மாணவர்கள் கடத்தல் வழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா வாதத்தால் பொலிஸ் அத்தியட்சகருக்கு பிடியாணை
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 11:41.49 AM GMT ]
2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தெகிவளையில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லீம் இளைஞர்களும் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர்.
கடத்தப்பட்ட மூன்று இளைஞர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வேளையில் சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
ஐந்து இளைஞர்களில் மாணவன் ராஜீவ் நாகநாதனின் தாயார் சரோஜா நாகநாதன், கடத்தப்பட்ட பிரதீப் விஸ்வநாதன் சார்பில் அவரது தந்தையார் விஸ்வநாதனும் மாணவனான திலகேஸ்வரன் ராமலிங்கம் சார்பில் அவரது தாயார் காவேரி ராமலிங்கமும் நீதிமன்றில் சாட்சியம் அளித்திருந்த நிலையில் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்பொழுது உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றுபவருமான எம்.ஏ ஜயதிலகா நீதிமன்றில் சமூகம் அளிக்வில்லை.
மனுதாரர்களின் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் இந்த விசாரணையில் முக்கிய சாட்சியான உதவிப் பொலிஸ் அத்தியட்சர் தொடர்ச்சியாக மனுதாரர்கள் சார்பில் சாட்சியமளிப்பதை தவிர்த்து வருவது மட்டுமின்றி நீதிமன்ற அழைப்பாணையையும் உதாசீனம் செய்துள்ளார். சாட்சி தான் ஏன் நீதிமன்றம் வரமுடியவில்லை என்ற காரணத்தையும் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தவில்லை.
இன்றைய தினம் மட்டுமல்ல ஏற்கனவே மூன்று விசாரணை தினங்கள் நீதிமன்றில் வழக்கு விசாரணை தினத்தில் சமூகமளிக்காததனால் இந்த நீதிமன்றம் பிடிவிராந்து பிறப்பித்திருந்தது. மீண்டும் இன்றுடன் இரண்டு விசாரணை தினங்களாக சாட்சியம் அளிக்க நீதிமன்றிற்கு சமூகமளிக்கவில்லை.
5 மாணவர்களும் கடத்தப்பட்டு ஆறு வருடங்களாகின்றன கடத்தப்பட்ட இளைஞர்களின் இரண்டு பெற்றோர்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டு வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தங்களது பிள்ளைகள் உயிரோடு தங்களுக்கு கிடைப்பார்கள் என்ற அதீத நம்பிக்கையில் மனுதாரர்களான இளைஞர்ககளின் பெற்றோர் கடந்த மூன்று வருடங்களாக இந்த நீதிமன்றிற்கு நியாயம் கேட்டு வந்து செல்கின்றனர். ஆனால் தொடர்ச்சியாக இந்த சாட்சி நீதிமன்றிற்கு வராமையால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகின்றது.
எனவே உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான இந்த சாட்சியை கைது செய்ய பிடியாணை உத்தரவு வழங்கும்படி நீதிமன்றத்தை சட்டத்தரணி வேண்டிக் கொண்டதையடுத்து பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி கியான் பிலப்பிட்டிய பிடியாணை உத்தரவு பிறப்பித்து மேலதிக விசாரணையை ஜுலை மாதம் 24ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjo3.html
இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நடந்தது என்ன?- கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவர்- ஹெகலிய
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 12:03.41 PM GMT ]
இது தொடர்பாக தென் துருவத் தமிழ்ச் சங்கத்தின் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அவுஸ்திரேலியச் செய்தி ஊடக அறிக்கைகளின் படி, 30 குழந்தைகள் உட்பட 150 தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஒரு படகு ஏற்றிய வண்ணம் வந்து கொண்டிருந்ததாகவும், இன்னொரு படகு 50 தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய வண்ணம் வந்து கொண்டிருந்ததாகவும் தெரியவருகிறது.
இந்த தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களிடமிருந்து கடந்த சனிக்கிழமைக்குப் பின்னர் எதுவித தகவல்களும் இல்லையென ஏதிலிகளுக்காகப் போராடுவோர் தெரிவிக்கின்றனர்
இவர்களைத் திருப்பியனுப்பிய அவுஸ்திரேலியா, சிறிலங்கா கடற்படையுடன் தொடர்பாடல்களைக் மேற்கொண்டு வருவதாக இவர்கள் நம்புகின்றனர்.
