[ புதன்கிழமை, 23 யூலை 2014, 04:52.05 PM GMT ]
காலம் பல கடந்து சென்றாலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் ஆன்மாவில் ஓர் பெரும் துயர வடுவாக நிலைத்திருப்பதோடு, என்ன விலை கொடுத்தேனும் அரசியல் சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற பற்றுறுதியை தமிழர் தேசத்திடம் கறுப்பு ஜுலை நினைவுகள் விதைத்திருக்கின்றன.
கறுப்பு ஜுலை என்பது இரு இனங்களுக்கிடையே நடந்த ஒரு கலவரம் அல்ல. அது ஒரு இனத்தின் மீது இன்னொரு இனத்தின் அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப் படுகொலையாகும்.
1983 கறுப்பு ஜுலை இனப்படுகொலை ஈழத்தமிழர்களுக்கு ஒரு செய்தியைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த இன மேலாதிக்க அரசிடமிருந்து பிரிந்து சென்று சுதந்திர அரசை அமையுங்கள் என்பதுதான் அந்தச் செய்தி.
இந்தச் செய்தியினைத் தமது நெஞ்சுக் கூட்டினில் சுமந்தவாறேதான் நமது மாவீரர்கள் களம் ஆடினார்கள். களத்திலே நமது மாவீரர்கள் அணிவகுத்து நிற்கையில் தென்னிலங்கையில் தமிழ் மக்கள் மீதோ அல்லது முஸ்லீம் மக்கள் மீதோ சிங்களத்தால் இனப்படுகொலை எதனையும் செய்ய முடியாத சூழலையும் நமது மாவீரர்கள் உருவாக்கியிருந்தனர்.
இன்று சிங்கள பௌத்த இனவாத அரசின் பிடியில் தமிழ், முஸ்லீம் மக்கள் சிக்கிச் சின்னாபின்னப்படும் நிலைமைகளை நோக்கும் போது மாவீரர் நினைவுகள் நமது நெஞ்சமெல்லாம் நிறைகின்றன.
கறுப்பு ஜுலையினை நினைவுகூரும் போது சில வரலாற்று நிகழ்வுகளை நினைவு படுத்திப் பார்ப்பதும் கோட்பாடுகள் சார்ந்து சிந்திப்பதும் தவிர்க்க முடியாததாகிறது.
கறுப்பு ஜுலையும் ஜெயவர்த்தனவும்!
1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை இனப்படுகொலையானது அதற்கு முன்னும் பின்னுமாக இன்றும் தொடரும் இனப்படுகொலையின் ஒரு பகுதியாகும்.
குறிப்பாக நேரடி இனப்படுகொலை என்ற வகையில் 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் 5ஆம் திகதி கல்லோயாவில் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட 156 தமிழ் விவசாயக் குடும்பத்தினர் பொலிசாரின் அனுசரணையுடன் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டமை தொடங்கி 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் 145,000 அப்பாவி ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக சிங்கள இராணுவத்தினரால் விமான குண்டுவீச்சுகள், எறிகணை வீச்சுகள் உட்பட கனரக ஆயுதங்கள் மூலம் இனப்படுகொலை செய்யப்பட்டமை வரை இதன் தொடர் இனப்படுகொலைகளைப் பட்டியலிடலாம்.
ஆயினும் அதற்கும் அப்பால் 1956ஆம் ஆண்டுக்கு முன்பும் 2009ஆம் ஆண்டுக்கு பின்பும் எனப் பல வழிகளிலும் திட்டமிட்ட இன அழிப்பு பல்வேறு வடிவங்களில் இடம்பெற்று வருகிறன.
1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை நாடு முழுவதும் நிகழ்ந்து கொண்டிருந்த வேளை எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல அப்போதைய இலங்கைப் பிரதமரும் பின்பு ஜனாதிபதியுமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன 17ஆம் தேதி இலங்கை வானொலியில் உரையாற்றுகையில் “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” (Peace or War) என்று இனப்படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த ஈழத்தமிழரைப் பார்த்து அறைகூவல் விடுத்தார்.
கண்டி மன்னன் விமலதர்மசூரியன் ஐரோப்பிய படையெடுப்பாளராகிய டச்சு கடற்படைத் தளபதிக்கு அனுப்பிய “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற அதே அறைகூவல் செய்தியை தமது சொந்த நாட்டின் குடிமக்களாகிய ஆயுதம் தரியா அப்பாவி ஈழத்தமிழர்கள் மீது சிங்களப் பிரதமர்; விடுத்திருந்தார்.
