இனஅழிப்பு ஆதாரங்களை அணிதிரட்டும் ஒருங்கிணைக்கும் பணியில் இனஅழிப்புத் தடுப்பும், விசாரணை முயற்சிகளுக்கான மையம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 11:12.23 AM GMT ]
கடந்தாண்டு செப்டம்பர் 2013ல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் லண்டனில் மேற்கொள்ளப்பட்டிருந்த இனஅழிப்புத் தடுப்பு மாநாட்டினை தொடர்ந்து இந்த மையம் தோற்றம் பெற்றிருந்தது.
இந்த மையம் இனஅழிப்பினால் பாதிக்கப்பட்ட அல்லது இனஅழிப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள அனைத்து மக்களுக்கும் தனது சேவையை ஆற்றும் வகையில் சுயாதீனமாக இயங்கும் என தெரிவித்துள்ள இந்த மையத்தின் இயக்குனர் நாயகம் பேராசிரியர் எம். சொர்ணராஜா அவர்கள் இலங்கையில் நடந்த இனஅழிப்பில் கவனம் செலுத்துவதே இதன் உடனடிச் செயலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பேராசிரியர் எம். சொர்ணராஜா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலகத்தின் பல பாகங்களில் உள்ள மற்றைய தமிழ் அமைப்புகளால் ஏற்கனவே செய்யப்பட்ட வேலைகளை திரும்பவும் செய்ய நாம் விரும்பவில்லை. ஏற்கனவே சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் நாம் அதனை ஐ. நா. ம. உ. சபையினால் நிறுவப்பட்டுள்ள விசாரணைக் குழு உட்பட எந்த ஆணைக்குழுவிற்கோ, நீதிமன்றுக்கோ வழங்க முடியும்.
உங்களின் ஒத்துழைப்பை இது விடயத்தில் எதிர்பார்க்கிறோம். ஜூலை 1, 2014 முதல் இந்த ஆதாரங்களை திரட்டும் முயற்சியினை சுயாதீனமாகத் தொடங்கியுள்ளோம். . நீங்கள் விரும்பினால் எங்களால் சேகரிக்கப்படும் ஆதாரங்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்வோம்.
இந்தச் சந்தர்பத்தில் மையம் பின்வரும் மூன்று முக்கிய பணிகளை செய்வதில் கவனம் செலுத்தும் என்பதனை தெரிவிக்க விரும்புகிறேன்.
(அ) உலகின் எந்த பகுதியிலும் ஏற்பட்ட இனஅழிப்புக்கான அல்லது இனஅழிப்பு அச்சுறுத்தலுக்கான ஆதாரங்களை திரட்டுதல். இலங்கைத் தமிழருக்கெதிராக இனஅழிப்பில் ஈடுபட்டவர்களை பொறுப்புக் கூற வைப்பதே எமது முக்கிய கவனமாக இருக்கும். மிகவிரைவில் இதற்கான ஆதாரங்களை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து சேகரிக்கவிருக்கிறோம். இந்த முயற்சியின் போது பெறப்படும் அனுபவங்களை இனஅழிப்பு அச்சுறுத்தலுக்குட்படும் ஏனைய மக்களுடனும் பகிர்ந்து கொள்ளப்படும்.
(ஆ) பல்வேறு நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின்முன் வழக்குத் தொடுக்கும் நுட்பங்கள் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டு அவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
(இ) இனஅழிப்பு பற்றிய சட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும். எதிர்காலத்தில் இனஅழிப்பு நிகழாமல் தடுக்கவும் கடந்த காலங்களில் இனஅழிப்பு நிகழ்த்தியவர்களை பொறுப்புக் கூற வைக்கக் கூடியதுமான சட்டம் ஒன்றை உருவாக்க ஆக்கபூர்வமாக தேடுதல் செய்யப்படும். இனஅழிப்பினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளுக்கான மையத்தின் இயக்குனர் நாயகம் பேராசிரியர் எம். சொர்ணராஜா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இச்செயல்மையத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்ற ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் குறித்த 0044 786 913 30 73 இந்த தொடர்பிலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjvy.html
ஆஸி, குடிவரவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்கிறார்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 11:20.07 AM GMT ]
150க்கும் மேற்பட்ட இலங்கை புகலிட கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்கு வந்த படகில் சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்ற சர்ச்சைக்கு இன்னும் முடிவு தெரியாத நிலையில் அவரது இந்த இலங்கை விஜயம் இடம்பெறவுள்ளது.
மொரிசன் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வருவார் என எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வரும் அவர் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
கடந்த வாரம் அவுஸ்திரேலியா கடற்பரப்பிற்குள் படகில் வந்த இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால் மொரிசன் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இது குறித்து கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
அதேவேளை புகலிட கோரிக்கையாளர்கள் சென்ற படகை தாம் காவலில் எடுக்கவில்லை என இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
இதனிடையே படகில் சென்ற புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பிலான செய்திகள் குறித்து ஐ.நாவின் அகதிகளுக்கான நிறுவனம் தனது கவலைகளை வெளியிட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjvz.html
தர்கா நகரை வந்து பார்வையிடுமாறு ஆஸி.பிரதமரை அழைக்கிறார் அசாத் சாலி
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 11:52.52 AM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
இலங்கையின் புகலிட கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் விபத்துக்கு உள்ளானது மற்றும் அந்த படகுக்கு என்ன நடந்து என்பது பற்றி கருத்து வெளியிட்ட அசாத் சாலி, அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இந்த சம்பவத்துடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகிப்பதாக குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவுஸ்திரேலியா பிரதமர், இலங்கை அரசாங்கம் குறித்து புகழ்பாடி வருகிறார். இலங்கை அமைதியான சூழல் நிலவும் நாடு என்றும் கூறுகின்றார். அவர் தர்கா நகருக்கு வந்தால் நாட்டில் நிலவும் அமைதியான சூழலை காணமுடியும் எனவும் அசாத் சாலி சுட்டிக்காட்டினார்.
