தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 juli 2014

முஸ்லிம்கள் மீதான வன்முறையும் அதன் பின்னணியும்

பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள வன்முறைகளுக்குப் பின்னால் உயர்மட்ட இரும்புக் கரம் உள்ளதாக சில இரகசியத் தகவல்கள் கசிந்துள்ளன.
குறித்த வன்முறை பற்றிய செய்திகளின் உண்மைத் தன்மைகளை வெளியிடக் கூடாது என்ற உத்தரவொன்றும் உள்ளது. அதனால் இந்தத் தகவல்களில் பலவற்றைத் தணிக்கைக்கு உட்படுத்தி சிலவற்றை மட்டும் தருகின்றோம். இந்தச் செய்தியை அண்டை நாட்டு உளவு அதிகாரிகளும் ஊர்ஜிதம் செய்துள்ளார்கள்.
பாரிய இனக்கலவரத்திற்குத் திட்டம்
கடந்த 13.04.2014 ஆம் திகதி ஞாயிறு வார வெளியீட்டில் “ஐ.நா.விசாரணையும் இனக்கலவர முஸ்தீபும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். அந்த ஆய்வில் நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாரிய இனக்கலவரமொன்றிக்கு சிறுபான்மை மக்கள் முகம் கொடுக்க வேண்டிய அபாயத்தில் உள்ளார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த நினைவு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஐக்கியத்திற்கான மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றும் போது 1915,1958,1983 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இனக்கலவரங்களை விட மிகவும் பாரிய கலவரத்தைச் சிலர் நடத்துவதற்கு முயற்சிக்கின்றன என்று பகிரங்கமாகவே ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தக் கலவரத்தை தடுப்போம் என்றோ அல்லது எனது ஆட்சியில் அப்படியெல்லாம் நடக்க விடமாட்டேன் என்றோ ஜனாதிபதி சொல்லவில்லை என்பதை உற்று நோக்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதியின் இனக்கலவர எச்சரிக்கையை நாம் வெறும் எச்சரிக்கையாக மட்டும் பார்க்கக் கூடாது.
ஜெனீவா தீர்மானம் சூடுபிடிக்குமானால் இனக்கலவர சூடும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக நாம் சுட்டிக் காட்டியிருந்தோம். அத்துடன் ஜெனீவாத் தீர்மானத்திற்குப் பழிதீர்க்கும் நடவடிக்கையாகவே இந்த இனக்கலவர எச்சரிக்கை என்பதை எவரும் மறந்து விடக் கூடாது என்றும் அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தோம். அதுதான் நடந்துள்ளது.இன்னும் நடக்கவுள்ளது.
ஐ.நா மன்ற விசாரணை
இலங்கைக்குள் ஐ.நா மனித உரிமை விசாரணைக் குழு விரைவில் நுழையவுள்ளது. ஐ.நா மனித உரிமை விசாரணைக் குழு சட்ட வல்லுநர்கள் மற்றும் நியூஸிலாந்தின் புகழ்பெற்ற முன்னாள் பெண் நீதிபதி டேம் சில்வியா கார்ட்ரைட் ஆகியோர்கள் இந்த விசாரணைக் குழுவில் முக்கிய இடம் பெறுகின்றார்கள்.
இதே நேரம் இந்தக் குழுவை இலங்கைக்குள் வரவிட மாட்டோம் என்று இன்னும் இலங்கை அரசு வீரம் பேசி வருகின்றது. ஆனால் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றது.
இப்போது ஐ.நா விசாரணைக் குழுவிடம் யாராவது சாட்சியமளிப்பது சட்ட விரோதமானது என்று அரசு அறித்துள்ளது. அதனால் ஐ.நா குழுவை சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கை அரசு அனுமதிக்கவுள்ளது. ஆனால் சாட்சியளிக்கும் சாட்சியாளர்களைத் தடுக்கவும் மிரட்டவும் அரசு துணிந்துவிட்டது. அதனால் ஐ.நா குழுவிடம் சாட்சியமளிக்கும் மக்களுக்கும் தன்னார்வத் தொண்டர் நிறுவன ஊழியர்களுக்கும் பாரிய உயிர் அச்சுத்தல் ஏற்பட்டுள்ளது.
