இலங்கையில் நீரிழிவு நோயின் தாக்கம் - இளைஞர்கள் பாதிப்பு - ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலக்கெடு முடிவு
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 06:17.14 AM GMT ]
22 முதல் 30 வயதிலான இளைஞர்கள் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான ஆய்வு வடக்கு கிழக்குப் பகுதிகளை தவிர்த்து, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதில் கிராமங்களைவிட நகரப் பகுதியிலேயே நீரிழிவு நோயின் தாக்கம் அதிகம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மக்களிடையே நீரிழிவு நோய், அதன் ஆபத்து, வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டியத் தேவை ஆகியவை குறித்து அரசு பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தாலும், அவை போதிய அளவில் இல்லை என கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையின் தலைவர் டாக்டர் சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் மத்தியில் உணவுக் கட்டுப்பாடு இல்லை, ஆரோக்கியமான உணவை அவர்கள் உண்பதில்லை எனவும் அவர் கூறுகிறார்.
ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலக்கெடு முடிவு
அண்மையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடைபெற்ற வன்முறைகளின் போது மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளது.
அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைான பெற்றோல் குண்டுகள், கைக்குண்டுகள், இரும்புத்தடிகள் மற்றும் வேறு ஆயுதங்கள் போன்றவற்றை பொலிஸ் நிலையத்திலோ அல்லது பொதுவான இடங்களிலோ ஒப்படைக்குமாறும் காலவரையறை முடிவடைவதற்கு முன் ஆயுதங்களை கையளிப்பவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது எனவும் பொலிசார் ஒலிபெருக்கி மூலம் கடந்த வாரம் அறிவித்திருந்தனர்.
மேலும் காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் அளுத்கம பேருவளை பிரதேசங்களில் மறைத்து வைத்திருப்பதாக கூறப்படும் ஆயுதங்களை தேடும் நடவடிக்கைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து பொலிசாரும் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkr1.html
இலங்கை தமிழர்கள் 4 பேர் அகதிகளாக இன்று தமிழகம் சென்றனர்! - கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: வைகோ கோரிக்கை
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 06:17.53 AM GMT ]
இலங்கையில் வாழும் தமிழர்கள் மீது சிங்களர்களும், இராணுவத்தினரும் தாக்குதல் நடத்தியதால் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வர தொடங்கினர்.
அவ்வாறு வந்த அகதிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைபுலிகளுடனான மோதல் அதிகரித்த நிலையில் அப்பாவி தமிழர்கள் மீதும் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் லட்ச கணக்கான பேர் அகதிகளாக தமிழகத்தில் தங்கியுள்ளனர்.
உள்நாட்டு போருக்கு பின் தமிழகம் வரும் அகதிகள் எண்ணிக்கை குறைந்து போனது. ஆனாலும், இலங்கை இராணுவத்தினர் தமிழர் பகுதிகளில் தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவி வருகின்றனர்.
தமிழர்களின் நிலங்களில் சிங்களர்களையும், இராணுவத்தினரையும் குடியமர்த்துவது, விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்படும் தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுவது, வெள்ளை வான்களில் வரும் கும்பல் அப்பாவி தமிழர்களை கடத்தி செல்வது என தொடர்ந்து நடந்து வருகிறது.
இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழர் தேசிய கூட்டமைப்பு வெற்றிக்கு பின்னரும் அங்கு அமைதி நிலவவில்லை. இதனால் இலங்கையில் வாழ முடியாத தமிழர்கள் அவ்வப்போது அகதிகளாக தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை இலங்கை மன்னார் மற்றும் வவுனியா பகுதிகளை சேர்ந்த 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.
இலங்கை மாங்குளம் சதீஷ், குளத்துமோட்டை ரவீந்திரன், தோணிக்கல் சாந்தி மற்றும் மலர் ஆகிய நால்வரும் நேற்று மாலை மன்னாரில் இருந்து இலங்கையை சேர்ந்த படகு ஒன்றில் கிளம்பியுள்ளனர். நள்ளிரவு தனுஷ்கோடி பகுதியில் உள்ள மணல் திட்டு அருகே மார்பளவு தண்ணீரில் இவர்களை இறக்கிவிட்ட படகோட்டிகள் இலங்கைக்கு திரும்பி சென்றனர்.
இரவு முழுதும் நடந்து வந்த இவர்கள் இன்று காலை தனுஷ்கோடி காவல் நிலையத்தினை அடைந்தனர். அங்கு போலீஸார் அகதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகதியாக வந்த சாந்தி தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டம் தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் எனக்கு 5 குழந்தைகள். என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டதால் என் அம்மாவோடதான் இருக்கிறேன். அதனால், அரசாங்க சலுகை எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. கூலி வேலை பார்த்து கிடைக்கும் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்த முடியவில்லை. இலங்கையில் விலைவாசி அந்தளவுக்கு உயர்ந்து இருக்கிறது. ஒரு கிலோ அரிசி 90 ரூபாய், சீனி 110 ரூபாய், சின்ன தேங்காய் 50 ரூபாய் என்று விற்கப்படுகிறது. அதனால், தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் எங்க சொந்தகாரர்களுடன் தங்கிவிடலாம் என்று அம்மா, குழந்தைகள் எல்லாரும் கிளம்பினோம். படகு சின்னதாக இருந்ததால அவர்களை அழைத்து கொண்டு வர முடியவில்லை. அதனால் நான் மட்டும் இங்கே வந்துள்ளேன் என்றார்.