இவர்களைத் திருப்பியனுப்பிய அவுஸ்திரேலியா, சிறிலங்கா கடற்படையுடன் தொடர்பாடல்களைக் மேற்கொண்டு வருவதாக இவர்கள் நம்புகின்றனர்.
150 பேரை ஏற்றி வந்த படகு சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பப்படுகிறதா என்று கூற அவுஸ்திரேலியப் பிரதமர் ரோனி அபாட்ர் அவர்கள் நேற்று முன்தினம் மறுத்துவிட்டார்.
கடலில் என்ன நடக்கிறது என்ற நடவடிக்கை விபரங்களைப் பற்றி தான் கருத்து வெளியிடப் போவதில்லை என்று அவர் நேற்று முன்தினம் ஏபிசி வானொலிக்கு தெரிவித்திருந்தார்.
அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி, 150 பேரை ஏந்தி வந்த படகு இந்தியாவிலிருந்து புறப்பட்டதாகவும், இப்படகிலிருந்த செய்மதித் தொலைபேசியூடாகச் சிலர் அவுஸ்திரேலிய மக்கள் சிலருடன் தொடர்பு கொண்டு, தகாத காலநிலைக்கு தாம் உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், படகின் இயந்திரத்திலிருந்து எண்ணெய் கசிந்தோட ஆரம்பித்துள்ளதாகவும், ஆதலால் அவுஸ்திரேலிய உதவியை நாடி நிற்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்கள்.
50 பேரை ஏற்றிவந்த, கொக்கஸ் தீவிற்கு அருகாமையில் தடுத்து நிறுத்தப்பட்ட மற்றைய படகில் வந்தவர்களை அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படகு ஒன்றில் வைத்துத் தொலைபேசி ஊடாக மொழிபெயர்ப்பாளரது உதவியுடன், குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை செய்து இவர்களது புகலிடக் கோரிக்கையை நிர்ணயிப்பதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மக்களின் புகலிடக் கோரிக்கையைச் சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவை எடுக்கவேண்டிய கடப்பாடு அவுஸ்திரேலிய அரசிற்கு உண்டென்பதை தென் துருவ சம்மேளனம் சுட்டிக் காட்டி நிற்பதோடு, இவர்கள் யாரிடமிருந்து தப்பியோடி வந்தார்களோ, அவர்கள் கைகளில் மீளவும் இவர்களை ஒப்படைக்கக்கூடாது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறது.
அப்படிச் செய்வது சர்வதேசச் சட்டங்களை மீறுவதாகவும், அவுஸ்திரேலியா கைச்சாத்திட்டுள்ள அகதிகள் பற்றிய சாசனங்களை மீறுவதாகவும் அமைந்து விடும் என்பதைத் தெரிவிக்கவும் விரும்புகிறோம்.
மக்களைக் கடத்துபவர்களின் மனச்சாட்சிக்கு விரோதமான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த சகல வழிவகைகளையும் கையாளவேண்டும் என்பதை தென் துருவ சம்மேளனம் ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, சிறீலங்காவில் நீண்டகாலமாக இருந்துவரும் இப் பிரச்சினைக்கு நீதியானதும், நிரந்தரமானதுமான ஒரு தீர்வைக் காண அவுஸ்திரேலியா முன்னின்று உழைத்தால் அங்கிருந்து தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பெரும் திரளாக வெளியேறுவது தானாக நின்றுவிடும் என்பதையும் எடுத்துதுரைக்க விரும்புகிறோம்.
புகலிடக் கோரிக்கையாளர்களின் கதி என்ன என்பது பற்றி இதுவரை பேணப்பட்டு வந்த இரகசியத்தைத் தகர்த்தெறிந்து, இவர்களிற்கு என்ன நடைபெறுகின்றதென்ற உண்மையை அவுஸ்திரேலிய மக்களிற்குத் தெரியப்படுத்தி, இவர்கள் யாரிடமிருந்து வந்தார்களோ அவர்கள் கைகளிலேயே மீண்டும் இம்சைப்பட விடாது பாதுகாக்குமாறு தென் துருவ சம்மேளனம் அவுஸ்திரேலிய அரசையும் மாண்புமிகு அமைச்சர் ஸ்கோட் மொறிசன் அவர்களையும் கேட்டு நிற்கிறது. என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவர்- ஹெகலிய
அவுஸ்ரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்பதனை, முதற்தடவையாக கொழும்பின் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
கொழும்பில் அரச ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கையிடம் கையளிக்கப்படுவர் என்பதனை உறுதி செய்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbjo5.html
Geen opmerkingen:
Een reactie posten