எதற்காக இந்த இனக்கலவரம்
இந்த நிலையில்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களால் ஐ.நா மன்றக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது. விசாரிக்கக் கூடாது என்ற தீர்மான வரைவை முன் வைத்தார்கள். குறித்த தீர்மான வரைவு கடந்த வாரம் 144 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவாதம் நாடாளுமன்றத்தில் விவாதம் போகும் போது நாட்டு மக்கள் இந்த விவாதத்தில் கவனம் செலுத்தக் கூடாது என்பதில் அரசு அதிக கரிசனை காட்டியது.
காரணம் குறித்த விவாதம் சூடு பிடித்தால் விரைவில் நடக்கவுள்ள தேர்தல்களில் அரசுக்கு மிகவும் பின்னடைவு ஏற்படும் என்று அரசு அஞ்சுகின்றது. ஏற்கனவே நடந்து முடிந்துள்ள மேல், தென் மகாகாணங்களில் அரசுக்கு வாக்குச் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குச் சரிவை சரி செய்யப்பட வேண்டுமானால் முஸ்லிம் சிங்களக் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று ஒரு திட்டம் போடப்பட்டுள்ளது.
எவ்வளவுக்கு அதிகமாக முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றதோ அந்தளவுக்கு அதிகமாக சிங்கள மக்களின் வாக்குகள் அதிகரிக்கும் என்பது அரசின் எதிர்பார்ப்பாகும். அதற்காக பொதுபல சேனாவிடம் இந்த இனக்கலவரத் திட்டம் உயர் மட்டத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது. அதற்காக அளுத்கம மற்றும் பேருவளை இலக்கு வைக்கப்பட்டது. தாக்குதலும் நல்ல படியாகவே நடைபெற்று முடிந்துள்ளது.
அரசு எதிர் பார்த்தது போலவே குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போதிலும் நாட்டு மக்கள் அதில் கவனம் செலுத்தாது குறித்த இனக்கலவரத்தில்தான் அதிக கவனம் செலுத்தினார்கள். அதனால் மிகவும் சுலபமாக குறித்த பிரேரணையை அரசு நிறைவேற்றி விட்டது.
ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவைக் குறைக்கத் திட்டம்
குறித்த இனக்கலவரத்தை ஏற்படுத்தினால் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக் குரல் கொடுப்பார். அதனால் ரணில் சிங்கள மக்களுக்கு எதிரானவர் என்ற புரளியை ஏற்படுத்தலாம் என்று அரசு எதிர்பார்த்தது. அது போலவே ரணில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.
இப்போது கல்வியறிவு குறைந்த சிங்கள மக்கள் மத்தியில் ஐ.தே.க. வுக்கான ஆதரவு குறைந்து அரசுக்கு ஆதரவு அதிகரித்திருக்கலாம். மேல், தென் மாகாணங்களில் அரசு இழந்த வாக்குச் சரிவை குறித்த இனக் கலவரத்தின் மூலம் சரி செய்திருக்கலாம்.
முஸ்லிம்கள் மீது ஒரு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் இனக்கலவரத்தை மூட்டி அரசு தனது வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது எனலாம். மற்றது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து அடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர் கதையாக தொடரக் கூடிய நிலைதான் உள்ளது.இது உண்மை என்பது போலவே எமது நடவடிக்கை தொடரும் என்று பொதுபல சேனாவின் இணைப்பாளர் டிலந்த விதானகே பகிரங்கமாகவே ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளார். ஆக இன்னும் பல தாக்குதல்களையும் இன வன்செயல்களையும் நடத்தத்தான் போகின்றது.

அதன் பெறுபேறுகளை நாம் எதிர்வரும் ஊவா மாகாணத் தேர்தலில் அறியலாம். இந்த இனக் கலவரத்தின் மூலமாக அரசின் மிகவும் உச்சகட்ட எதிர்பார்ப்பு என்பது சிங்கள மக்கள் மத்தியில் ரணிலின் ஆதரவு பெருகுவதை தடுக்கவும் அரசுக்கான ஆதரவைப் பெருக்கவும்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அதனால் எதிர்வரும் ஊவாத் தேர்தலில் அரசு பெரும் வெற்றியை நோக்கி இந்த இன வன்செயல் நடத்தப்பட்டுள்ளது.
