தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 april 2014

தென்னாபிரிக்கா மீது இலங்கை அரசுக்கு சந்தேகம்! சமாதான முயற்சியில் சிக்கல்


மீள்குடியேற்றம் பற்றி மூடிமறைத்து தகவல்கள் வெளியிட்ட கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 10:51.51 AM GMT ]
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் கிளி. கூட்டுறவு சபை மண்டபத்தில் இணைத்தலைமைகளான வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார், அலன்டீலன், வடமாகாணசபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், கிளிநொச்சி கரைச்சி பிரதேசபையின் தவிசாளர் நாவை.குகராஜா, சபையின் உறுப்பினர்கள் பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசசபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என மாவட்ட அபிவிருத்தி வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் கலந்துகொண்டனர்.
மேற்படி கூட்டத்தில் மீள்குடியேற்றம் கல்வி உள்ளுராட்சி மருத்துவம் போன்ற துறைகள் பற்றிய கருத்துக்கள் கலந்துரையாடப்பட்ட நிலையில் நேரம் போதாமை காரணமாக நேர்த்தியான எந்த தீர்மானங்களும் இன்றி கூட்டம் நிறைவுபெற்றுள்ளது.
இங்கு மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராயப்பட்ட போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மூடிமறைத்து தகவல்களை வழங்கினார். பா.உறுப்பினர் சி.சிறீதரன் இரணைதீவு பரவிப்பாஞ்சான் போன்ற கிராமங்களின் மீள்குடியேற்றம் பற்றி வினாவிய போது இரணைதீவு மக்கள் மீள்குடியேறுவதற்கு தங்களிடம் இதுவரை கோரிக்கை விடவில்லையென அரசாங்க அதிபரால் சொல்லப்பட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பாக மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோரும் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கருத்துக்களை தெரிவித்தனர். இரணைதீவு கடற்படையினராலும் பரவிப்பாஞ்சான் இராணுவத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி கிராமங்களை சேர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியேறுவது தொடர்பில் அரசாங்க அதிபர் மற்றும் கரைச்சி பிரதேச செயலர், பூநகரி பிரதேச செயலர் ஆகியோர் அசமந்தப் போக்கில் இருப்பதான தோற்றம் காணப்பட்டது.
அடுத்து மாவட்டத்தில் கல்வி நிலைமைகள் தொடர்பாக தன்னுடைய புள்ளிவிபரங்களையும் அடைவுகளையும் கிளிநொச்சி வலய கல்விப் பணிப்பாளர் சமர்ப்பித்த நிலையில் மாவட்டத்தின் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றி சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
கிராமப்புற பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், எனவே இது உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்ட போதும் அது உடனடி சாத்தியமில்லையென கல்வி அதிகாரிகளும், அமைச்சரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அக்கராயன், ஜெயபுரம், முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி போன்றவற்றில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிறைவு செய்ய பா.உறுப்பினர்களான சி.சிறீதரன், மு.சந்திரகுமார் ஆகியோர் ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு வேதனங்கள் வழங்கி வருவதற்கு வலய கல்விப் பணிப்பாளர் நன்றி தெரிவித்தார்.
அத்தோடு மாவட்டத்தில் 95 ஆசிரியர்கள் சம்பள பட்டியலில் வேதனம் பெற்றுக்கொண்டு மாவட்டத்தில் கல்வி கற்பிக்காமல் வேறு மாவட்டங்களில் பிரசவம், பாலூட்டுதல், சுகயீனம் என காரணங்களை காட்டி இருப்பதாக கல்விப்பணிப்பாளர் முருகவேலால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பல ஆசிரியர்கள் மிகவும் இலகுவாக அழகாக மருத்துவச் சான்றிதழை பெற்று இணைத்து பல்வேறு காரணங்களுக்காக விடுமுறை பெற்றுக் கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கிராமப்புறப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்து நிலவிவரும் அதேவேளை, கிளிநொச்சி நகரை அண்டி மிகவும் குறுகிய தூரத்துக்குள் இரண்டு பாடசாலைகளில் மேலதிக வகுப்பு பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலையை வழிநடத்தும் கல்விப் பணிமனைக்கு இதுவரையில் நிரந்தர காணி இல்லை என்ற உண்மை நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வெளிவந்துள்ளது.
இதன்போது நிரந்தர காணி பற்றிய கேள்வி எழுப்பிய பா.உறுப்பினர் சி.சிறீதரன், இந்த கூட்டத்தில் கிளிநொச்சி வலய கல்விப்பணிமனைக்கு ஒரு நிரந்தர காணிபெற நடவடிக்கைக்கான தீர்மானத்தை இன்று எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் குருகுலராஜா கல்விப் பணிமனை அமைக்கக்கூடிய இடத்தில் இன்று வேறுவேறு நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு இப்போது கிளிநொச்சி அரச செயலகம் இயங்கிவரும் நிலம் வடமாகாணசபைக்கு சொந்தமானது எனவும், அதில் கிளிநொச்சி பொது நூலகம் மற்றும் விளையாட்டுத்துறைக்கான மண்டபங்களும் அமைக்க மாகாணசபை திட்டமிடுவதாக தெரிவித்த போதும் அந்த நிலத்தை முழுமையாக உடனடியாக தரமுடியாது எனவும், அதில் தொடர்ந்தும் அரச செயலகத்தின் சில பிரிவுகள் இயங்கும் எனவும் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.இதேவேளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானமின்றி அரசாங்க அதிபர் தனது சொந்த முடிவில் காணிகளை கைமாற்றுவது தொடர்பில் சபையில் விசனம் ஏற்பட்டது.
உள்ளுராட்சி தொடர்பாக ஆராய்வின் போது கரைச்சி பிரதேசசபையால் நிர்வகிக்கப்படும் சந்தைகளில் குறைபாடுகள் காணப்படுவதாகவும், வட்டக்கச்சி சந்தை இன்னும் திறக்கப்படவில்லை எனவும் வட்டக்கச்சியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீதி ஒன்று பிரதேசசபை உறுப்பினர் ஒருவரால் வேலை இடைநடுவில் நிறுத்தப்பட்டதாகவும் பா.உறுப்பினர் சந்திரகுமார் கருத்துத் தெரிவித்த போது இதற்கு அங்கு பிரசன்னமாகியிருந்த தவிசாளர் குகராஜா பதிலளித்தார்.
சபையை நடத்துவற்கு இடையில் இருக்கி;ன்ற இடையூறுகள் குறித்தும் கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளரின் தன்னிச்சையான செயற்பாடுகள் அசமந்தப் போக்குகள் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்தார். வட்டக்கச்சி சந்தை திறக்கப்படுவது ஏன்தாமதம் ஆகின்றது என்பதற்கான காரணங்களையும் பட்டியிலிட்டார்.
இதன்போது மாகாணசபை உறுப்பினர் தவநாதன் தவிசாளருடன் நாகரிகமற்ற வார்தைகளுடன் முரண்பட்டார்.  மேலும் வைத்தியர் குறைபாடுகள் போசாக்கின்மை, வேலையற்ற பட்டதாரிகள், கிளிநொச்சி தொழில் நுட்ப கல்லூரி எனபவை தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
 மேலும் கிளிநொச்சியின் தேசிய பாடசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மைதானம் தினமும் வெளியாரால் பல்வேறு நிகழ்வுகளுக்கு குறிப்பாக கல்வி நிலையை குலைக்கும் களியாட்ட நிகழ்வுகளிற்கு பயன்படுத்துவது குறித்து வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையால் கடுமையான கண்டனம் விடுக்கப்பட்டது. இதற்கு நடவடிக்கை எடுக்கப்பபடுமென இணைத்தலைமைகளால் உறுதி கூறப்பட்டுள்ளன.

