தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

ஜெயலலிதாவின் 2 கோடியாக இருந்த சொத்து மதிப்பு 66 கோடிக்கு எகிறியது எப்படி? முழு விபரம் !

இச்செய்தி சற்று நீளம் தான். ஆனால் ஆரம்பத்தில் இருந்து படித்தால் தான் என்ன நடந்தது என்று புரியும். ஏன் என்றால் ஒரு காலத்தில் சுப்பிரமணிய சுவாமியும் ஜெயலலிதாவும் ஒன்றாக இருந்தார்கள். ஆஸ்தான குருவாகவும் இருந்தவர் அவர். எப்படி எலியும் பூனையுமாக மாறினார்கள் என்பது எல்லாம் தெரியவேண்டாமா ?
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக சென்னையிலும் கர்நாடகாவிலும் விசாரணை செய்யப்பட்டு வந்தது தெரிந்ததே. ஜெயலலிதாவுக்கு எதிராக நமோ என வழக்குத் தொடுத்தவர் சுப்ரமணியன் சுவாமிதான். அவரே இந்த வழக்கைப் போட்டு ஜெயலலிதாவை குடைச்சலுக்கும் எரிச்சலுக்கும் உள்ளாக்கியவர். ஜெயலலிதா மீது திமுக அரசு போட்ட 14 வழக்குகளில் அவர் தண்டனையில் இருந்து தப்பித்துவிட்டார். ஆனால் சுப்ரமணிய சுவாமி போட்ட முடிச்சில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.
14 வழக்குகளில் ஒன்றான டான்சி நிலபேர ஊழல் வழக்கில் 'டான்சி' நிறுவன நிலத்தை, ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ் நிறுவனங்கள் விலைக்கு வாங்கின. இந்த நிலபேர ஊழல் வழக்கில், 2009. 10. 09 இல் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி அன்பழகன் தீர்ப்பு அளித்தார். அதில், ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புத்தான், முதன் முதலில், ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு பலத்த அடியைக் கொடுத்தது. மேலே கூறியவாறு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்கு மேல், தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்து விடுவார்.
இருந்தும் 2001 இல் நடந்த சட்டசபைத் தேர்தலில், ஆண்டிப்பட்டி உட்பட, நான்கு தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். ஆனால், அந்த வேட்புமனுக்கள் எல்லாம் புறந்தள்ளப்பட்டன. இருந்தும் அவரது தலைமையிலான அதிமுக 140 இடங்களில் போட்டியிட்டு 132 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தேர்தலைச் சந்திக்காத ஜெயலலிதாவை முதல்வராக அவரது கட்சி தேர்வு செய்தது. அவரும் 2001 - 05 - 14 ஆம் நாள் முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி, அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், ஜெயலலிதா முதல்வராக நியமனம் பெற்றதை செப்தெம்பர் 2001 இல் உச்ச நீதிமன்றம் சட்டப்படி செல்லாது எனத் தீர்ப்பளித்தது. எனவே, முதல்வராக இருந்த அவர் பதவி விலகி, நிதி அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்ச்செல்வத்தை முதல்வராக்கினார்.
பின்னர், டான்சி நிலபேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவை சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்தது. அந்தத் தீர்ப்பை 2003 இல் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதற்கிடையில், ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். 1995 இல் சுப்ரமணியன் சுவாமி தமிழக ஆளுநராக இருந்த சென்னா ரெட்டியைச் சந்தித்து ஜெயலலிதா மீது வழக்குத் தொடுக்க அனுமதி கேட்டு மனு அளித்தார். அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆளுனர் சென்னா ரெட்டி அதனைப் படித்து, முட்டாள்கள் நாளான 1995.04.01 அன்று அனுமதி அளித்தார். அந்த அனுமதியை எதிர்த்து 1995. 04 . 06 அன்று, ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு நீதிபதி சிவராஜ் பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பராசரன் தோன்றி வாதாடினார்.