அண்மையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதலகள் மேற்க் கொள்ளப்பட்ட போது ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருந்தார். எந்தவொரு முஸ்லிம் எம்பிக்களோ அல்லது அமைச்சர்களோ பள்ளிவாசல் மீதான தாக்குதல்கள் நடைபெற்றபோது வாயே திறக்கவில்லையே.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஹக்கீம்
அண்மைய பேருவளை, தர்கா நகர் கலவரத்தை நேரில் பார்வையிடச் சென்ற ஹக்கீம் வகையறாக்கள் மீது அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் வறுத்து எடுத்து விட்டார்கள். பாதிப்புக் குறித்து தான் நாடாளுமன்றத்தில் முக்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளேன் என்று அறிவித்திருந்தார். ஆனால் நாசுக்காக நாடாளுமன்றத்தில் உரையாற்றிவிட்டு மறுநாள் ஐ.நா விசாரைணக் குழு, விசாரணை நடத்தக் கூடாது என்ற பிரேரணை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்புச் செய்துள்ளார்.
ஹக்கீம் தரப்பு வாக்களித்தாலும் வாக்களிக்கா விட்டாலும் அரசு பிரேரணையில் வெற்றியடைந்துதான் இருக்கும். ஆனால் முஸ்லிம்கள் ஆவேசமாக இருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் தான் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் பாரிய சிக்கல் ஏற்படும் என்பதால் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது தவிர்த்துக் கொண்டார். அதன் மூலம் முஸ்லிம் மக்களிடமிருந்து தப்பித்துக் கொண்டார்.
மற்றது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது போனதால் அரசுக்கு நல்ல பிள்ளையானார். இவைகள் மூலமாக ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார் ஹக்கீம்.
ஹக்கீம் எப்படிப்பட்ட நிலையிலும் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்த மாட்டாராம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
அரசை விட்டு ஹக்கீம் வெளியேறினால் இன்னும் அதிகமான பாரிய சேதங்கள் ஏற்படுமாம். அதனால்தான் ஹக்கீம் இன்னும் அரசுடன் உள்ளாராம். அரசுடன் இருந்து கொண்டுதான் முஸ்லிம்களுக்காக இயங்க வேண்டுமாம். அரசுடன் தொடர்ந்து ஹக்கீம் ஒட்டிக் கொண்டிருப்பதற்கான இது ஒரு நொண்டிச் சாட்டாக இல்லையா?.
அளுத்கம பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்
அண்மைய வன்முறைகள் நடைபெற்ற அளுத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விசேட பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரவியது. இது குறித்து பொறுப்பு வாய்ந்த ஒரு பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்ட போது, எவ்விதமான பதவி உயர்வும் வழங்கவில்லையென்றும் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
குறித்த பொலிஸ் அதிகாரி தற்போது களுத்துறை வடக்குக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு அவருக்கு எவ்விதமான கடமையும் வழங்காது காத்திருப்புக் கடமையில் வைக்கப்பட்டுள்ளார்.
வன்செயல்கள் நடைபெற்றுள்ள மூன்று நாட்களில் இந்தப் பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர் வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று தெரிய வருகின்றது. ஆனால் இடமாற்றம் நடைபெற்றுள்ளது.
அளுத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அதிகாரி. தற்போது பிரதம இன்ஸ்பெக்டராகவே (மூன்று நட்சத்திரத்தில்தான்) உள்ளார். இவருக்குப் பதவி உயர்வு வழங்குவது என்றால் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவியுயர்வு வழங்க வேண்டும்.
அப்படி இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டால் இவருக்கு மேல் உள்ள மூத்த அதிகாரிகள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக வழக்குத் தாக்கல் செய்வார்கள். ஏற்கனவே சீ.ஐ.யில் இருந்து ஏ.எஸ்.பி வழங்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது.
