தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 april 2014

காட்டிக்கொடுப்பின் இரண்டாம் பாகத்தில் பொன்சேகா


ஐக்கிய நாடுகளின் தலையீட்டினால் முன்னேறிய நாடு ஏதாவது இருக்கின்றதா என தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கி ஆட்சி நடத்த வந்த உலக நாடுகளில் தலையிட்டு, அதன் ஆட்சித் தலைவர்களை விரட்ட ஐ.நா செயற்பட்டது போல் இலங்கையும் அந்த அமைப்பிடம் உதவி கோர நேரிடும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.
அவரது இந்த கருத்தை சிறிய விடயமாக கருதிவிட முடியாது. மிகவும் பாரதூரமான கருத்தாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவர் வெளியிட்ட வெள்ளைக்கொடி கதையை போன்று தனது காட்டிக் கொடுப்பின் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்துள்ளார்.
மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாத புலிகள் அமைப்பான தமது கூலிப்படையினரை பயன்படுத்தி, வளம் மற்றும் கேந்திர ஸ்தானம் என்ற வகையில் முக்கியமான இலங்கையை தமது தளமாக மாற்ற மேற்குலக ஏகாத்தியவாதிகள் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியை தழுவிய போதிலும் அவர்கள் தமது முயற்சிகளை இன்னும் கைவிடவில்லை.
ஐ.நா மனித உரிமை பேரவையை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் புதிய நடவடிக்கையாகும்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இலங்கை சம்பந்தமாக தனது ஆலோசனை வழங்க நியமித்த தருஸ்மன் குழுவில் ஆரம்பித்த செயற்பாடுகள், இன்று இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்துமாறு இலங்கையை வலியுறுத்த மனித உரிமை ஆணைக்குழுவை பயன்படுத்தும் வரை சென்றுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் நெருங்கிய தலையீட்டில் மேற்குறிப்பிட்ட ஐ.நாவின் இலங்கைக்கு எதிரான நடவடிக்கை நாட்டிற்குள் செயற்படுத்தப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் அதற்கு சார்பான செயற்பாடுகளை முன்னெடுத்து வெளிநாட்டு எதிர் சக்திகளை பலவற்றை காண முடிகின்றது.
நாட்டுக்கு எதிரான இந்த செயற்பாடுகளை முன்னர் மறைமுகமாக மேற்கொண்டு வந்த சரத் பொன்சேகா தற்போது பகிரங்கமாக அதனை மேற்கொண்டு வருவதுடன், முக்கிய பங்காற்ற முன்னுக்கு வந்துள்ளார் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten