இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றபோது தான் இந்தியா புதிதாக நியமித்துள்ள பாதுகாப்பு அதிகாரி பற்றிய செய்தியொன்று ஊடகங்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்தன.
காலையில் இந்திய கவுஸில் நடைபெற்ற அந்த கொடியேற்ற விழாவின் பின்னர் புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய இராணுவ அதிகாரியும் கலந்து கொண்டிருந்தார். ஆனால் அப்போது அவர் முன்னுக்கு வரவில்லை.
மாலையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய அமைதிப் படையினர்களின் நினைவுத் தூபியில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் இந்தியத் தூதுவர் யெஸ்வர்தன சின்ஹாவுக்கு இரு புறமும் கப்டன் பிரகாஸ் கோபாலனும் லெப் கேர்ணல் குரிந்தா எஸ் கிளேயரும் நின்றிருந்தனர்.
அதற்குப் பின்னர்தான் இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு அலகு வலுப்படுத்தப்பட்ட விவகாரம் வெளியே தெரியவந்தது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் அந்தச் செய்தியை வெளியிட இந்திய- இலங்கை ஊடகங்களில் அது பரபரப்பான செய்தியாக மாறியது. இந்த இராணுவ அதிகாரியின் பதவிநிலை லெப் கேர்ணல் என்பதே சரியானது. அவரது தோற்பட்டையில் காணப்படும் இந்திய அரசு சின்னமும் ஒரு நட்சத்திரமும் லெப் கேர்ணல் தரத்தில் அடையாளங்கள்.
அதைவிடப் பாதுகாப்பு ஆலோசகராக உள்ள பிரகாஸ் கோபாலன் இந்திய கடற்படையின் கப்டன் தர அதிகாரியாவார். அது இராணுவத்தின் லெப்டினன்ட் கேர்ணல் தரத்திற்கு நிகரானது. பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் கடற்படைக் கப்டன் அதிகாரியை விட பதவியில் உயர்ந்த இராணுவக் கேர்ணல் ஒருவரை அவருக்குக் கீழ் நியமிக்கக் முடியாது என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் திடீரென இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவு வலுப்படுத்தப்பட்டதும், மரபுகளுக்கு மாறாக இராணுவ அதிகாரி ஒருவர் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதும் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சீனாவுக்கும் இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் நெருக்கமடைந்து வருவதன் விளைவே இந்த நியமனம் என்று பரவலாக நம்பப்படுகின்றது.
இலங்கையில் சீனா தனது பொருளாதார நலன்களை மட்டுமன்றி பாதுகாப்பு நலன்களையும் கூட வலுப்படுத்தி வருகின்றது.
இலங்கையைத் தமது பாதுகாப்பு நலன்களுக்காகப் பயன்படுத்தவில்லை என்று சீனா கூறிக் கொண்டிருந்தாலும் எந்த நாடும் மூன்றாவது நாடு ஒன்றுக்கு எதிராக இலங்கையைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அரசாங்கமும் கூறிக் கொண்டிருப்பினும் இரு தரப்பு உறவுகள் பாதுகாப்பு நலன்களைச் சார்ந்தே முன்னகர்த்தப்படுகின்றன.
இவை குறித்து இந்தியா சந்தேகம் கொள்கின்றது என்பதும் அவதானமாக இருக்கிறது என்பதும் வெளிப்படை. அண்மைக் காலமாக இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இராணுவத் தலையீடுகள் அதிகரித்து வருவது குறித்து இந்தியா கவலை கொண்டிருக்கிறது.
ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்வதில்தான் இந்தியாவுக்குத் தயக்கம் இருக்கிறது. ஒரு வேளை அதனை வெளிப்படையாகக் கூறப்போனால் தாம் பயப்படுகிறோம் என்றோ தமது பலவீனம் என்று உணரப்பட்டு விடுமோ என்றும் இந்தியா அஞ்சுகின்றது.
சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்
கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் முதல் முறையாகப் பாதுகாப்பு ஆலோசகராக இராணுவ அதிகாரி ஒருவரை நியமித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
கொழும்பில் சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் என்றொரு பதவிக்கு யாரும் நியமிக்கப்படும் வழக்கம் இருக்கவில்லை. இப்போது சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் நியமிக்கப்பட்டது அண்மைய நாட்களில் நடந்த ஒரு நிகழ்வல்ல. சில ஊடகங்கள் இப்போதுதான் சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டதை அடுத்தே இந்தியாவும் உடனடியாக பதில் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரை நியமித்ததாக செய்திகளை வெளியிட்டிருந்தன.
