இலங்கையில் பெளத்த மதத்திற்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் நாட்டில் மதத்தைப் பரப்பும் மற்றும் மதம் மாற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை செய்தால் நாம் பொறுமை காக்கமாட்டோம். எமது சுயரூபத்தினை வெளிப்படுத்த தயங்கவும் மாட்டோம் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செவ்வி வருமாறு:–
கேள்வி: பொதுபலசேனா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்ற கருத்து பலரால் முன்வைக்கப்படுகின்றதே?
பதில்: நாம் பெளத்த சிங்கள மக்களைப் பாதுகாக்கும் உண்மையான ஒரு அமைப்பாகும். நாட்டில் இடம்பெற்று வருகின்ற குற்றச் செயல்கள் மற்றும் பிரிவினைவாத கொள்கைகளை தடுக்கவே போராடுகின்றோம். எனினும் அரசாங்கத்தில் இருக்கும் ஒரு சில தேசத் துரோகிகளும் முஸ்லிம் தீவிரவாதிகளுமே எமக்கு எதிராக தவறான கருத்துக்களை பரப்பி தடை செய்யக் கோருகின்றனர்.
எம்மை எவராலும் தடை செய்ய முடியாது. பொதுபல சேனா அமைப்புக்கெதிராக யார் தடைச்சட்டம் கொண்டு வருகின்றார்கள் எம்மை யார் தடை செய்கின்றார்கள் என்பதை நாங்களும் பார்க்கின்றோம்.
இரண்டு வருடங்களில் நாம் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளோம். அது குறிப்பிட்ட சிலருக்குப் பிடிக்கவில்லை. பெளத்த தர்மத்தையும் சிங்கள பெளத்த மக்களையும் பாதுகாக்கவே நாம் அவதாரம் எடுத்துள்ளோம். ஆகவே, பொதுபல சேனா பௌத்த இயக்கத்தை எவராலும் ஒரு போதும் தடை செய்ய முடியாது.
கேள்வி:அண்மைக்காலமாக உங்கள் அமைப்பின் செயற்பாடுகள் அதிரடியானதாக அமைந்துள்ளதே?
பதில்: நாம் எப்போதும் அமைதியாகவும் பொறுமையுடனும் செயற்படும் பௌத்த அமைப்பு. பௌத்த தேரர்கள் எப்போதும் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம். ஆனால் நாம் எதிர்பார்ப்பது நாட்டில் நிகழவில்லை.
முஸ்லிம், கிறிஸ்தவ மதவாதிகள் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் அதேவேளை சில முஸ்லிம் அமைச்சர்களும் மோசமாக செயற்பட்டு வருகின்றனர். இவற்றை தட்டிக்கேட்கும் போது ஊடகங்கள் எம்மீது மிதமிஞ்சிய வர்ணனையை காட்டி எம்மை அடாவடித்தனமான இயக்கமாக மாற்றி விடுகின்றன.
குறிப்பாக வில்பத்து பிரதேச பிரச்சினை, மகியங்கனை விகாரை பிரச்சினை நிபோன் ஹோட்டலில் இடம்பெற்ற வாக்குவாதம் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சில் இடம்பெற்ற குழப்பங்கள் என்பன எம்மை பிரபல்யப்படுத்தவோ அல்லது ஊடகங்களில் பேசப்படவோ மேற்கொண்டவையல்ல. இவை அனைத்தும் பௌத்த சிங்கள மக்களை பாதுகாத்துக் கொள்ள நாம் எடுத்த அவதாரங்களே. இதனை அதிரடி செயற்பாடுகள் என்று குறிப்பிட முடியாது.
எம்மை தீவிரவாதிகளாக சிலர் சித்தரிக்கின்றனர். ஆனால் நாம் ஆயுதம் ஏந்தியோ அடாவடித்தனத்தை கையில் எடுத்தோ ஒருபோதும் போராடவில்லை. நாம் வார்த்தைகளால் மட்டுமே போராடுகின்றோம். எனவே நாம் பௌத்த சிங்கள தர்மத்தை காக்க வந்த ஜனநாயக மக்கள் அமைப்பாக உள்ளோம்.
அதேபோல் சில விடயங்களில் அமைதியாக கூறினால் இவர்களுக்கு விளங்குவதில்லை. எனவே அச்சுறுத்தி கூறுவதால் தான் இவர்கள் கேட்கின்றனர். எனவே சில சந்தர்ப்பங்களில் அதையும் கையாள வேண்டி ஏற்படுகின்றது.