சுப்ரமணியன் சுவாமி தனக்காகத் தானே வாதாடினார். வழக்கை விசாரித்த சிவராஜ் பாட்டீல், அரசியல் அமைப்புச் சட்ட விவாதங்கள் இதில் அடங்கியிருப்பதால், இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.சீனிவாசன் மற்றும் எஸ்.எஸ்.சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக 20.04.1995 அன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பராசரன் வாதாடினார். சுப்ரமணியன் சுவாமி தனக்குத் தானே வாதாடினார். தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார். வழக்கின் விசாரணை காலை 10.30 முதல் மாலை 4.30 வரை தொடர்ந்து நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்ததும் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தார்கள்.
மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில், சுப்ரமணியன் சுவாமி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஒரு "பறையன்" என்று பேசினார். அதாவது தாழ்த்தப்பட்ட மீனவன் என்பது அதன் அர்த்தம். உடனே ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் சுப்பிரமணியன் சுவாமி பேசியது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிரானது எனச் சொல்லி அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து சுவாமியை கைது செய்ய காவல்துறை நீதிமன்றம் வந்திருந்தது. அதனை முன்கூட்டியே அறிந்த சுப்பிரமணியன் சுவாமி முன் பிணை பெற்று தமிழ்நாட்டில் இருந்து தில்லிக்குத் தப்பிச் சென்றார். சுவாமி வைத்த வழக்கின் தீர்ப்பு 27.04.1995 அன்று வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் கசிந்தன.
சென்னா ரெட்டி வழக்குத் தொடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் என்பதை அறிந்து கொண்ட ஜெயலலிதா ஏப்பிரல் 26 அன்று சட்டசபையில் ஒரு உறுப்பினரைக் கொண்டு கேள்வி கேட்க வைத்தார். உடனே ஜெயலலிதா "நான் ஆளுனரைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறேன். என்ன காரணம் என்றால், கடந்த முறை ஆளுனரைச் சந்தித்தபோது என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்" என்று கூசாமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ஆனால் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை யாரும் நம்பவில்லை. 1989 தேர்தலில் இரண்டாகப் பிளவுபட்டுப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அதிமுக தேர்தலுக்குப் பின் மீண்டும் ஒன்றாக இணைந்தது. ஜானகி இராமச்சந்திரன் அரசியலிருந்து ஓய்வு பெற்றார்.
ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளரானார். பின் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக - காங்கிரசு கூட்டணி தமிழகத்தில் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியது. மத்தியில் ஜனதா தளத்தின் வி. பி. சிங் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சி அமைந்தது. விரைவில் வி. பி. சிங் அரசு கவிழ்ந்து, காங்கிரசின் ஆதரவுடன் சமாஜ்வாடி சனதா கட்சித் தலைவர் சந்திரசேகர் பிரதமரானார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற காரணம் காட்டி அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர், திமுக அரசைக் கலைக்க வேண்டுமென மத்திய அரசை வற்புறுத்தினர். யூன் 1990 இல் சென்னையில் ஈபிஎல்ஆர்எவ் தலைவர் பத்மநாபா மற்றும் அவரது கூட்டாளிகள் வி. புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்தக் கொலையை மேற்கோள் காட்டி மத்திய சட்ட அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி தமிழகத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைத்தார். சனவரி 1991 இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு யூன் 1991 இல் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
21 - 05 - 1991 இல் தேர்தல் பரப்புரைக்குச் ஸ்ரீ பெரும்புதூர் சென்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் பிரதமர் இராசீவ் காந்தி தாணு என்ற பெண் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்படுகிறார். இந்தக் கொலை ஏற்படுத்திய அனுதாப அலையை காங்கிரஸ் கட்சியோடு தேர்தல் கூட்டணி வைத்திருந்த ஜெயலலிதா தனது தேர்தல் பரப்புரைக்குத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டார். இராசீவ் காந்தி கொலைக்கு திமுகதான் காரணம் என ஜெயலலிதா குற்றம் சாட்டினார். திமுக ஆதரவாளர்கள் தாக்கப்படுகிறார்கள். அறிவகம் தாக்குதலுக்கு உள்ளானது. உண்மையில் இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது. இதனைக் கூட தமிழக மக்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. இது இவ்வாறு இருக்க ,
தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது 164 தொகுதிகளை அதிமுக கைப்பற்றித் தனிப் பெரும்பான்மையோடு பதவிக்கு வந்தது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 60 தொகுதிகளில் வெற்றிபெற்றது. திமுக 2 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றுப் படுதோல்வி அடைந்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவை 24 - 06 - 1991 அன்று பதவி ஏற்றது. செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா "நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், மலிவு விலை மதுக்கடைகளை ஒழிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதன்படி, யூலை மாதம் 16 ஆம் நாளுடன் மதுக்கடைகள் மூடப்படும்"என அறிவித்தார். காலம் உருண்டோடியது. 1996 இல் நடந்த தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தது. 1991 - 96 ஆட்சியில், பொது மக்களுக்கு ஏற்பட்ட கடும் அதிருப்தியே 1996 இல் அதிமுக ஆட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. அடுத்ததாக திமுக ஆட்சிக்கு வந்த பின், முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி, 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்குக் காரணம், ஜெயலலிதா தான்' என்றார்.