இதன் மூலம் ஈழத்தமிழரை அந்நிய படையெடுப்பாளர்கள் போலவே சிங்களத் தலைவர்கள் எப்போதும் கருதிச் செயற்படுகிறார்கள் எனும் செய்தி தெளிவாகப் புலப்படுகிறது.
மேற்கூறியவாறு 1977இல் அறைகூவல் விடுத்த அதே ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1983ஆம் ஆண்டு ஜனாதிபதியாய் பதவியில் இருக்கும்போது 11 ஜுலை 1983 தின லண்டன் டெய்லி டெலிகிராஃப் நாளிதழுக்கு அளித்த விசேட நேர்காணலின் போது “யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயங்களை பற்றி எனக்குக் கவலை இல்லை... நாம் இப்போது அவர்களைப் பற்றி சிந்திக்க முடியாது. அவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றோ அவர்களின் உயிர்களைப் பற்றியோ நாம் சிந்திக்க முடியாது” எனத்தனது சிங்கள இனவெறியை உலகெங்கும் பறைசாற்றினார்.
ஜனாதிபதியின் இவ்வறிவிப்பு வெளியாகி 12 நாட்களின் பின்பு ஜுலை 23ஆம் திகதி ஈழத்தமிழர் மீதான கருப்பு யூலை படுகொலை ஆரம்பமானது. இலங்கைத் தீவுமுழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. ஈழத்தமிழர்கள் வீடுகளிலும், தெருக்களிலும், வண்டிகளிலும், வாகனங்களிலும், பணியிடங்களிலும், ஆலயங்களிலும் என எங்கும் படுகொலைக்கு உள்ளானதுடன் வீடுகள், சொத்துகள், கடைகள், தொழில் நிலையங்கள் என்பன சூறையாடல்களுக்கும் தீ வைப்பிற்கும் உள்ளாயின.
சிங்கள இனத்தைச் சேர்ந்த ஓர் உயர்கல்விமானான எல்.பியதாச என்பவர் ஜுலை இனப்படுகொலைகள் பற்றி வரலாற்றுப் பதிவான Sri Lanka: The Holocaust and after (London, 1984) என்ற தலைப்பில் பிரபலமிக்க ஒரு நூலை எழுதி வெளியிட்டார்.
அந்நூலில் மூத்த அமைச்சர்கள் உட்பட அமைச்சர்கள், அதிகாரிகள், பொலிசார், இராணுவத்தினர், சிங்கள காடையர்கள் என பலதரப்பினரும் இணைந்து திட்டமிட்டு ஈழத்தமிழர்கள் மீது புரிந்த இனப்படுகொலைகளை, தீ வைப்புப்புக்களை, சூறையாடல்களை சம்பங்கள் வாரியாக தகவல்களுடனும் ஆதாரங்களுடனும் கண் கண்ட நேரடி சாட்சியங்களுடனும் மறுக்கப்பட முடியாத வகையில் எழுதியுள்ளார்.
சிங்கள அரசு தமிழினப் படுகொலையினை பல நாட்களாக தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் அன்றைய இந்தியப் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி இந்த இன அழிப்பை நிறுத்துமாறு இலங்கை ஜனாதிபதியை எச்சரிக்கையுடன் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் அன்றைய வெளிவிவகார அமைச்சரும் பிரதமருக்கு அடுத்த நிலையில் இருந்தவருமான பி.வி. நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பி நிலைமைகளை நேரில் பார்க்குமாறும் இலங்கை அரசால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லையெனில் அதற்கு இந்தியா உதவும் என்றும் எச்சரிக்கையுடன் செய்தி அனுப்பினார். இதன் பின்புதான் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன படுகொலைகளை நிறுத்தி நிலையைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தார்.
கறுப்பு சூலை இனப்படுகொலையை திட்டவட்டமாக ஓர் “இனஅழிப்பு” என்று இந்திய பிரதமர் திருமதி. இந்திரா காந்தி வரையறுத்துக் குறிப்பிட்டார் என்பதும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.
இறையாண்மைக்காக இனப்படுகொலையா?
சிங்கள அரசு புரிந்துவரும் இனப்படுகொலையை இறையாண்மை (sovereignty) என்பதன் பெயரால் நியாயப்படுத்தவோ பொறுத்துக் கொள்ளவோ முடியாது.