கேள்வி: முஸ்லிம் இனத்தவரை குறி வைத்து உங்களின் செயற்பாடுகள் அமைவதாக குற்றம் சுமத்தப்படுகின்றதே?
பதில்: நாம் எந்த இனத்தையோ அல்லது மதத்தையோ இலக்கு வைத்து செயற்படவில்லை. பௌத்தர்களுக்கு எதிராக யார் செயற்படுகின்றனரோ அவர்களை தடுப்பதே எமது இலக்கு. முஸ்லிம் சகோதரர்கள் மீது எமக்கு எவ்வித விரோதமும் இல்லை. ஆனால் இன்று இலங்கையில் மிக மோசமான முஸ்லிம் தீவிரவாதமொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது.
சில முஸ்லிம் அமைப்புக்கள் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் நிதியை வாங்கிக் கொண்டு அவர்களின் மதத்தீவிரவாதத்தினை பரப்புகின்றன. இது வெறுமனே எமது கருத்து மட்டுமல்ல அரசாங்கமும் இதை ஏற்றுக் கொண்டுள்ளது.
தௌஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத் ஆகிய இயக்கங்கள் முஸ்லிம் தீவிரவாதத்தினை இலங்கையில் பரப்புகின்றன. பள்ளிவாசல்களிலும் அவர்களின் ஏனைய வழிபாட்டு தலங்களில் மட்டுமன்றி பாடசாலைகளிலும் கூட முஸ்லிம் சமூகத்திற்கு தீவிரவாத கொள்கைகளை பரப்பி நாட்டின் அமைதியை சீர்குலைக்க முனைகின்றனர். முஸ்லிம் அமைப்புக்கள் மட்டுமல்ல பல கிறிஸ்தவ அமைப்புக்களும் இதனையே செய்து வருகின்றன.
மேலைத்தேய நாடுகளின் பணத்திற்கு அடிமையாகி இவ்வாறான இனவாதத்தினை தேசத்துரோக செயல்களை நாட்டில் செய்து வருகின்றனர். இதனையே நாம் எதிர்க்கின்றோம்.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் தத்தமது மதங்களை வழிபடுவது ஒரு தடையும் இல்லை. அந்த சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. ஆனால் பௌத்த சிங்கள மக்களை மதம் மாற்றி மதம் பரப்பும் செயற்பாடுகளை செய்வதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.
கேள்வி: அரசாங்கத்தின் பலத்துடன் உங்களின் அமைப்பு செயற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றதே?
பதில்: அரசாங்கம் எமக்கு ஆதரவு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் அரசியல் நடத்தவில்லை. பின்பு நாம் ஏன் அரசாங்கத்தை நாடி நிற்க வேண்டும். எனினும் இக்கருத்தினை பலர் குறிப்பிடுவது நாமும் அறிவோம். நாம் அரசாங்கத்தின் கூட்டு அமைப்பு என்பது தெரிந்திருந்தால் அதை நிரூபித்துக் காட்டட்டும். ஆதாரங்களை முன்வைத்தால் பின்னர் நாம் பதில் சொல்கின்றோம்.
தேரர்களுக்கென நாட்டில் தனி கௌரவம் உள்ளது. அதனை இழக்க நாம் ஒருபோதும் விரும்புவதில்லை. ஆகவே பொதுபலசேனா அமைப்பினை மக்கள் எப்போதுமே பௌத்த அமைப்பாகவே நோக்க வேண்டும். அரசியல் கட்சியாகவோ அல்லது அமைப்பாகவோ நோக்கக்கூடாது.
கேள்வி: மத விடயங்கள் தொடர் பில் விவாதம் நடத்த முஸ்லிம் மதத்தலைவர்களை அழைக்கிறீர்களே கார ணம் என்ன?
பதில்: நாம் எந்தவொரு மதத்தையும் இன்றுவரையில் விமர்சிக்கவோ தூற்றவோ இல்லை. எனினும் தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் பௌத்த சாசனத்தையும் எமது பாரம்பரிய வரலாற்றையும் மட்டுமன்றி பௌத்த பெண்களையும் மிக இழிவாக பேசியுள்ளனர்.