ஆனால் சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டு ஒரு வருடமாகிவிட்டது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பாதுகாப்பு ஆலோசகராக சீனா இராணுவ மூத்த அதிகாரியான கேர்ணல் லீ. செங்லிங் கொழும்பில் பதவியேற்றிருந்தார்.
சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கேர்ணல் லீ. செங்லிங் நியமிக்கப்பட்டதன் உடனடி விளைவாகவே இந்தியா லெப் கேர்ணல் குரிந்தர் எஸ். கிளேயரை நியமித்துள்ளது.
இந்த நியமனத்தில் சீனாவின் பாதுகாப்பு ஆலோசகர் நியமனமும் ஒரு தாக்கத்தைச் செலுத்தியிருந்தது என்பதை மறுக்க முடியாது.
அதேவேளை, அண்மைக் காலங்களில் சீனாவின் முக்கிய படைத்தளபதிகள், பாகிஸ்தான் தளபதி, அதிகாரிகளின் வருகைகள் மட்டுமன்றி, சீனக்குடாவில் சீன விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்கும் முடிவுகூட இந்தியாவின் இந்த முடிவில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளன.
சீனாவின் பாதுகாப்பு நலன்கள் இலங்கையில் விரிவாக்கப்பட்டதையிட்டு, இந்தியா கவலையோ, அக்கறையோ கொள்ளவில்லை என்ற கருத்தை இந்த நகர்வு மாற்றி விட்டிருக்கிறது.
இலங்கையை சீனா எந்தளவுக்கு தனது நலனுக்குப் பயன்படுத்த எத்தனிக்கிறதோ அந்தளவிற்கு இந்தியாவும் தனது நலனில் அக்கறை கொண்டுள்ளது. இதைத்தான் இந்தியத் தூதரகத்தில் புதிய பிரதிப் பாதுகாப்பு ஆலோசகரின் நியமனம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இவற்றுக்கெல்லாம் அப்பால் இலங்கையில் சீனாவின் தலையீடுகள் குறித்து கவலை கொள்ளவில்லை என்று இந்தியா கூறுவதும், இலங்கையில் பாதுகாப்பு நலன்களை அடைய முயற்சிக்கவில்லை என்று சீனா கூறுவதும், இந்திய நலனுக்கு விரோதமாக எதையும் செய்ய அனுமதியோம் என்று இலங்கை கூறுவதும்,சுத்தமான நடிப்பாக இல்லையா?
பாகிஸ்தான் தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரி நியமனம்
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு கடந்த மாதம் புதிய பாதுகாப்பு உயர் அதிகாரியாக லெப்டினன்ட் கேர்ணல் மொகம்மட் இர்ஷாத் கான் என்பவர் நியமிக்கப்படடுள்ளார்.
இவர் இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரட்நாயகவைச் சந்தித்துள்ளார். முதல் முதலாக சீனா தனது தூதரகத்திற்கு வழமைக்கு மாறாக பாதுகாப்பு அதிகாரியொன்றை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கின்றது.
அதன் பின்பு இந்தியா, பாதுகாப்பு அதிகாரியொன்றை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கின்றது .அதன் பின்பு பாகிஸ்தான், பாதுகாப்பு அதிகாரியொன்றை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்கின்றது.
முதன் முதலாக சீனா ஆரம்பித்து வைத்துள்ள பாதுகாப்புப் பயில்வான் போட்டிக்கு நானும் சளைத்தவன் அல்ல என்று இந்தியா ஒரு பாதுகாப்பு அதிகாரியை நியமித்துள்ள அதே வேளை பாகிஸ்தானும் நானும் சளைத்தவன் அல்ல என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது.
உண்மையிலே இப்படியான ஒரு பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம் என்பது கொழும்புக்கு அவசியமே கிடையாது. காரணம் தங்களது நாட்டுத் தூதரகங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏதும் இருப்பின் இப்படியான பாதுகாப்பு அதிகாரிகளை மேலதிகமாக அந்தந்த நாடுகள் நியமிக்கலாம். அப்படியான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இலங்கையில் இல்லவே இல்லை.
விடுதலைப் புலிகளின் காலத்தில் இந்த நாடுகள் பயந்தால் ஒரு நியாயம் இருக்கலாம் ஆனால் புலிகளே இல்லாத போது எதற்காக இந்தப் பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம் என்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இருந்து இந்தியாவை சீனா வளைக்கின்றது. தனது பாதுகாப்பில் சீனா அதிக கவனம் செலுத்துகின்றது என்பதுதான் உண்மை. ஆனால் தரையில் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லையே என்கின்ற பாணியில் இந்தியா நடந்து கொள்கின்றது.