யூகோஸ்லோவியா ஜனாதிபதியான மிலோசவிச் செர்பிய இனத்தின் சார்பில் புரிந்த இனப்படுகொலையை இறையாண்மையின் பெயரால் இந்த உலகமோ அல்லது ஐ.நா. சபையோ நியாயப்படுத்தவில்லை. அதனை ஒரு இனப்படுகொலையெனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டு அதன் பெயரால் மிலோசவிச் கைது செய்யப்பட்டு சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இனப்படுகொலைக்கு உள்ளான இனங்கள் பிரிந்து சென்று சுதந்திர அரசுகள் அமைப்பதை உலகம் அங்கீகரித்தது.
2006ஆம் ஆண்டு ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின்படி இறையாண்மையின் பெயரால் அந்நாட்டின் குடிமக்களைக் கொல்லும், இனப்படுகொலை செய்யும் அதிகாரம் அரசுகளுக்கு இல்லையெனவும் அறிவித்தது.
இத் தீர்மானத்தை மேற்கோளாகக் காட்டி முள்ளிவாய்க்கால் படுகொலைகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென 2014ஆம் ஆண்டு ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம் அமைந்திருந்தது. இவ்வாரம் அமெரிக்கத் தலைவர் ஒபாமா அவர்கள் “ஒரு தேசத்தின் இறையாண்மையானது தனது மக்களையே கொன்றொழிப்பதற்கான அனுமதியாக முடியாது” எனக்குறிப்பிட்டதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டலாம்.
இறையாண்மை என்பது மக்களுக்கு உரியதே தவிர அரசுக்குரியது அல்ல.
மன்னராட்சிக் காலத்தில் இறைமை இறைவனிடமிருந்து மன்னனுக்குக் கிடைக்கின்றது என்றும் இறைவனின் பெயரால் அதனை மன்னன் மக்கள் மீது பயன்படுத்துகிறார் என்றும் தெய்வீக இறைமைக் கோட்பாடு (Divine right of sovereignty) கூறுகிறது. ஆனால் மன்னராட்சிக்கு முடிவுகட்டிய ஜனநாயக யுகத்தில் இறைமை மக்களிடமிருந்து பிறக்கிறது என்ற மக்கள் இறைமைக் கோட்பாடு (popular sovereignty) உதயமாகி மூன்று நூற்றாண்டுகளை எட்டிவிட்டது.
அதாவது மக்களிடமிருந்து இறைமை பிறக்கும்போது இலங்கையின் இறையாண்மையில் ஈழத்தமிழரும் அந்த இறையாண்மையின் ஒரு பகுதியினராவர். சிங்கள இன ஆட்சியாளர்கள் ஈழத்தமிழரின் மக்கள் இறையாண்மையை மீறும் போது அதைப்பற்றி பேச அதில் தலையிட சர்வதேச சமூகத்திற்கு உரிமையும் பொறுப்பும் கடமையும் உண்டு. ஆதலால் இறைமையை அரச இறைமைக்குள்ளாய் பார்க்காமல் மக்கள் இறைமைக்குள்ளால் பார்க்க வேண்டிய தேவை இங்கு அவசியமாகிறது.
கறுப்பு ஜுலையும் முள்ளிவாய்க்காலும்!
கறுப்பு ஜுலை இனப்படுகொலையினை சிங்களஅரசு நடத்திய போது அது சிங்கள காடையர்களையும் சிங்கள மக்களையும் தமிழ்மக்களுக்கு எதிராகத் தூண்டி பொலிஸ் இராணுவ அனுசரணையுடன் இனப்படுகொலையை அரங்கேற்றியது.
1983 யூலை 23ஆம் தேதி பாதுகாப்பு மிக்க வெலிக்கடைச் சிறையில் சிறைக்காவலர்களின் உதவியுடன் சக சிங்களக் கைதிகளினால் 53 தமிழ்க் கைதிகள் படுகொலைக்கு உள்ளாகினர். இதற்காக இதுவரை ஒரு விசாரணையும் நடந்ததில்லை.
இதன் தொடர்ச்சியாக 1999ஆம் ஆண்டு பின்துனுவேவ என்ற இடத்தில் சந்தேகத்தின் பெயரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கூரிய ஆயுதங்களால் வெட்டியும் இரும்புக் கம்பிகளால் அடித்தும் கொல்லப்பட்டதுடன் தீவைத்தும் கொளுத்தப்பட்டனர். சிறைக்காவலர்கள் சிங்கள பொதுமக்களை ஏவி தடுப்பு முகாம் சுவர்களுக்குள்ளேயே இப் படுகொலையை அரங்கேற்றினர்.
