போது. உயர்ந்த அதிகாரிகளுக்கும் அது போன்ற நபர்களுக்கும் தற்றுணிபு வழங்குவது இந்த நிலைமையை மேலும் மோசமாக்குமே தவிர அதனைத் தீர்த்து வைக்காது.
அதுதான் மற்றைய விடயமாகும். நீங்கள் நீதிமன்றத்தை சுயாதீனமிக்கதாக ஆக்குங்கள், அப்போது நாங்கள் அங்கு சென்று இதற்கு எதிராக வழக்குத் தொடர்வோம். சுயாதீனமான தீர்ப்பொன்றைப் பெற்றுக்கொள்வோம்.
நீங்கள் நீதிமன்றத்தில் உங்கள் ஆட்களைக் கொண்டு நிரப்பிவிட்டு நாங்கள் அங்கு செல்வோம் என்று எதிர்ப்பார்க்கின்றீர்கள். நீங்கள் அதனைச் செய்யமுடியாது. அதன் பின்னர் நீங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு பெரும் புனிதமானவர்கள்போல எங்களுக்குப் போதனை செய்கிறீர்கள்.
அமைச்சர் சரத் அமுணுகம: அதுதான் இந்த நாட்டின் உயர் நீதி மன்றத்தின் மனப்பாங்கா?
ஆம். நீங்கள் கருதுவது என்ன? இந்த நாட்டு மக்களும் வெளி உலகத்தாரும் இந்த நாட்டு நீதிமன்றங்கள் அப்படி இருப்பதாகத்தான் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
http://www.tamilwin.com/show-RUmszARcKXluz.html
Geen opmerkingen:
Een reactie posten