தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 8 april 2014

பொலிஸாரால் தேடப்படும் குற்றவாளிகள்! தகவல் வழங்குபவருக்கு சன்மானம்!- மட்டக்களப்பில் சுவரொட்டி

ஜனாதிபதியிடம் கையும் களவுமாக மாட்டிய அமைச்சரும் பா.உறுப்பினரும்
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 02:24.46 PM GMT ]
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகிய இருவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேட்டுள்ளார்.
இதில் அவர்கள் இருவரும் ஜனாதிபதியை கடுமையாக விமர்சனம் செய்தது தெரிய வந்துள்ளது. இந்த ஒலிப்பதிவு நாடாவை அரச புலனாய்வு சேவைத் தலைவரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்திரா நிமால் வஜிஸ்டா, ஜனாதிபதியிடம், ஒப்படைத்துள்ளார்.
இதனால் பொறுமையை இழந்த ஜனாதிபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் வஜிஸ்டாவிடம், இவ்விருவரும் யார் யாரிடம் தொடர்பு வைத்து உள்ளனர் என்பதை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இதனை அடுத்து, புலனாய்வு அதிகாரி வஜிஸ்டா, விசாரணை மேற்கொண்ட பின்பு அளித்த அறிக்கையில்,
இவ்விருவருக்கு, மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த, ஏ.எச்.எம் பௌசி, ஜனக பண்டார தென்னக்கோன், துமிந்த திசாநாயக்க, ஜோன் செனவிரத்ன, மேர்வின் சில்வா, பியசேன கமகே, முன்னாள் பிரதம மந்திரி ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மற்றும் அவரது மகன் விதுர விக்கிரமநாயக்க, அகியவர்களிடம் ரகசியமாக தொடர்புள்ளமை தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த இருவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கரு ஜயசூரிய மற்றும் மங்கள சமரவீர அவர்களின் கூட்டாளிகள் மூலம் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு இடையில், ஜனாதிபதி மகிந்த, புலனாய்வு அதிகாரி வஜிஸ்டாவை, பாதுகாப்பு செயலாளர் நந்தசேன கோத்தபாய, தென் கொரியாவிற்கு அனுப்பிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவின் செயலை கண்கானிக்கும் படி கூறியுள்ளார்.
நந்தசேன கோத்தபாய தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன், நகர அபிவிருத்தி அதிகாரியாக அனுர சேனநாயக்க பொறுப்பு ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனோ கணேசனை வளர்த்து விட்ட எனக்கு இவ்வாறு செய்வது துரோகச் செயல்!– என்.குமரகுருபரன்
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 02:53.43 PM GMT ]
கட்சியின் அரசியற்குழு எடுக்கும் தீர்மானங்களை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தியமை தொடர்பில் என்.குமரகுருபரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அவர் கட்சியின், பிரதித் தலைவர் பதவியிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பிரதித் தலைவராக வேலனை வேணியன் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் தோல்வியுற்றதை கௌரவமாக ஏற்றுக்கொள்ளாது பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்து கொண்டு கட்சியின் தீர்மானங்களை பகிரங்கமாக விமர்சித்தல், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தல் போன்ற குற்றச்சாட்டுக்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலின் போதும், தேர்தலுக்குப் பின்னரும் தனக்கிருக்கும் கூட்டுப்பொறுப்பை பகிரங்கமாக மீறி, கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில் குமரகுருபரன் செயற்பட்டுள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் என். குமரகுருபரனின் கட்சி அங்கத்துவம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள், என்.குமரகுருபரன் விளக்கமளிக்கத் தவறும் பட்சத்தில் முழு அளவில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என ஜனநாயக மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனநாயக மக்கள் முன்னணியின் எந்தவொரு அமைப்பும் என்.குமரகுருபரனுடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது எனவும், ஜனநாயக மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவம் செய்து என்.குமரகுருபரன் செயற்படக் கூடாது எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு, கட்சியின் பொறுப்பு வாய்ந்த பிரதித் தலைவர் பதவியை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற வகையில், ஜனநாயக மக்கள் முன்னணி பெற்றுக் கொண்ட ஆசனங்கள் தொடர்பில் அரசாங்க பத்திரிகையொன்றுக்கு உண்மைக்கு புறம்பான தகவல்கள் அடங்கிய செவ்வியொன்றை என்.குமரகுருபரன் வழங்கியுள்ளதாகவும் அந்த முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
தொடர்ந்தும் இவ்வாறு அவர் செயற்படுவாராயின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் ஜனநாயக மக்கன் முன்னணி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து என்.குமரகுருபரன் தெரிவித்ததாவது;
இது சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும். ஏனென்றால், கூட்டம் கூட்டுவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். இப்படியொரு பிரேரணை கொண்டு வருவது என்பது, நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட வேண்டும். அதற்கு குறிப்பிட்ட காலம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
அவற்றையெல்லாம் விடுத்து, இரவோடு இரவாக கட்சி கூடி, கட்சி தலைவருக்கு முடிவெடுப்பதற்கான தீர்மானத்தை வழங்கி, என்னை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாகவும் பிரதித் தலைவர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ரீதியாக என்னை நீக்கிய முறைமை பிழையானது. என்மீது சுமத்தப்படுகின்ற இரண்டு குற்றச்சாட்டுக்களுமே ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானவைகள். கடந்த மாகாண சபைத் தேர்தலிலே நான்கு தமிழ் பிரதிநிதிகள் இருந்தார்கள். இன்றைக்கு அவை இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கு நாமும் காரணமோ என்ற கேள்வியைத் தான் நான் தொடுத்திருந்தேன்.
இந்த சாணக்கிய தோல்வியை எடுத்துக் குறிப்பிடுவது தவறா, இது கட்சிக்குத் துரோகம் இழைப்பதா, என்பது தான் என்னுடைய கேள்வி. மனோ கணேசனை வளர்த்து விட்ட எனக்கு இவ்வாறு செய்வது என்பதை ஒரு துரோக செயலாகக் கருதுகின்றேன் என்றார்.