ஊரடங்கை அமுல்படுத்தி முஸ்லிம்களை வெளியே வர விடாமல் தடுத்து வன்செயல்காரர்களுக்கும், காடையர்களுக்கும் ஊடரங்கு நேரத்தில் தாராள வன்செயல்களை நடத்துவதற்கு இந்த பொலிஸ் அதிகாரி பூரண ஒத்துழைப்பு வழங்கினார் என்ற குற்றச்சாட்டுக்கள் இந்த பொலிஸ் அதிகாரி மீது பல தரப்பாலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்த அதிகாரிக்கு இந்த இடமாற்ற உத்தரவும் நடைபெற்றுள்ளது.
பதவி உயர்வு வழங்கலுக்கான நடைமுறை
பொலிஸ் துறையில் ஒரு பதவி உயர்வு வழங்கப்படும் போது பதவி வழியாக குறித்த உத்தியோகஸ்தரின் சேவை மற்றும் திறமைகள் வீரதீரச் செயல்கள் பார்க்கப்பட வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் அப்பாவித் தமிழ் வாலிபர்களைப் பிடித்துச் செல்வதும் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றுதாகவும் சித்திரிக்கப்பட்டு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வந்தது. அவைகளில் ஓரளவு உண்மைகளும் இருந்தது.
ஆனால் அளுத்கம பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு எந்தவிதமான வீரதீரச் செயலும் நடைபெறவில்லை. அவர் செய்த சேவை என்பது முஸ்லிம் வாலிபர்களால் சிங்களக் காடையர்களுக்கு எவ்விதமான சேதாரமும் வராமல் முழுப் பாதுகாப்பும் வழங்கினார்.
மற்றும் இந்த வன்செயல் நல்ல படியாக நடைபெறுவதற்கு பரிபூரண ஒத்துழைப்பு வழங்கினார் என்பதற்காக இந்தப் பதவி உயர்வு வழங்கப்படலாம். ஆனால் இவர் உயர் மட்டத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அப்படியொரு பதவி உயர்வு வழங்கப்பட்டால் அது மிகவும் ஆபத்தான பதவி உயர்வு என்பதுதான் உண்மை. இந்தப் பதவி என்பது முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கும். காடையர்களுக்கும் ஒரு ஊட்டச் சத்தாகவும், ஒரு உந்து சக்தியாகவும், ஒரு பாராட்டாகவும், வாழ்த்தாகவும் அமைந்து விடும். அப்படியொரு பதவி உயர்வு என்பது சிங்கள- முஸ்லிம் உறவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டதாகவே பார்க்கப்படும். இந்தப் பதவி உயர்வு என்பது ஒரு பொய்யான தகவல்.
முஸ்லிம் சிங்கள உறவைப் பாதிக்கும்
ஆனால் இந்தப் பொலிஸ் அதிகாரியின் சிங்கள இனம் சார்ந்த ஆதரவாகச் செயல்பட்டதன் மூலம் சிங்கள- முஸ்லிம் உறவுக்கு பெருத்த சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இப்படிப்பட்ட வன்செயல் நடைபெறும் போது சகல பொலிசாரும் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு சொல்லாமல் சொல்லியுள்ளது.
முஸ்லிம்கள் மீதான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்படும் போது பொலிஸ் மற்றும் படையினருக்கு உற்சாக மூட்டப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இனவன்முறைகள் நடைபெறும் போதெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராகத்தான் பொலிசார் மற்றும் சகல படையினரும் செயல்படப் போகின்றார்கள்.
முடிவில்லாத இந்த இனவன்செயல்களின் போது இனிமேல் முஸ்லிம்கள் படையினரின் ஆதரவையோ அல்லது படையினரின் நீதி நேர்மையான கடமையையோ எதிர்பார்க்க முடியாது என்பது மட்டும் திட்டவட்டமாக தெரிகின்றது.
எம்.எம்.நிலாம்டீன்
mmnilamuk@gmail.com
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjpy.html

Geen opmerkingen:

Een reactie posten