மத்தல விமான நிலையத்தை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு விமானிகளை பயிற்றுவிக்கும் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக தெரியவருகிறது.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன அண்மையில் வெளியிட்ட தகவல் மூலம் இது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் எரோ ஸ்பேஸ் நிறுவனம் இலங்கையின் சீனேட் நிறுவனம் இணைந்து விமான பயிற்சி பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்கள் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளதாகவும் இதற்கு இடத்தை ஒதுக்குமாறு மத்தல விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு தான் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியிருந்தார்.
மத்தல விமான நிலையத்திற்கு சர்வதேச விமானங்கள் வருவதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
சர்வதேச விமான நிலையம் ஒன்றில் விமான பயிற்சி பாடசாலைகள் நடத்தப்படுவதில்லை. விமானங்கள் பறக்காத பிரதேசத்தில் உள்ள விமான நிலையம் இதற்காக பயன்படுத்தப்படும்.
மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு விமானங்கள் வருவதில்லை என்பதாலேயே அங்கு விமான பயிற்சி பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் விமானங்களின் கேந்திர நிலையம் என்று கூறி நாட்டு மக்களின் பணத்தை செலவிட்டு நிர்மாணிக்கப்பட்ட மத்தல மகிந்த ராஜபக்ஷ விமான நிலையத்திட்டம் தோல்வியடைந்த திட்டம் என்பது தற்போது உறுதியாகியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் இந்த விமான நிலையம் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் இருந்து முன்வைக்கப்பட கூடிய குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கும் தந்திரமாக அரசாங்கம் இதனை மேற்கொண்டுள்ளதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
அதிர்ச்சியடைய வைத்த விமான நிலைய வருமானம்
மத்தல மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் மூலம் கடந்த மே மாதம் 16 ஆயிரம் ரூபாவை மாத்திரமே வருமானமாக கிடைத்துள்ளதாக அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா எழுப்பிய கேள்விக்குக்கு பதிலளித்த, சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இதனை கூறியுள்ளார்.
அத்துடன் கூடியளவான வருமானத்தை பெற்ற நீண்டகாலம் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தல விமான நிலையம் மே மாதத்தில் 16 ஆயிரத்து 185 ரூபாவை வருமானமாக ஈட்டியது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து அரசாங்கம் கூறியது போல் இங்கிலாந்தின் கேட்விக் விமான நிலையத்திற்கு இணையான வருமானத்தை பெற எவ்வளவு காலம் எடுக்கும் என ஹர்ச டி சில்வா கேள்வி எழுப்பினார்.
அதற்கு இணையான வருமானத்தை பெற காலம் எடுக்கும் எனவும் இலங்கை மத்தல விமான நிலையத்தில் விமானங்களை இறக்குவது குறித்து சர்வதேச விமான நிறுவங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எனவும் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன குறிப்பிட்டார்.
மத்தல ஒரு நாள் அருங்காட்சியமாக மாறும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் கனவு காண்பதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தினார்.
கூடிய விரைவில் விமான நிலையம் அரசாங்கத்தின் இலாப ஈட்டும் திட்டமாக மாறும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckuz.html
Geen opmerkingen:
Een reactie posten