தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 april 2014

மயங்கிச் சரிந்தார்கள் உண்ணாவிரதம் இருந்துவந்த ஈழத்து உறவுகள் !


இந்தோனேசியாச் சிறையில் தமது விடுதலைக்காக ஏற்கனவே அறிவித்தபடி 21-04-2014 முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் ஒன்பது ஈழத்து உறவுகளில், ஏற்கனவே முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயப்பட்ட இருவர் மூன்றாவது நாளான இன்று மயங்கிச் சரிந்தார்கள்
கடந்த வருடம் அகதிகளாகச் சென்ற தங்களை விடுதலை செய்து பிறிதொரு குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் கோரிக்கையினை முன் வைத்து கடந்த 21-04-2014 அன்று திங்கட்கிழமை முதல் இந்தோனேசியாச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 9 ஈழத்து உறவுகளும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.
மூன்றாவது நாளான இன்று, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த உறவுகளான பிரசன்னா ரவீந்திரன் மற்றும் ரஞ்சித் அசோகராஜா ஆகிய இருவரும் மயக்க நிலைக்குச் சென்று மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைக்குச் சென்று விட்டனர்.
இவர்களின் உடனடி மயக்கத்திற்குக் காரணம், இவர்கள் இருவரும் ஏற்கனவே இலங்கையில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் மிகவும் மோசமாக படுகாயமடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தங்களது உடல் நிலையினையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள்.
மேற்குறிப்பிட்ட இருவரின் உடல்நிலையானது தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதற்கு இடம் கொடுக்காததால் அவர்கள் மயக்க நிலையினை அடைந்து மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்று விட்டார்கள். இவர்களோடு தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்ற 7 பேரது நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது. இவர்களும் இலங்கை முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
மூன்றாவது நாளான இன்று (23-04-2014) எந்தவொரு அதிகாரிகளும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை! உலக மனித உரிமை அமைப்புகளும் மற்றும் தொண்டமைப்புக்களும் இவர்களின் பரிதாப நிலையினைக் அறிந்தும் கண்டும் காணாமல் கண்மூடியே தூங்கிக் கொண்டிருக்கின்றது.
மேற்குறிப்பிட்ட மயங்கிய இரு நபர்களையும் குடிவரவு அதிகாரிகள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று விட்டதாக இவர்களோடு தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்ற பார்த்தீபன் தெரிவித்தார்.
பார்த்தீபன் தொடர்ந்து தெரிவிக்கையில் "இன்றுடன் தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றோம். எந்தவொரு அதிகாரிகளும் வந்து எமக்கு ஒரு நல்ல பதில் தரவில்லை! அவ்வாறு, ஒரு சில குடிவரவு அதிகாரிகள் வந்தாலும் உண்ணாவிரதத்தினை கைவிடும்படியும் நீங்கள் நினைப்பது எதுவும் நடக்காது" எனவும் மிரட்டும் தொணியில் கூறிச் சென்றதாகவும்... தொடர்ந்து மிகவும் சோர்வடைந்து பேசக்கூட முடியாமல், புலம் பெயர் தேசத்து ஈழ உறவுகளும், தமிழகத் தொப்புள் கொடி உறவுகளும் மற்றும் அரசியல் தலைவர்களும் தங்களது விடுதலைக்காக குரல் கொடுக்கும்படி கண்ணீர் மல்கி வேண்டிக் கொண்டார்.
உலகினில் பரந்து வாழுகின்ற தமிழ் உறவுகளே !
நமது உறவுகளின் விடுதலைக்காக எழுந்து வந்து குரல் கொடுக்க வாருங்கள் என... தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் அனைத்து தமிழ் உறவுகளிடமும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றது.


Geen opmerkingen:

Een reactie posten