காணியை அளந்தால் தீக்குளிப்போம் காணி உரிமையாளர்கள் ஆவேச எச்சரிக்கை…
எமது காணிகளை அனுமதி இன்றி அடாத்தாக அளவை யிட்டால் இந்த இடத்திலேயே நாம் தீக்குளிப்போம் இவ்வாறு ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர் அச்சுவேலியில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ள காணிகளின் உரிமையாளர்கள். நேற்று காணிகளை அளப்பதற்காக வந்திருந்த நில அளவையாளர்களிடமே இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காணிகளை அளப்பதற்காக வந்திருந்த காணி அளவையாளர், பிரதேச செயலரே தமக்கு காணிகளை அளவிடுமாறு உத்தரவிட்டார் என்று தெரிவித்தார். அதற்கு அங்கு குழுமியிருந்த மக்கள், “எங்களது காணிகளை எங்களது அனுமதியின்றி அளந்தால் இதிலேயே பெற்றோல் ஊத்தி தீக்குளிப்போம். எங்களின்ர மூண்டு நாலு பிள்ளகுட்டியள வளத்தது இந்த காணிக்க தோட்டம் செய்துதான்.
இப்ப வந்து காணி அளக்கினமாம். எங்கள மீறி அளந்தா இப்பவே பெற்றோல் ஊத்தி கொழுத்தி போட்டு எங்கட காணிக்க சாவம்” என்று ஆவேசமாகத் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/77040.html
புலிகளுடன் தனி நாட்டுக்காக போராடியது கூட்டமைப்பே: ஹெகலிய உறுமல்
நாட்டின் ஒற்றுமையினை ஏற்படுத்தும் நோக்கில் இணக்கப்பாடொன்றினை நோக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகர்கின்றதெனின் அது வரவேற்கத்தக்க விடயமே. பிரிவினையினை தூண்டாத வகையில் தொடர்ந்தும் கூட்டமைப்பு செயற்படுமாயின் அதற்கு அரசாங்கம் ஒருபோதும் தடையாக நிற்காது என அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நாம் ஒருபோதும் பிரிவினையைக் கோரவில்லை. இறைமையோடு வாழும் உரிமையினையே கோருகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள நிலையில் இக் கருத்து தொடர்பில் அரசாங்கத்திடம் வினவிய போதே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
நாட்டில் பிரிவினை வாதத்திற்கு துணை போகவில்லை என கூட்டமைப்பு குறிப்பிடுமாயின் அது முற்றிலும் பொய்யான விடயமே. கடந்த காலங்களில் நாட்டில் என்ன நடந்ததென்பதை நாமும் நன்றாக அறிந்து வைத்துள்ளோம். விடுதலைப் புலிகள் தனி நாட்டு கோட்பாட்டில் ஆயுதப் போராட்டத்தினை நடத்திய காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் பயங்கரவாதத்திற்கு துணை போனவர்கள் தான். அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் பிரிவினை வாதத்தினையே கோரி நின்றார்கள். எனினும் இன்று மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கின்றனர். எவ்வாறு இருப்பினும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாற்றம் ஒன்றினை எதிர்பார்ப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். நாட்டில் ஒற்றுமையினை ஏற்படுத்தும் நோக்கில் அமைதியை நோக்கி கூட்டமைப்பு நகர்கின்றதெனின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கருத்தில் உண்மை இருப்பின் அதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். நாட்டில் பிரிவினை வாதத்தினை தூண்டாத வகையில் இன ஒற்றைமைக்காக கூட்டமைப்பினர் செயற்பட முனைகின்றனர் என்றார்.
அச் செயற்பாட்டிற்கு அரசாங்கம் ஒரு போதும் தடையாக செயற்படாது.
இந்த நாட்டில் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். வடக்கில் பிரச்சினைகள் இல்லை என நாம் கருதவில்லை. வடக்கு தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளது. முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளது. சிங்கள மக்களுக்கும் சிக்கல்கள் உள்ளது. அவை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில கோரிக்கைகளில் நியாயம் உள்ளது. அவற்றினை ஏற்றுக்கொள்கிறோம். அதேபோல் பல விடயங்களில் அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் முரணான வகையிலேயே கூட்டமைப்பு செயற்படுகின்றது.
அதேபோல் நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் மிகக் கவனமாகச் செயற்பட்டு வருகின்றது. தேசிய பாதுகாப்பினை சீரழிக்கும் வகையில் கூட்டமைப்பு செயற்படுமாயின் அதற்கு ஒரு போதும் நாம் இடமளிக்கமாட்டோம். எனினும் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதையே செய்கின்றது. சர்வதேச அமைப்புக்களுடனும் புலம்பெயர் இயக்கங்களுடனும் இணைந்து தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பல விடயங்களை இவர்கள் செய்து வருகின்றனர். அதேபோல் யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளில் வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றக் கோருவது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும். யுத்தம் முடிவடைந்தவுடன் வடக்கில் இருந்து இராணுவத்தினரையும் விட இன்று அதிகளவிலான இராணுவத்தை நாம் குறைத்து விட்டோம். தற்போது இருக்கும் இராணுவம் வடக்கின் பாதுகாப்பிற்காக மட்டுமே. இதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/77043.html
Geen opmerkingen:
Een reactie posten