மற்றொரு அகதியான சதீஷ் கூறுகையில்,
பாண்டிச்சேரியில் உள்ள எங்க உறவினர் வீட்டில் என் மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே பாஸ்போர்ட் எடுத்து இந்தியாவுக்கு வந்தேன். விசா முடிந்து போனதாலும், இலங்கையில இருக்கும் காணியை (நிலம்) விற்பதற்காகவும் இலங்கைக்கு திரும்ப போனேன். ஆனால் என் காணியை விற்க முடியவில்லை. வேலையும் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதனால், என் பொண்டாட்டி புள்ளைங்களோட சேர்ந்து வாழ அகதியாக வந்துள்ளேன். மறுபடி இந்தியா செல்ல விசா கொடுக்க மாட்டாங்க என்பதால் படகில் ஏறி தப்பி வந்தேன் என்றார்.
இலங்கையில் தமிழர்கள் சந்தோஷமாக வாழ எல்லா முயற்சியும் எடுப்பதாக ஐ.நா.வும், இந்திய அரசும் சொல்லி கொண்டிருந்தாலும் தமிழர்கள் இலங்கையைவிட்டு அகதிகளாக வெளியேறுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: வைகோ கோரிக்கை
தமிழக மீனவர்களின் உயிருக்கும், வாழ்வாதார உரிமைக்கும் உத்தரவாதம் கிடைக்க கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கச்சதீவு தொடர்பான ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனு, தமிழக மக்களுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் கடும் அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
1974 இல் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சதீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இல்லை. இங்கே ஓய்வு எடுப்பதற்கும், மீன் பிடி வலைகளை உலர்த்தவும், அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கு ஏற்பதற்கு மட்டுமே கச்சதீவு ஒப்பந்தம் வகை செய்கிறது என்று இந்திய அரசின் சார்பில் அதிகாரபூர்வமாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்தியாவில் புதிய அரசு அமைந்த பின்னரும் இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்து இலங்கைச் சிறையில் அடைப்பதும், படகு உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நீடிக்கிறது.
இலங்கை அரசின் அட்டூழியத்தை நிறுத்துவதற்கு மத்திய அரசு உறுதியான, கடுமையான நிலைப்பாட்ட எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மீனவர்கள் எதிர்பார்க்கின்றபோது, கச்சதீவைச் சுற்றியுள்ள பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை இல்லை என்று இந்திய அரசு கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கின்றது.
ஜூன் 24, 1974 ஆம் ஆண்டில், செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் அதன் உறுப்பு 5, கச்சதீவுக்குச் செல்ல இந்திய மீனவர்களுக்கும், அங்குள்ள அந்தோனியார் கோயிலில் வழிபாடு செய்யச் செல்பவர்களுக்கும் எப்போதும் உள்ள உரிமையின் அடிப்படையில் சென்று வர உரிமை உண்டு. அதற்கான பயண ஆவணங்களோ, இலங்கையின் விசா அனுமதியோ தேவை இல்லை என்று கூறுகிறது.
இந்த உறுப்பு 5, கச்சதீவில் இந்திய-இலங்கை நாடுகளுக்கு கூட்டு மேலாண்மை ஆட்சி உண்டு என்ற பொருளில்தான் அமைந்து இருக்கின்றது.
1976 மார்ச் 23 அன்று இந்திய வெளியுறவுச் செயலர் கேவல்சிங் மற்றும் இலங்கை வெளியுறவுச் செயலாளர் ஜெயசிங்கே இருவரும் கையொப்பமிட்ட ஒப்பந்தம் இந்தியாவின் உரிமையை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து விட்டதாக இலங்கை கூறி வருகிறது. இந்திய அரசின் நிலைப்பாடும் அதுதான் என்பதை மத்திய அரசின் பிரமாணப் பத்திரம் உணர்த்துகிறது.
ஆனால், இந்திய-இலங்கை வெளியுறவுச் செயலாளர்களுக்கு இடையே 1976 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தம், இந்திய அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை. எனவே, 1976 ஆம் ஆண்டு கச்சத் தீவு தொடர்பாகச் செய்து கொள்ளப் பட்டதாகக் கூறப்படும் 2வது ஒப்பந்தம், தமிழக மீனவர்களை ஒருபோதும் கட்டுப்படுத்தாது.
இலங்கையைப் பொறுத்தவரை எந்த உடன்பாட்டையும் ஏற்றுக்கொண்டு அதன்படி அந்த நாடு நடந்துகொண்டது இல்லை.
1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், இலங்கையில் தமிழ் மக்களின் தாயகப் பகுதிகளான, வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என ஒப்புக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆனால் இந்த ஒப்பந்தம் செல்லாது என்று இலங்கை உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக இரத்து செய்து விட்டது.
இரண்டு நாடுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்ட காலத்தில் உள்ள நிலைமை பின்னர் மாறுமானால், செய்து கொண்ட உடன்பாட்டையும் இரத்துச் செய்யலாம் என்று பன்னாட்டுச் சட்ட விதிகள் கூறுகின்றன.
எனவே, இந்திய அரசு தமிழக மீனவர்களின் உயிருக்கும், வாழ்வாதார உரிமைக்கும் உத்தரவாதம் கிடைப்பதற்கு, பன்னாட்டுச் சட்ட விதிகளின்படி கச்சதீவு ஒப்பந்தத்தை இரத்து செய்து, கச்சத் தீவை மீட்பது மட்டுமே ஒரே தீர்வு என வலியுறுத்துகிறேன்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkr2.html
Geen opmerkingen:
Een reactie posten