எனது காணியில் இராணுவத்தினர் வசந்த மாளிகை கட்டி குடியேறுவார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள ஆசைப்பிள்ளையேற்றப் பகுதியிலுள்ள 50 ஏக்கர் காணியின் உரிமையாளர் தம்பிராசா மகேஸ்வரி தெரிவித்தார். மிருசுவில் ஆசைப்பிள்ளையேற்றத்திற்கு அருகில் படைமுகாம் அமைந்துள்ள 50 ஏக்கர் காணியினை சுவீகரிப்பதற்காக அதனை அளவீடு செய்யும் பணிகள் நிலஅளவையாளர் திணைக்களத்தினால் இன்று முன்னெடுக்கப்பட இருந்தது. இதனை, மகேஸ்வரியும், அவரது உறவினர்களும் இணைந்து போராட்டம் நடத்தித் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தம்பிராசா மகேஸ்வரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 1969ஆம் ஆண்டு எனது கணவரால் இப்பிரதேசத்தில் 53 ஏக்கர் காணி வாங்கப்பட்டு எனது பெயரில் எழுதப்பட்டது. அவ்வேளை சாவகச்சேரி மக்களுக்கு சுடுகாடு இல்லாமையால் எங்களது காணியில் 3 ஏக்கர் காணியினை சுடுகாட்டுக்காக சாவகச்சேரி பிரதேச சபைக்கு அன்பளிப்பு செய்தோம். அதன் பின்னர் மிகுதி 50 ஏக்கர் காணி எனது பெயரில் இருந்தது. அடுத்து வந்த காலப்பகுதியில் எனது பிள்ளைகளுக்கு இக்காணியை பகிர்ந்து எழுதி இருந்தேன். கடந்த 2000ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக நாம் இடம்பெயர்ந்த பின்னர் மீண்டும் எமது ஊருக்கு திரும்பிய போது எமது காணியின் சிறு பகுதியில் சிறிய இராணுவ முகாம் அமைந்திருந்தது.
இராணுவ முகாம் அமைந்திருந்தமையால் அக்காணியை நாம் பராமரிக்காமல் விட்டு விட்டோம். யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டு இராணுவம் முகாம் அமைந்துள்ள காணியை விட்டு மிகுதியாக உள்ள காணிகளை துப்பரவு செய்யும் பணிகளை மேற்கொண்டோம். சுமார் 5 இலட்சம் ரூபாய் செலவழித்து பற்றைக்காடுகளாக இருந்த எமது காணியை இயந்திரங்கள் (பெக்கோ) கொண்டு துப்பரவு செய்தோம். எமது காணிகள் முழுமையாக துப்பரவு செய்து முடியும் தருவாயில், இராணுவத்தினர் வந்து இக்காணியை இராணுவ முகாம் அமைப்பதற்காக எடுத்து கொள்ளப் போவதாக கூறியதுடன் எம்மை மேலும் துப்பரவு பணி செய்யவிடாது தடுத்து நிறுத்தினர்.
அதனையடுத்து, அது தொடர்பாக நாம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்தோம். சிறிது காலத்தில் மனித உரிமை ஆணைக்குழுவினர் எம்மை அழைத்து அவர்கள் சட்டத்தின் பிரகாரம் தான் காணிகளை சுவீகரிக்கவுள்ளார்கள் அது தொடர்பில் எம்மால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியாது என கூறினார்கள். அதேவேளை கடந்த 2012ஆம் ஆண்டளவில் எம்மை யாழ்.பெருமாள் கோவிலுக்கு அருகிலுள்ள இடத்திற்கு இராணுவத்தினர் அழைத்து காணி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் சிங்களத்தில் எழுதிய கடிதமொன்றில் கையெழுத்து ஒன்றினை வாங்கிவிட்டு எம்மைத் திருப்பி அனுப்பினார்கள்.
இச்சம்பவம் நடைபெற்று ஒரு சில மாதங்களின் பின்னர், எமது காணியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இன்று எனது காணியில் சுமார் 40 ஏக்கரில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பல காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியது போல, எமது காணிகளில் இருக்கும் இராணுவத்தினரும் எமது காணியை விட்டு என்றோ ஒருநாள் வெளியேறுவார்கள் என நம்பியிருந்தோம். இராணுவத்தினர் எனது காணியில் வசந்த மாளிகை மாதிரி பாரிய இராணுவ முகாம் அமைத்து நிரந்தரமாக நிலைகொள்வார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை' என அவர் மேலும் தெரிவித்தார்.

 |
Geen opmerkingen:
Een reactie posten