தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 juli 2014

ராஜபக்சவின் போர்க்குற்றத்திற்கு இந்தியா துணை போகிறது!- கருணாநிதி!

இலங்கை அரசிடம் தீர்வை நம்பவில்லை! வட-கிழக்கு இராணுவ மயமாகிவிடும்: வினோ எம்.பி
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 12:42.38 PM GMT ]
தமிழ்ச் சமூகத்தின் தீர்வை இலங்கை அசிடம் எதிர்பார்க்க முடியாது. இனி வரும் நாட்கள் வட-கிழக்கு முழுமை இராணுவமயமாகி விடும் என்பதில் மாற்றமில்லை என்கிறார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்.
எம்மால் இயன்ற வரை போராடுகிறோம் ஆனால் அவற்றில் எதனையும் இலங்கை அரசு கருத்தில் எடுப்பதாக தெரியவில்லை.
எதிர்காலத்தில் பிரிந்துள்ள தாயகத்தை இணைப்பதற்கு, இந்தியாவிற்கு தார்மீக கடமை உண்டு என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjp1.html
காஸா வன்முறைகளுக்கு இலங்கை கண்டனம்
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 01:43.17 PM GMT ]
கிழக்கு ஜெருசலேம் உட்பட பலஸ்தீனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து மனித உரிமை பேரவையில் நேற்று விசேட கூட்டம் கூட்டப்பட்டதை வரவேற்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அணிசேர அமைப்பின் சார்பில் ஈரான் ஊடாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இலங்கை அரசாங்கம் இதனை கூறியுள்ளது.
இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காஸா அதிகரித்து வரும் வன்முறைகள் காரணமாக ஏற்பட்டுள்ள உயிர் அழிவுகள், சொத்து சேதங்கள், அங்கு ஏற்பட்டுள்ள துன்பமான நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.
வன்முறைகளில் குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாள் கடந்து செல்லும் போது அப்பாவிகளில் உயிர் இழப்புகளை காணமுடிகிறது.
வன்முறை மற்றும் பொதுமக்களின் இழப்புக்கு காரணமான அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் இலங்கை கண்டிக்கின்றது.
அமைதியான முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி பிராந்தியத்தில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்ற எமது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு சாத்தியமுள்ளது என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கம், பாலஸ்தீனத்தின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தி பொதுமக்களை கொன்று வரும் இஸ்ரேலை இதுவரை கண்டிக்கவோ, அந்த நாட்டின் மீது குற்றம் சுமத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjp2.html
ராஜபக்சவின் போர்க்குற்றத்திற்கு இந்தியா துணை போகிறது!- கருணாநிதி
[ வியாழக்கிழமை, 24 யூலை 2014, 02:53.01 PM GMT ]
ராஜபக்சவின் போர்க்குற்றங்களுக்கும், அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கும் ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்கிறதோ என்ற வேதனை தமக்கு ஏற்படுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று விடுத்துள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கை வருமாறு:-
கேள்வி - ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு வீசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்திருக்கிறதே?
பதில் - இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. குழு, விசாரணை நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியா மற்றும் இதர நான்கு தெற்காசிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக இலங்கைக்கு ஐ.நா. விசாரணைக் குழுவை அனுப்புவதற்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஐ.நா. மனித உரிமை ஆணையர், நவநீதம்பிள்ளை, கடந்த ஏழு ஆண்டுகளாக இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, ஐ.நா. விசாரணைக் குழுவை நியமித்தார்.
இலங்கையின் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த உள்ள இந்த ஐ.நா. குழுவிலே 3 நிபுணர்களும், 13 உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஐ.நா. விசாரணைக் குழு இந்தியாவுக்குள் வந்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்தியா அவர்களுக்கு வீசா வழங்க மறுத்து விட்டதாக, இலங்கை மனித உரிமை ஆணையர், பிரதிபா மகாநாமஹேவா தெரிவித்திருக்கிறார்.
இந்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க மறுத்ததால், இலங்கையின் நெருங்கிய நாடுகளிலே இருந்து விசாரணையைத் தொடங்க ஐ.நா. குழு முடிவு செய்தது. அந்த அளவில் இந்தியா மிகவும் முக்கியமான நாடு. ஆனால் இந்தியா விசாரணைக் குழுவையே அனுமதிக்கவில்லை.
இந்தியா ஐ.நா. குழுவுக்கு வீசாவை மறுத்திருப்பது, இந்திய தலைமையிடமிருந்து கிடைத்திருக்கும் ஒரு முக்கியமான அடையாளமாகக் கருதுவதாக இலங்கை மனித உரிமை ஆணையர் தெரிவித்திருக்கிறார். இதனால், ஐ.நா. விசாரணைக் குழு தெற்காசிய நாடுகளுக்கு வெளியிலே விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது.
உலக அளவில் நியூயார்க், பாங்கொக், ஜெனீவா ஆகிய மூன்று இடங்களில் மையங்களை அமைத்து, அங்கிருந்தவாறு இலங்கையில் உள்ள சாட்சிகளிடம் இணையதளம், செயற்கைக்கோள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் மூலம் விசாரணையை நடத்தி வருகிறது.
இதற்கிடையே கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. வெளியுறவுக் கொள்கைப் பிரிவு தேசிய அமைப்பாளர் சேஷாத்ரி சாரி, முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோரை உள்ளடக்கிய குழுவினருடன் சென்ற சுப்பிரமணிய சுவாமி கொழும்பில் இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்த போது, ’பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கை சர்வதேச நலனை கருத்தில் கொண்டுதான் அமையுமே தவிர, பிராந்திய பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அமையாது.
தமிழ்நாட்டைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. இலங்கையில் நிலவும் உண்மை நிலை என்ன என்பதைக் கண்டறிய இலங்கைக்கு வருமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நான் கேட்டுக் கொள்வேன்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக மற்ற நாடுகள் குற்றம் சாட்டப்படுவது குறித்து நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. முந்தைய காலத்தைக் காட்டிலும் இலங்கைக்கு ஆதரவு அளிக்க இந்திய அரசு தயாராக இருக்கிறது. ஆகவே மனித உரிமை மீறல் பிரச்சினையில் இலங்கை அரசு கவலை கொள்ளத் தேவையில்லை.
மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை. தீவிரவாத அமைப்பை நீங்கள் அடியோடு ஒழித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.
இதை நினைக்கும்போது மனித உரிமை மீறல் பிரச்னை என்பது அவ்வளவு பெரிதாகத் தெரியவில்லை’ என்றெல்லாம் சுப்பிரமணிய சுவாமி கூறியதாக நாளேடுகள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நரேந்திர மோடி, பா.ஜ.க. அரசு அமையுமேயானால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறியிருந்தார்.
ஆனால் மோடி சொன்னதற்கு மாறாக இலங்கைப் பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் அரசின் நிலைப்பாட்டையே இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு தற்போது ஐ.நா. விசாரணைக் குழு இந்தியாவுக்குள் வந்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்தியா அவர்களுக்கு வீசா வழங்க மறுத்திருப்பது சிங்களப் பேரினவாத ராஜபக்சவின் போர்க்குற்றங்களுக்கும், அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கும் ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்கிறதோ என்ற வேதனையைத் தருகிறது.
எனவே இந்திய அரசு இலங்கை மீதான தனது கருத்தினை வெளிப்படுத்த வேண்டுமென்பதோடு, போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்கும் முடிவினை மேற்கொள்ள வேண்டுமென்று உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRYLcjp4.html

Geen opmerkingen:

Een reactie posten