1991 - 96 கால கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக உரூபா 66.65 கோடி சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 14.6.1996 அன்று சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்தார். 27.6.1996 அன்று அவரது முறைப்பாட்டை விசாரிக்குமாறு தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை மாநாகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கைத் துறை ரீதியாக தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையின் ஐ.ஜி யாக இருந்த வி.சி.பெருமாள் விசாரணை நடத்தி வந்தார். அதனை அடுத்து இந்த வழக்கில் குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதி, ஜெயலலிதா மீது 18.9.1996 இல் முதல் தகவல் அறிக்கையைப் ( FIR ) பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்.
ஜெயலலிதா முதல்வர் ஆவதற்கு முன்பாக (1.7.1991-க்கு முன்பு) அவருடைய சொத்து மதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53 ஆகும். ஆனால் வழக்கு காலத்திற்கு பிறகு (1.7.1991 முதல் 30.4.1996 வரை) சொத்து மதிப்பு 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 ஆக சொத்து அதிகரித்திருந்தது. எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார் என்பது நிரூபணமானது. மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்துக் குவிக்க உடந்தையாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீதும் ஊழல் தடுப்பு சட்டம் 13(1) ( ஈ) பிரிவில் வருமானத்துக்கு அதிகமாகாச் சொத்துக் குவித்தது மற்றும் 13(2) அதிகாரத்தைத் தவறாகப் பயன்டுத்திய குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 120(பி) கூட்டு சதி தீட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த இடத்தில் ஜெயலலிதாவின் இராஜகுருவாக இருந்த சுப்பிரமணிய சுவாமிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் இருந்த எலியும் - பூனை உறவைச் பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் ஜெயலலிதா மீது நட்பாகத்தான் சுப்பிரமணியன் சுவாமி இருந்தார். ஜெயலலிதாவும் திமுகவுக்கு எதிராக சுவாமியைத்தான் பயன்படுத்தி வந்தார். பின்னர் இருவரும் திடீரென எதிரியாகி விட்டனர். சொத்துக் குவிப்புத் தொடர்பாக ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத் தொடர அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி மூலம் அனுமதி வாங்கிய சுவாமியைப் பார்த்து எல்லோரும் திகைத்து நின்றனர். ஆனால் அந்தத் திகைப்பு நெடுநேரம் நீடிக்கவில்லை. மீண்டும் ஜெயலலிதாவுடன் நட்பானார் சு. சுவாமி. தேசிய அரசியலில் ஜெயலலிதாவின் தூதராக மாறினார். வாஜ்பாய் அரசில் ஜெயலலிதா இணைய சு. சுவாமிதான் முக்கிய காரணம்.