மக்களையும், கைதிகளையும் படுகொலை செய்வது சிங்கள அரசியலில் ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளதுடன் தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதும் ஓர் இராணுவ கலாச்சாரமாக உள்ளது.
1983 கறுப்பு யூலை இனப்படுகொலையானது மேலே குறிப்பிட்டது போல சிங்கள மக்களையும் காடையர்களையும் ஏவி பொலிஸ் இராணுவ அனுசரணையுடன் அரங்கேற்றிய ஒரு பரிமாணம் இருந்ததற்குப் பதிலாக முள்ளிவாய்க்காலில் அரசின் முப்படைகளும் அனைத்து வகை கனரக நாசகார ஆயுதங்கள் மூலம் வெளிப்படையாக ஈழத்தமிழர்களை கொன்றொழிக்கும் இனப்படுகொலையை அரங்கேற்றியமையானது இனப்படுகொலை வரலாற்றில் பல்பரிமாணம் கொண்ட ஓர் உச்சக்கட்ட இன அழிப்பாகும்.
ஆதலால் 1983 கறுப்பு யூலை இனப்படுகொலையின் தொடாச்சியும் வளர்ச்சியும் அதன் முக்கிய கட்டமுமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாகும். கறுப்பு யூலை இனப்படுகொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைப் பிரித்தோ, தனிமைப்படுத்தியோ பார்க்க முடியாது.
சிங்கள தேசம் ஏற்றக் கொண்ட பெரும் அநீதி!
கறுப்பு யூலை படுகொலைக்காக எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை யார் மீதும் வழக்குகள் தொடரப்பட்டு தண்டிக்கப்படவுமில்லை. அப்படுகொலை சிங்கள அரசாலும் சிங்கள மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மிகப்பெரும் அநீதியாகவே இன்றும் உள்ளது.
குறைந்தபட்சம் உதிரிகளான சில சிங்கள நீதிமான்கள் அதற்காக வருத்தப்பட்டிருந்தாலும் எழுதியிருந்தாலும் சிங்கள அமைப்புக்களும் அரசும் ஊடகங்களும் இதுவரை அதற்காக வருத்தம் தெரிவித்தது கிடையாது.
இதே போல 145,000க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கும், பெருந்தொகையான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் அரச இராணுவத்தினரால் உள்ளாக்கப்பட்ட செய்தியை பின்நாட்களில் தெரிந்த பின்பும் அதற்காக எந்தவொரு சிங்கள அமைப்புக்களோ, மக்கள் மன்றங்களோ, பௌத்த நிறுவனங்களோ, சிங்கள ஊடகங்களோ, சிங்களவர்களால் நடத்தப்படும் ஆங்கில ஊடகங்களோ இதுவரை குறைந்த பட்சம் வருத்தம் தெரிவித்ததுகூடக் கிடையாது.
அப்படி குறைந்த பட்சம் வருத்தம் தெரிவிக்காத சிங்கள சமூகத்துடன் ஈழத்தமிழர் தேசம் ஒருபோதும் இணைந்து வாழமுடியாது. அப்படிப்பட்ட சிங்கள மக்களிடமிருந்து ஈழத்தமிழர் தேசம் தனக்கான நீதியை ஒருபோதும் எதிர்பார்க்கவும் முடியாது.
ஈழத்தமிழருக்கு முதலில் வேண்டியிருப்பது உயிருக்கும், உடமைக்குமான பாதுகாப்பு. பாதுகாப்பு இல்லையேல் வேறு எது இருந்தும் பயனில்லை.
அடுத்து தமது கூட்டுரிமையான மொழி, பண்பாடு, மண்சார்ந்த தேசிய இனப் பாதுகாப்பும், தன்மானமும் மற்றும் அனைத்து வகை வளர்ச்சிக்கான சூழலும் அவர்களுக்கு அவசியமானவை.
இந்த வகையில் மனிதகுல நீதியின் பெயராலும் ஜனநாயகத்தின் பெயராலும் மனிதாபிமானத்தின் பெயராலும் பிரிந்து சென்று சுதந்திர அரசை அமைப்பதைத் தவிர வேறு வழிகளை வரலாறு ஈழத்தமிழருக்கு விட்டுவைக்கவில்லை.
ஆதலால் கறுப்பு ஜுலை நினைவு தினத்தில் தமிழீழ விடுதலைக்கான சத்தியமே ஈழத்தமிழர்கள் உலக்திற்கு சொல்லும் செய்தியாகும்.