பொலிஸாரால் தேடப்படும் குற்றவாளிகள்! தகவல் வழங்குபவருக்கு சன்மானம்!- மட்டக்களப்பில் சுவரொட்டி
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 03:17.42 PM GMT ]
காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள் எனும் தலைப்பில் மட்டக்களப்பு மண்முனைப் பிரதேசத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
அச்சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
01.கோபி -  இவர் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் கஜீபன் பொன்னையா செல்வநாயகம் அல்லது கோபி அல்லது காசியன் எ ன அழைக்கப்படுவதுடன், வயது 31. 06 அடி உயரமுடைய, பொது நிற தோற்றத்தையும் கொண்டவர். இவரது முகத்தில் இடது பக்க உதட்டின் மேல் பகுதியில் வெட்டுக்காயத்துக்குள்ளான வடுவொன்று உள்ளது.
02.அப்பன்.  -  இவர் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் நவரத்தினம் நவநீதன் அல்லது அப்பன் என அழைக்கப்படுவதோடு, வயது 36 .05 அடி 02 அங்குலம் உயாராமுடைய பொது நிறத் தோற்றத்தையும் கொண்டவர்.
03.தேவியன் - இவர் ராதா படையணியின் விமானி ஆவதோடு, அனுராதபுரம் விமானப்படை முகாமை தாக்கிய விமானியாவார். இவர் தேவியன் எனப்படும் எல்.ரீ.ரீ.ஈ. பெயரால் அழைக்கப்படுபவர்.
ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் பற்றிய தகவல் கிடைக்குமிடத்து 0112451636 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ 0112321838 எனப்படும் தொலைநகல் இலக்கத்திற்கோ அல்லது igp@police.lk எனப்படும் மின்னஞ்சல் ஊடாகவோ அறியத்தருமாறு பொது மக்களிடம் வேண்டிக்கொள்கின்றோம்.
சரியான தகவலை வழங்குபவருக்கு பத்து இலட்சம் வரையான சன்மானம் வழக்கப்படுவதோடு, தகவலாளி பற்றிய இரகசியம் பேணப்படும்.
இப்படிக்கு பொலிஸ் மா அதிபர் என்றும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அச்சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyETcLXno5.html

Geen opmerkingen:

Een reactie posten