மேலும், மத விவகார பொலிஸ் பிரிவில் நான் 284 முறைப்பாடுகளை செய்தேன். அவற்றில் எந்த முறைப்பாடு குறித்தும் விசாரணை நடத்தப்படவில்லை.
பொசன் பௌர்ணமி தினத்திற்கு முன்னர் பொலிஸ் பிரிவை கலைக்க வேண்டும் என்று கூறிய இராவணா பலய தற்போது ஏன் அமைதியாக இருக்கின்றது?.
அளுத்கமவில் பொதுபல சேனா கூட்டத்தை நடத்துவதற்கு முதல் நாள் அந்த கூட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு நான் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை கேட்டுக்கொண்டேன்.
நான் விடுத்த இந்த கோரிக்கை பற்றி அமைச்சர் டியூ.குணசேகரவும் நாடாளுமன்றத்தில் கூறினார்.
இவை குறித்து கருத்துக்களை வெளியிடுவதால் அமைச்சர் ஹக்கீம் மற்றும் நான் அடிப்படைவாதிகள் என்றால் எங்களை கைது செய்யுங்கள்.
அமைச்சர்களும், செயலாளர்களும் கோடிக்கணக்கில் நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலுத்த பணம் இல்லை என்றாலும் கார் ஓட்டப் பந்தயங்களை நடத்த அரசாங்கத்திடம் பணம் உள்ளது எனவும் அசாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjv0.html
விடுதலைப் புலிகளின் நினைவு தினங்களையும் அபகரிக்க நினைக்கும் இராணுவம்: பொ.ஐங்கரநேசன்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 12:25.36 PM GMT ]
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் பரவிப்பாஞ்சான் மக்களை அவர்களின் சொந்த இடத்தில் மீளக்குடியேற அனுமதிக்கக் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள் தங்களது தற்கொலைப் போராளிகள் நினைவாக யூலை 5ஆம் திகதியைக் கரும்புலிகள் தினமாகக் கொண்டாடி வந்துள்ளார்கள்.
ஒப்பற்ற தியாகங்களைச் செய்த அவர்களின் நினைவுகள் தொடர்ச்சியாக மக்களின் மனங்களில் நிலைபெற்றுவிடக்கூடாது என்ற நோக்கில் யாழ். மாவட்டத்தில் இராணுவம் இந்தத் திகதியில் எல்லே விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்திருக்கிறது.
கரும்புலிகள் தினத்தில் விளையாட்டுக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்தது மாத்திரமல்லாது, இந்நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும்படி எமது முதலமைச்சரிடம் வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்கள்.
நமது முதலமைச்சர் சொன்ன பதிலை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். “தனிப்பட்ட ரீதியில் உங்களுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், நீங்கள் என்னிடம் இராணுவத்தினராக வந்துள்ளீர்கள். இராணுவத்தை எங்கள் இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கோரிக்கொண்டு இருக்கின்ற நான் எப்படி இராணுவத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும்” என்று பதிலளித்திருக்கிறார்.
வடக்கே காங்கேசன்துறையில் இருந்து கிழக்கே சம்பூர் வரை பொது மக்களின் காணிகளை இராணுவம் அபகரித்து வைத்திருக்கிறது.
விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள் என்பதற்காக அவர்களது பண்ணைகளில் எல்லாம் இராணுவமே இன்று நிலைகொண்டிருக்கிறது. இங்குள்ள பழமர வகைகள் எல்லாம் திக்கெட்டிலும் இருந்து விடுதலைப் புலிகள் கொண்டுவந்து சேர்த்த அரிய நல்லின வகைகள்.
இந்தத் தாவர வளங்கள் எமக்குச் சொந்தமானவை. ஆனால், இங்கு நிலை கொண்டிருக்கும் படையினர் இந்த அரிய தாவரங்களையெல்லாம் பதிவைத்து தங்கள் தளபதிகளுக்கும் தென்னிலங்கையில் உள்ள உறவினர்களுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுமக்களின் நிலங்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கக் கோரியும் எமது பண்ணைகளை எங்களிடம் ஒப்படைக்கக் கோரியும் எத்தனையோமுறை கேட்டுவிட்டோம். எத்தனையோ கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்திவிட்டோம்.
ஆனால், இலங்கை அரசாங்கத்தின் காதுகளிலோ, இராணுவத்தினரின் காதுகளிலோ எங்களது கோரிக்கைகள் விழுவதாகத் தெரியவில்லை. எமது நிலங்கள் எங்கள் கைகளுக்குக் கிடைக்கும்வரை தொடர்ந்தும் போராடுவோம் எனத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாணசபை உறுப்பினர்கள் க.சிவாஜிலிங்கம், து.ரவிகரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjv1.html
Geen opmerkingen:
Een reactie posten