நோர்வேயின் முன்னாள் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கையில் நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தொடர்பான நூல் ஒன்றை எழுதி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார். இந்தத் தகவல் அரசாங்கத் தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கக் கூடும்.
விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போது இல்லாது போயுள்ளதால், எரிக் சொல்ஹெய்மின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் அரசாங்கத் தரப்புக்கு இது சங்கடங்களை ஏற்படுத்தக் கூடும்.
ஏனென்றால்,நோர்வேயின் அமைதி முயற்சி மேற்கொள்ளப்பட்ட காலங்களில் நடந்த பல இரகசியச் சம்பவங்கள், இன்னமும் வெளியே வரவில்லை.
2000ம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மல்லாவி நகரில், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்தது தொடக்கம், மீண்டும் போர் வெடித்த பின்னருங்கூட, நோர்வேயின் அமைதி முயற்சிகளில் எரிக் சொல்ஹெய்மின் பங்கு முக்கியமானது.
இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்த அமைதி முயற்சிகளுடன் முழுமையகத் தொடர்புபட்டவர் என்று கூறத்தக்க சிலரே இருந்தனர்.
அதாவது அரசாங்கத் தரப்பில், முதலில் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கமும், பின்னர் மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் இந்த அமைதி முயற்சிகளில் தொடர்பு பட்டிருந்தன.
எனவே அரசதரப்பில் யாரேனும் அமைதி முயற்சிகளின் முழுமையான விடயங்களையும் அறிந்தவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.
அதேவேளை, விடுதலைப் புலிகள் தரப்பில் அமைதி முயற்சியுடன் தொடர்புடைய எல்லா விடயங்களையும் அறிந்திருந்தவர்கள் என்றால் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வன் போன்றோரைக் குறிப்பிடலாம்.
எனவே அரசாங்கத் தரப்பிலோ புலிகள் தரப்பிலோ நோர்வேயின் அமைதிப் பணி குறித்து முழுவதும் தெரிந்த எவரும் தற்போது இல்லை எனலாம். ஒருவேளை, அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் முழுமையாக இல்லாது போனாலும் கணிசமான விபரங்களை அறிந்தவராக இருக்கக் கூடும்.
எனவே ஆதி முதல் அந்தம் வரை இந்த விடயங்களில் தொடர்பு பட்டிருந்தவர் என்ற வகையில் எரிக் சொல்ஹெய்ம் மட்டும் தான், இப்போது இந்த அமைதி முயற்சிகள் குறித்து அறிந்தவர்களில் எஞ்சியிருக்கும் ஒரே ஒருவர் என்று குறிப்பிடுவதில் தவறில்லை.
எனவே, அவர் எழுதி வெளியிடப் போகும் நூல் பல சர்ச்சைகளை உருவாக்கலாம். பலருக்கு மனக்கசப்பை, மனக் கொதிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் பலருக்கு அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ கொடுக்கலாம்.
ஏனென்றால் அமைதி காலகட்டத்தில் நிறைய இரகசிய விவகாரங்கள் நடந்திருந்தன. அமைதி இலக்கு தவறவிடப்படக் கூடாது என்பதற்காக பல விடயங்கள் மறைக்கப்பட்டன. இன்னும் பல விவகாரங்கள் மறுக்கப்பட்டன. அவையெல்லாவற்றையும் வெளிக்கொண்டு வர எரிக் சொல்ஹெய்ம் முயற்சிக்கக் கூடும்.
ஏனென்றால், இப்போது இந்த அமைதி முயற்சிகள் அனைத்தும் காலம் கடந்து விட்டன. இனி இவற்றை மறைப்பதற்கும் ஒன்றுமில்லை. மறைப்பதால் சாதிக்கப் போவதும் எதுவுமில்லை என்ற நலை வந்து விட்டது.
அதேவேளை, இந்த அமைதி முயற்சிகளில் தொடர்பு பட்டிருந்த எரிக் சொல்ஹெய்ம் கூட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் தான். இப்போது கூட அவரை நோக்கி கொழும்பில் இருந்து கற்கள் வீசப்படுகின்றன.
எனவே, சமாதான முயற்சிகளில் தனது ஈடுபாடு, அதன் நடுநிலைமை என்பனவற்றை நிரூபிக்கவும், உண்மைகளை வெளிக்கொணரவும் அவர் இந்த முயற்சியில் இறங்குவது தவிர்க்க முடியாததே. தனது முயற்சிகள் அனைத்தையும் நியாயப்படுத்த இதுவே அவருக்கு உள்ள ஒரே வழியும் கூட.