அந்த வகையில்தான் “நானும் சிங்கம் இல்லே” என்றவாறு இந்தியா உடனடியாக இந்தியாவில் இருந்து ஒரு பாதுகாப்பு அதிகாரியை புதிதாக நியமித்துள்ளது.
இந்தியாவுக்குப் போட்டியாக பாகிஸ்தானும் ஒரு பாதுகாப்பு அதிகாரியை நியமித்துள்ளதானது, இது ஆளாளுக்கான அந்தஸ்துப் போட்டிதானே அன்றி கொழும்பிலோ அல்லது இலங்கையிலோ இந்த நாடுகளுக்கு எவ்விதமான பாதுதுகாப்பு அச்சுறுத்தலுமில்லை.
இந்தியாவைப் பொறுத்த மட்டில் வட கிழக்கில் புலிகளை அழிப்பதில் காட்டிய அக்கறை என்பது தன் கண்ணைக் குத்திக் கொண்டது போன்றது.
சீனா என்பது இந்தியாவை ஐந்து திசைகளில் சுற்றியுள்ளது. மியன்மார், பூட்டான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் சீனா-இந்தியா எல்லையான சிம்லா வழியாக சுற்றியுள்ளது.
சீனா- இந்தியா யுத்தமொன்று நிகழுமானால் சீனா, இந்தியாவை இந்த ஐந்து வழிகளிலும் இந்தியாவை வளைத்து விடும். எதிர்கால உலக வல்லரசு என்ற கோணத்தில் சீனா தனது பொருளாதாரம்,ஆட்பலம்,ஆயுதம் மற்றும் பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
இந்தியாவைப் பொறுத்த மட்டில் இலங்கைக்குள் தமிழுர்களை எதிரிகளாக எடை போட்டு தனது பாதுகாப்பு விடயத்தில் போட்டை விட்டுள்ளது. இலங்கைக்குள் சீனாவின் ஆதிக்கம் என்பது இந்தியாவுக்கு பெருத்த அச்சுறுத்தலாகும்.
இந்த அச்சுறுத்தலை இந்தியா மூடி மறைத்தாலும், இலங்கைக்குள் சீனாவின் ஒவ்வொரு அசைவையும் இந்தியா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.
என்னதான் இந்தியா, சீனாவின் அசைவுகளை அவதானித்து வந்தாலும் இலங்கைக்குள் ராஜீவ் காந்தி காட்டிய நாட்டாமை தன்மையை ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பின்பு இந்தியாவால் காட்ட முடியாமல் போய் விட்டது.
இலங்கை விடயத்தில் இந்தியாவின் மெத்தனப் போக்கு என்பது இன்று தனது நாட்டு மீனவ மக்களின் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் அட்டூழியங்களையே தட்டிக் கேட்கவும் முடியாமல் கச்சதீவை மீட்கவும் முடியாமல் இந்தியா பிதுங்கி நிற்கின்றது.
ஆனாலும் இந்தியா, இலங்கைக்கு எத்தனை உதவிகளை அள்ளி வழங்கினாலும் இலங்கை, சீனாவின் பக்கம்தான் நிற்கின்றது நிற்கும். காரணம் இலங்கையும் சீனாவும் மதத்தால் ஒன்று பட்டவர்கள்.
கொழும்பில் சீனாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் நடத்தும் இந்த பாதுகாப்பு அதிகாரிகள் நியமனப் போட்டியுமானது நானா நீயா என்ற போட்டிதான். இதுவொரு கௌரவப் போட்டிதான்.
இந்த மௌனப் போட்டி இன்னும் பல வடிவங்களில் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம். இந்தப் பாதுகாப்புப் பனிப்போரில் இலங்கை நன்றாகவே நனைகின்றது.
எலிக்கு மரணமாம் பூனைக்கு விழையாட்டாம் என்றவாறு இந்தியாவுக்கு எதிரியான சீனாவை இலங்கைக்குள் அழைத்துக் கொண்டு சீனாவிடம் இலங்கை நன்றாகவே நனைகின்றது. பிழைக்கின்றது.
இப்போது மஹிந்தரை என்ன விலை கொடுத்தும் மூன்றாம் முறையும் வெல்ல வைக்க சீனா தயாராகவே உள்ளது.
எம்.எம்.நிலாம்டீன்
mmnilamuk@gmail.com
mmnilamuk@gmail.com
http://www.tamilwin.com/show-RUmszAQVKXkx4.html
Geen opmerkingen:
Een reactie posten