ஜெயலலிதா தனக்கு எதிராகச் செயல்பட்டவர் என்பதையும் பாராமல், சு.சுவாமியின் பிறந்த நாளன்று அவரது கட்சி அலுவலகத்துக்கே நேரில் போய் ஜெயலலிதா வாழ்த்தினார். சுவாமிக்கு விலை உயர்ந்த போர்ட் ஐகான் கார் ஒன்றையும் பரிசாகக் கொடுத்தார். 1998 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஆதரவோடு மதுரை தொகுதியில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட சுவாமி 266,202 (40.48) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் போயஸ் தோட்டத்தின் இராஜகுரு என்ற அளவுக்கு சுவாமி மதிக்கப்பட்டார். உண்மையில் ஒரு கால கட்டத்தில் சுவாமியை அரசியலில் வளர்த்து விட்டவர் ஜெயலலிதா என்பதில் அய்யம் இல்லை. இதே தொகுதியில் 2004 இல் போட்டியிட்ட சுவாமி 12,009 வாக்குகளைப் பெற்றுக் கட்டுக்காசை இழந்தது குறிப்பிடத்தக்கது.
சுப்பிரமணியன் சுவாமி மூலமாக சோனியாவும் ஜெயலலிதாவும் வாஜ்பாய் அரசைக் கவிழ்க்க முதன் முறையாக 1997 இல் ஒன்று சேர்ந்தனர். டில்லியில் உள்ள அசோகா ஓட்டலில் ஜெயலலிதா நடத்திய விருந்தில், சோனியாவும் பங்கேற்றார். பின் இருவரும் சேர்ந்து, வாஜ்பாய் அரசை லோக்சபாவில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தனர். ஆனால் என்ன காரணத்தாலோ தெரியவில்லை ஜெயலலுதா மீது மீண்டும் கோபம் கொண்டார் சுவாமி. மீண்டும் இருவரும் எலியும் - பூனையாக மாறினர். அதன் பின்னர் தீவிரமாகச் செயல்பட்ட சு. சுவாமியை அதிமுகவினர் போகுமிடமெல்லாம் தாக்க முற்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த சு. சுவாமியை அதிமுக மகளிர் அணியினர் சேலையைத் தூக்கிக் காட்டிக் கொடுத்த வரவேற்பு இன்றைக்கும் மறக்க முடியாத காட்சி.
இந்த வழக்குக் குறித்து தீர்ப்புக்கு முன்பு ஏ.என்.ஐ க்கு சுவாமி அளித்த செவ்வியில், இந்த வழக்கிலிருந்து நிச்சயம் ஜெயலலிதா தப்ப முடியாது. காரணம், இதில் வலுவான ஆதாரங்கள் உள்ளன. முதல்வர் ஜெயலலிதா தவறு செய்திருப்பது உண்மை. இந்த வழக்கில் எல்லாமே தெளிவாக உள்ளன. எதையும் மூடி மறைக்க முடியாது. அவரால் இனியும் யாரையும் ஏமாற்ற முடியாது என்று கூறியிருந்தார். மொத்தத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அரசியலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்த சுவாமி காரணமாகி விட்டார். சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் 15 காவல் ஆய்வாளர்கள் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் முதல்கட்ட விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை ஆகியவை 2003 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. இதனிடையே, 2001 இல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். இதனை அடுத்து திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் சென்னையில் வழக்கு விசாரணை தொடர்ந்தால் ஜெயலலிதா அரசின் தலையீடு இடம்பெறுவது தவிர்க்க முடியாமல் இருக்கும் எனவே வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறு 2003.11.18 அன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தொடுத்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவ்வழக்கைப் பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டது.
ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், பிறழ் சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் இறுதிவாதம் ஆகியவை கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. அதன்படி, பெங்களூரில் உள்ள மாநகர சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து இந்த வழக்கை விசாரிக்க கர்நாடக அரசு ஏற்பாடு செய்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த 2004 .02. 14 ஆம் நாள் தொடங்கியது. மொத்தம் 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு யூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை சிங்கார வேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஏறி இறங்கியிருக்கிறது.