தென்னாபிரிக்கா மீது இலங்கை அரசுக்கு சந்தேகம்! சமாதான முயற்சியில் சிக்கல்
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 05:32.41 AM GMT ]
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் ஒன்றை எட்ட வைப்பதற்கு தென்னாபிரிக்கா எடுத்து வரும் முயற்சிகளில் சிக்கல் தோன்றியுள்ளது.
தென்னாபிரிக்கா பக்கச் சார்பாக நடக்க முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் அரச தரப்பினரிடம் திடீரென ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைதி முயற்சிகளில் ஒரு மூன்றாம் தரப்பாக ஈடுபடுமாறு தென்னாபிரிக்காவுக்கு இலங்கை அரசே அழைப்பு விடுத்திருந்தது.
கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு வந்திருந்த தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவைச் சந்தித்து இது பற்றிப் பேசினார்.
அதன் பின்னர் இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கான சிறப்புத் தூதுவர் ஒருவரை தென்னாபிரிக்க அதிபர் நியமித்தார். அமைதி முயற்சிகளில் மிகுந்த அனுபவம் மிக்கவரும் அதிபர் சூமாவுக்கு நெருக்கமானவருமான சிறில் ரமபோஷா சிறப்புத் தூதராக நியமனம் பெற்றார்.
அவரது அழைப்பின் பேரில் இலங்கை அரசதரப்புக் குழு ஒன்று தென்னாபிரிக்காவுக்குப் பயணமாகியது. அந்த நாட்டின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்த அந்தக் குழு, இலங்கையின் நிலைமைகள் தொடர்பிலும் விளக்கியது.
அந்தப் பயணத்தைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் தென்னாபிரிக்காவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுடனான சந்திப்பின் போது தனது இலங்கைக்கான பயணத் திகதியை ரமபோஷா தெரிவித்திருந்தார்.
இப்போது இந்த விவகாரமே அரச தரப்பினரிடையே சிக்கலானதாக மாறியிருக்கிறது. இலங்கைக்கான பயணம் குறித்து அரசதரப்புக் குழு தென்னாபிரிக்கா சென்ற போது ரமபோஷா தெரிவித்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதன் பின்னரும், தனது பயணம் குறித்து அரசுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலையில் பயணத் திகதிகள் குறித்து கூட்டமைப்பினரிடம் அவர் எடுத்துக் கூறியிருப்பது தமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரச தரப்பினர் கூறுகின்றனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுக்களில் அனுசரணைப் பணியாற்றி வந்த நோர்வேயும் பக்கச்சார்பாக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டுகள் முன்னர் முன்வைக்கப்பட்டன.
இப்போது தென்னாபிரிக்காவும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதால் தான், முன்கூட்டியே அவர்களுடன் நெருக்கமாகப் பழகி விடயங்களைத் தெரிவிக்கிறார்களா? என்தே அரச தரப்பிரினரிடையே ஏற்பட்டுள்ள சந்தேகம்.
எனினும் இந்தச் சிக்கலைத் திறம்படக் கையாண்டு, திட்டமிட்டபடி ரமபோஷா இலங்கை வருவார் என்றும் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாயும் இரு மகள்மாரும் கைது
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 07:06.33 AM GMT ]
சென்னையில் இருந்து நேற்று இரவு இலங்கைக்கு வந்த தாயும் இரண்டு மகள்மாரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை இலங்கைக்கு கொண்டு வந்த நிலையிலே இவர்கள் கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 83 லட்சம் ரூபா மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இவர்களிடம் இருந்து 60,000 அமெரிக்க டொலர், 1,405 சவுதி ரியால், 1,200 யூரோ மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten