தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 juli 2014

ஐ.நா. விசாரணைக் குழு இந்தியா வர வீசா வழங்க வேண்டும்!- மோடிக்கு ஜெயலலிதா வலியுறுத்தி கடிதம்!

 இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா. விசாரணைக் குழு இந்தியா வர விசா வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஐ.நா. மனித உரிமை ஆணையர், நவநீதம்பிள்ளை, கடந்த ஏழு ஆண்டுகளாக இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, ஐ.நா. விசாரணைக் குழுவை நியமித்தார்.
இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த உள்ள இந்த ஐ.நா. குழுவிலே 3 நிபுணர்களும், 13 உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஐ.நா. விசாரணைக் குழு இந்தியாவுக்குள் வந்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்தியா அவர்களுக்கு வீசா வழங்க மறுத்து விட்டதாக, இலங்கை மனித உரிமை ஆணையர், பிரதிபா மகாநாமஹேவா தெரிவித்திருக்கிறார்.
இந்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க மறுத்ததால், இலங்கையின் நெருங்கிய நாடுகளிலே இருந்து விசாரணையைத் தொடங்க ஐ.நா. குழு முடிவு செய்தது. அந்த அளவில் இந்தியா மிகவும் முக்கியமான நாடு. ஆனால் இந்தியா விசாரணைக் குழுவையே அனுமதிக்கவில்லை.
இந்தியா ஐ.நா. குழுவுக்கு விசாவை மறுத்திருப்பது, இந்திய தலைமையிடமிருந்து கிடைத்திருக்கும் ஒரு முக்கியமான அடையாளமாகக் கருதுவதாக இலங்கை மனித உரிமை ஆணையர் தெரிவித்திருக்கிறார். இதனால், ஐ.நா. விசாரணைக் குழு தெற்காசிய நாடுகளுக்கு வெளியிலே விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது.
உலக அளவில் நியூயோர்க், பாங்கொக், ஜெனீவா ஆகிய மூன்று இடங்களில் மையங்களை அமைத்து, அங்கிருந்தவாறு இலங்கையில் உள்ள சாட்சிகளிடம் இணையதளம், செயற்கைக்கோள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் மூலம் விசாரணையை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஐ.நா. விசாரணைக் குழு இந்தியா வர வீசா மறுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, "இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக கொடூரமான செயல்களில் ஈடுபட்ட இலங்கை அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு கசப்பான ஏமாற்றமாக இருக்கும்.
எனவே நீங்கள் தயவு செய்து இந்த பிரச்சினையில் தலையிட்டு, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நியாயமான, நேர்மையான விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் ஐ.நா. விசாரணைக் குழு இந்தியா வர வீசா வழங்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjp5.html

Geen opmerkingen:

Een reactie posten