சென்னை தனி நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் தொடங்கி ஆறுமுக பெருமாள் ஆதித்தன், அன்பழகன், இராஜமாணிக்கம், மதிவாணன் வரை விசாரணை நடந்தது. பின்னர் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பச்சப்புரே, கிருஷ்ணப்பா, மனோலி, ஆன்டின், மல்லிகார்ஜுனய்ய, சோமராஜ், கிருஷ்ண, முடிகவுடர், ஜான் மைக்கேல் டி குன்ஹா வரை 14 நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்துள்ளனர். ஜெயலலிதா தரப்பு அரசு வக்கீல் ஆச்சார்யாவுக்கு ஆசை காட்டி வளைக்க முயன்றது. அவர் மறுத்ததால் அப்போது மாநிலத்தில் இருந்த பாஜக அரசு மூலம் அவரைத் தொந்தரவு செய்தது ஜெயலலிதா படை. "என் கடைசிக் காலத்தில் மன நிம்மதி முக்கியம்" என 2012 ஓகஸ்ட் மாதம் ஜெயலலிதாவின் வழக்கில் இருந்து விலகிக்கொண்டார். ஜெயலலிதா மீதும் பாஜக அரசு மீதும் குற்றம் சாட்டிவிட்டே சென்றார். 2013 பெப்ரவரி மாதம், புதிய சிறப்பு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு செப்தெம்பர் மாதம் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றார்.
2011 ஒக்தோபர் மாதம், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் தோன்றி வாக்குமூலம் அளித்தார். இந்த விசாரணையில், முதல்நாள் 567 கேள்விகளுக்குப் பதிலளித்தார். மீதமுள்ள கேள்விகள் நொவெம்பர் 8 ஆம்நாள் கேட்கப்படும் என்று நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுதாக்கல் செய்ய அது தள்ளுபடி செய்யப்பட்டது. நொவெம்பர் 9 ஆம் நாள் மீதமிருந்த 192 கேள்விகளுக்கு என மொத்தம் 1,339 கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
2013 ஒக்தோபர் 31 இல் புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் டி குன்ஹா நியமிக்கப்பட்டார். பெங்களூரு தனி நீதிமன்றத்தில் வழக்கு கடந்த 10 ஆண்டுகளாகப் பல நீதிபதிகளால் விசாரணை செய்யப்பட்டு வந்தாலும் நீதிபதி டி. குன்ஹா அதிரடிகளைக் காட்டினார். வீணான மனுக்கள், காலதாமதம், இழுத்தடிப்பு எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் அதுவரை காலமும் காட்டிவந்த 'விளையாட்டுகள்' குன்ஹாவிடம் அவியவில்லை.
நீதிபதி டி குன்ஹா குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313 இன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது வாக்குமூலங்களை பதிவு செய்தார். கடந்த ஓகஸ்ட் 27 ஆம் நாளோடு வாதங்கள் நிறைவடைந்தன. அரசுத் தரப்பு வழக்குரைஞரான பவானிசிங் 17 நாள்கள் தனது வாதத்தை முன்வைத்தார்.
ஜெயலலிதா தரப்பில் வழக்குரைஞர் பி.குமார் தனது தரப்பு வாதங்களை 25 நாள்கள் பதிவு செய்தார். பெங்களூரு நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானிசிங், ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களின் பட்டியலைத் தாக்கல் செய்தார். இவை அனைத்துமே சு.சுவாமியால் தயாரிக்கப்பட்டவை. அவர் நேர்த்தியாக பல ஆதாரங்களை திரட்டியும் இருந்தார்.ஜெயலலிதா இந்த வழக்கை முன்னரே தமிழக்த்தில் வைத்தே நிறைவுக்கு கொண்டு வந்து இருக்கலாம். பல ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்து இறுதியில் அது பக்கத்து மாநிலத்திற்கு மாற்றப்பட்டதும் பெரும் சிக்கலில் கொண்டுபோய் விட்டுள்ளது என்று தான் கூறவேண்டும். இதுவே நடந்து முடிந்த ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் முழு விபரம்.
http://www.athirvu.com/newsdetail/1164.html

Geen opmerkingen:

Een reactie posten