தமிழ் முஸ்லீம் மக்களது இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் ஈழத் தமிழர் தேசம் ஒருபோதும் இணைந்து வாழ முடியாது என்பதுவும் பிரிந்து சென்று சுதந்திர அரசு அமைப்பது ஒன்றுதான் மனிதகுல நீதியையும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்குமுரிய ஒரே ஒரு வழி என்பதுவும்தான் உலக மக்கள் அனைவருக்கும் நாம் கூறும் தெளிவான செய்தியாகும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
பிரதமர்- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckv1.html
பெருந்தோட்ட சிறுவர் பராமரிப்பு இல்லங்களை மேம்படுத்த இந்தியா உதவி - உணவு ஒவ்வாமை காரணமாக 70 சிறுவா்கள் வைத்தியசாலையில் அனுமதி
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 05:00.51 PM GMT ]
இது தொடர்பான உடன்படிக்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி சிறுவர் பராமரிப்பு இல்லங்களின் மேம்படுத்தலுக்காக 58 மில்லியன் இலங்கை ரூபாய்கள் செலவிடப்படவுள்ளன.
ஹட்டன், காலி, கண்டி, இரத்தினபுரி, பதுளை மற்றும் கேகாலை ஆகிய இடங்களில் உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லங்களுக்கு செலவிடப்படவுள்ளன.
இதேவேளை இலங்கையின் மத்திய மாகாணத்தில், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக நான்காயிரம் வீடுகளை அமைக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தின் நிறைவுக்குள் வீடுகளை அமைத்துக் கொடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
உணவு ஒவ்வாமை காரணமாக 70 சிறுவா்கள் வைத்தியசாலையில் அனுமதி
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ ஓல்டி தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்கள் 70 பேர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் 23.07.2014 அன்று பிற்பகல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் மாணவர்கள் பாடசாலை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றதன் பின் 4.30 மணியளவில் வாந்தி, தலைச்சுற்று போன்ற காரணத்தினால் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 தொடக்கம் 11 வயதுடைய மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
23.07.2014 அன்று மதியம் ஓல்டி தமிழ் வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர்களுக்கு நூடில்ஸ், மற்றும் முட்டை என்பன மதிய உணவாக வழங்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
இதனை உட்கொண்ட மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை 70; ஆக அதிகரித்துள்ளதாக பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எஸ்.கே. ஜயசூரிய
தெரிவித்தார்.
தெரிவித்தார்.
மாணவர்கள் உட்கொண்ட உணவை பரிசோதனைக்காக அரச மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckv2.html
வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து கூட்டமைப்பிற்கும் - ஐ.தே.கவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை?
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 11:51.47 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை தொடர்பில் நிரூபிக்க சாட்சியங்கள் உண்டு. உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை என முடியுமென்றால் நிரூபிக்கவும்.
ஜனாதிபதி தேர்தல் ஏனைய தேர்தல்களைப் போன்று நடத்தப்பட முடியாது. கட்டாயமாக குறைந்த பட்சம் நாட்டின் 51 வீதமானவர்கள் வாக்களித்திருக்க வேண்டு;ம். அவ்வாறு வாக்களித்திருக்காவிட்டால் மூன்றாம் வேட்பாளரின் இரண்டாவது தெரிவு கணக்கெடுக்கப்படும்.
2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது பொன்னம்பலம் அவர்கள் மூன்றாவது வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். 51 வீதமானவர்கள் வாக்களித்திருக்காவிட்டால் பொன்னம்பலத்திற்கு வாக்களித்த மக்களின் இரண்டாவது வாக்குகள் எண்ணப்பட்டிருக்கும். பொன்னம்பலத்திற்கு வாக்களித்த எவரும் ஜனாதிபதி மஹிந்தவிற்கு வாக்களித்திருக்க மாட்டார்கள். மாறாக ரணில் விக்ரமசிங்கவிற்கே வாக்களித்திருப்பார்கள்.
நாட்டில் நிலவி வந்த பிரிவினைவாதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே இல்லாமல் செய்தார். பிரிவினைவாதம் தூண்டப்பட்டிருந்தால் நாடு இரண்டாக பிளவடைந்திருக்கும்.
நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த சில மேற்குலக நாடுகள் முயற்சிக்கின்றன என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் புத்திசாதுரியமாக வாக்களிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் இரத்தினபுரியில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRXLckv4.html
Geen opmerkingen:
Een reactie posten