இவை தொடர்பிலான காணொளிகளை நாம் வைத்துள்ளோம். பௌத்த சாசனமா திருக்குர் ஆனா என்பது தொடர்பில் விவாதிக்க நாம் எப்போதுமே தயாராக உள்ளோம். தைரியம் இருப்பின் உலமாக்கள் எம்முடன் விவாதத்திற்கு வரவேண்டும். ஆனால் அசாத் சாலி போன்றவர்களுக்கு பதில் சொல்லவோ அவர்களுடன் விவாதம் நடத்தவோ நாம் விரும்பவில்லை.
அவரைப்போல் அர்த்தமற்ற பேச்சினை பேசுவோரிடம் விவாதம் நடத்தி காலத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. எமது அமைப்பில் சிறுவர்கள் பலர் உள்ளனர். அவர்களை விவாதத்திற்கு அனுப்புகின்றோம். அவர்களும் முஸ்லிம் மத விடயங்கள் குர்ஆன் பற்றிய தெளிவுடனேயே உள்ளனர்.
பௌத்தம் என்பது இலங்கைக்கான புனித மதம். இதைப்பற்றி விமர்சிக்கும் உரிமைகள் எவருக்கும் இல்லை. ஆனால் முஸ்லிம் அமைப்புகள் இதனையே செய்து வருகின்றன. ஆகவேதான் நாங்கள் சொல்கின்றோம் பௌத்தம் பற்றி விவாதிக்க நாம் தயார். முஸ்லிம்களின் குர்ஆனா அல்லது பௌத்த சாசனமா என்பதை விவாதிக்கலாம்.
கேள்வி: இலங்கையில் பெளத்தம் தவிர்ந்த ஏனைய மதங்களுக்கு உரிமையில்லை என்பதா உங்களின் கருத்து?
பதில்: இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு. இங்கு அனைத்து விடயங்களும் பெளத்த தன்மைகளின் கீழேயே செயற்பட வேண்டும். இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். இதனை ஏனையோர் ஏற்றுக்கொள்வதனால் எந்தவொரு சிக்கலும் ஏற்படப்போவதில்லை.
ஏனெனில் பெளத்த நாடாக இலங்கை இருந்தும் ஏனைய மதங்களுக்கான உரிமைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும் பெளத்த கொள்கையை சீரழிக்கும் வகையில் வேறு மதத்தவர் செயற்படக்கூடாது என்பதே எமது விவாதம். பெளத்த சிங்கள மக்களுக்கு உயர் உரிமைகளையும் சலுகைகளையும் இந்த நாட்டில் வழங்க வேண்டும். சகல இடங்களுக்கும் சென்று வரக்கூடிய உரிமை இருக்க வேண்டும். ஆனால் இன்று இலங்கையில் அவை இல்லை.
கிழக்கிலோ அல்லது கண்டியை அண்மித்த முஸ்லிம் பகுதிகளிலோ பெளத்தர்கள் வாழவே முடியாத நிலை உருவாகியுள்ளது. சிங்கள பெளத்த நாடா என்பதில் பெரியதொரு சந்தேகம் நிலவுகின்றது. மத்திய கிழக்கினை எடுத்துக்கொண்டால் அங்கு அனைத்து நாடுகளும் முஸ்லிம் சட்டத்தின் படியே ஆட்சி நடத்துகின்றன.
அங்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே முழு உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. மிகக் கொடூரமான தண்டனைகள் உள்ளன. மேலைத்தேயத்திலும் அவ்வாறே. அங்கு கிறிஸ்தவ சட்டம் மட்டுமே உள்ளது. இலங்கை பெளத்த நாடு. ஆனால் இங்கு மட்டும் வடக்கில் ஒரு நியதி கிழக்கில் ஒரு நியதி. ஏனைய பகுதிகளுக்கு பிறிதொரு நியதியென நாடே சீரழிகின்றது.
இதனை தவிர்த்து பெளத்த சட்டத்தின் கீழ் முழு நாடும் இயங்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம்.
கேள்வி: கசினோ சூதாட்ட சட்டமூலம் அரசாங்கத்தினால் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொதுபல சேனாவின் நிலைப்பாடு என்ன?
பதில்: இலங்கையில் பெளத்த தர்மத்தினை சீரழிக்கும் எந்தவொரு செயற்பாட்டினையும் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்பது ஆரம்பம் முதற்கொண்டே நாம் குறிப்பிட்டு வருகின்றோம். இப்போதும் எமது நிலைப்பாடு மாறவில்லை. சூதாட்டம், விபசாரம் போதைப்பொருள் பரவும் எந்தவொரு நடவடிக்கைக்கும் பொதுபலசேனா அமைப்பு ஆதரவு தெரிவிக்காது.