ஏனென்றால், எரிக் சொல்ஹெய்மைப் பொறுத்தவரையில், சமாதான முயற்சிகளில் தொடர்பு பட்டிருந்த இரண்டு தரப்பிடமும் நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொள்ளவில்லை. நோர்வேயில் சமாதான முயற்சிகள் தொடங்கிய காலம் முதல் அது முறிவடையும் வரை, எரிக் சொல்ஹெய்ம் கொழும்பில் சிங்களத் தேசியவாதிகளால் ஒரு வெள்ளைப் புலியாகவே வர்ணிக்கப்பட்டார்.
புலிகளின் சீருடையுடன் சொல்ஹெய்மின் படம் தாங்கிய சுவரொட்டிகள் தென்பகுதியெங்கும் தினமும் புதிது புதிதாக காட்சியளித்த காலம் ஒன்றிருந்ததை மறக்க முடியாது.
இலங்கையைப் பொறுத்தவரையில், அவரது கொடும்பாவிகள், எரிக்கப்படளவுக்கு அவமரியாதை செய்யப்பட்டளவுக்கு வேறெவருக்கும் நேர்ந்திருக்காது.
இப்போதும் கூட சிங்களத் தேசியவாதிகளும் இப்போதைய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் எரிக் சொல்ஹெய்ம், புலிகளின் கைக்கூலி என்றே வர்ணிக்கின்றனர்.
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரி மற்றும் அரசதரப்பு ஊடகங்களின் முக்கிய பிரமுகர்கள் சொல்ஹெய்மை புலிகளுடன் தொடர்புபடுத்தி டுவிட்டரில் விமர்சித்திருந்தனர்.
இதுபோன்று தொடர்ந்து விமர்சித்தால், தமிழ் கடும்போக்காளர்களுடன் தொடர்பைத் துண்டித்தது போலவே உங்களுடனான தொடர்பையும் துண்டிப்பேன் என்று கடைசியாக எச்சரித்திருந்தால் சொல்ஹெய்ம்.
அரசதரப்பு சொல்ஹெய்மை, எப்படி விமர்சித்ததோ அதுபோலயே பிரபாகரனை அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்து விட்டதாக தமிழர் தரப்பும் ஒரு காலத்தில் விமர்சித்தது.
இரண்டு பக்கங்களிலும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து விட்ட எரிக் சொல்ஹெய்ம் எழுதப் போகும் நூல், பேச்சுக்கள் தொடர்பான எல்லா உண்மைகளையும் வெளிக்கொண்டு வரலாம். சில வேளைகளில் அவர் பல உண்மைகளை மறைக்கவும் முனையலாம்.
இரண்டு தரப்பும் அமைதி முயற்சிகளில் எந்தளவுக்கு நேர்மையைக் கடைப்பிடித்தன, எந்தளவுக்கு ஆர்வம் காட்டின என்பதை விட, எந்தளவுக்கு இருதரப்பும் பேச்சுக்களில் இருந்து நழுவ எத்தனித்தன என்பதையும் கூட இந்த நூல் வெளிக்கொண்டு வரலாம்.
ஏற்கனவே இலங்கையின் சமாதான முயற்சிகளில் ஏன் தோல்வி ஏற்பட்டது என்ற ஒரு ஆய்வை நோர்வே மேற்கொண்டிருந்தது. அந்த அறிக்கை பகிரங்கமாகவே வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அதில் நோர்வேயின் அமைதி முயற்சிகள் வெற்றி பெறாமல் போனதற்கு அரசாங்கம் மற்றும் புலிகள் ஆகிய இருதரப்பும் காரணம் என்று கூறப்பட்டிருந்தது.
எரிக் சொல்ஹெய்மின் நூல் அந்த ஆய்வை விட இன்னும் கனதியான தகவல்களை தரக்கூடம். ஏனென்றால் மிகச் சிக்கலான பல சம்பவங்களை அவர் எதிர்கொண்டவர் என்பதுடன், அவற்றில் பெரும்பாலானவை பகிரங்கப்படுத்தப்படவும் இல்லை.
எரிக் சொல்ஹெய்ம் அவற்றையெல்லாம் இன்மேலும் இரகசியங்களாகப் பாதுகாப்பார் என்று கருதுவதற்கில்லை.
எனவே அமைதி முயற்சியில் மறைக்கப்பட்ட பக்கங்கள் இந்த நூல் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படலாம்.
அது நோர்வேக்கு மட்டுமன்றி இலங்கையினதும் எதிர்கால அமைதி முயற்சிகளுக்குப் புதிய பாடங்களைக் கற்க உதவக் கூடும்.
ஹரிகரன்
Geen opmerkingen:
Een reactie posten