அவ்வாறானதொரு சட்ட மூலம் கொண்டு வர விடப்போவதுமில்லை. அரசியலில் தலையிட நாம் ஒரு போதும் விரும்பவில்லை. ஆனால் நாட்டிற்கும் பெளத்த சிங்கள மக்களுக்கும் எதிராக ஏதேனும் சீர்கேடுகள் ஏற்படுமாயின் அதை அனுமதிக்கமாட்டோம். கடந்த காலங்களிலும் கசினோ சூதாட்ட சட்ட மூலத்தினை எதிர்த்து நாம் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
அதேபோல் போதைப்பொருள் பரவும் செயற்பாடுகள் தொடர்பிலும் பலரின் முகத்திரையினை கிழித்தோம். இப்போதும் அவ்வாறே செயற்படுவோம். பெளத்த புனிதத் தன்மையினை சீரழிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுமாயின் அதற்கு முழு எதிர்ப்பினையும் நாம் தெரிவிப்போம். ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நாட்டிற்கும் மக்களுக்கும் தீங்கு ஏற்படும் செயற்பாடுகளை செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
கேள்வி: அதிகாரப் பகிர்வு தொடர் பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது. இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஓர் பிரிவினை வாதக்கட்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள் அனைத்தும் தமிழ் மக்களின் கருத்துக்கள் ஆகிவிடாது. வடக்கில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின் வடக்கை ஆளும் தீவிரவாதிகளே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.
இவர்கள் கேட்கும் அதிகாரப் பகிர்வு தீர்வை நோக்கியதல்ல. அது பிரிவினையை ஏற்படுத்துவதாகும். வடக்கில் இன்று தேவைப்படுவது அதிகாரப் பகிர்வல்ல இரு மொழி பகிர்வு மட்டுமே. தமிழர்கள் சிங்களத்தில் தமது காரியங்களை செய்ய முடியாது.
சிங்களவர்களுக்கும் தமிழை கையாள முடியாது. ஆகவே இரு மொழிப்பகிர்வு தீர்வொன்றினை கொண்டு வந்து அரச கரும செயற்பாடுகளை இரு மொழிகளிலும் மேற்கொண்டால் பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வு காண முடியும்.
அதைவிடுத்து இலகுவில் தீர்க்க வேண்டிய பிரச்சினையை ஜெனிவா வரையில் கொண்டு செல்வது காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகும். தமிழ் சிங்கள மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமே தவிர விரோதத்தை ஏற்படுத்தக் கூடாது.
கேள்வி: உங்களின் வருங்கால வேலைத்திட்டங்கள் எவ்வாறானவை?
பதில்: பொதுபல சேனா எப்போதும் உண்மைக்காகவும் நேர்மைக்காகவும் போராடும் அமைப்பு. நாம் மக்களின் நலனுக்காக மட்டுமே போராடுகின்றோம் எம்மை மோசமான அமைப்பாக பலர் தற்போது சித்தரித்து விட்டனர்.
எங்களின் கடந்த கால வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. மக்களுக்காக பல செயற்பாடுகளை செய்துள்ளதோடு பல பிரச்சினைகளுக்கு தீர்வினையும் பெற்றுக் கொடுத்துள்ளோம். இனிமேலும் அவை தொடரும்.
மேலும் நாட்டின் வளங்களை பாதுகாக்கவும் இயற்கையை பாதுகாக்கவும் மூவின மக்களை பாதுகாக்கவும் நாம் முன்வருவோம். அது மட்டுமன்றி நாட்டில் பரவி வரும் போதைப்பொருள், கறுப்புப் பணம் என்பவற்றை தடுக்கவும் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய அனைவரையும் கட்டுப்படுத்தவும் நாம் துணை நிற்போம்.
குறிப்பாக பெளத்த மதத்தவரை கட்டாய மதமாற்றம் செய்யும் முஸ்லிம் மதவாத அமைப்புகளை ஒழித்து முஸ்லிம் தீவிரவாதத்தை முற்றாக ஒழிப்பதே எமது பிரதான நோக்கமாகும்.
http://www.tamilwin.com/show-RUmsyERaLXfs5.html
Geen opmerkingen:
Een reactie posten