தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 april 2014

தமிழ் தேசியத்தின் மீதான கிறிஸ்தவ சகோதரர்களின் பலத்தை சிதைக்க முயற்சி: சிறீதரன் எம்.பி அறிக்கை !


தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையோடு நெருங்கியிருந்து நீதிக்காக குரல் கொடுத்துவரும் கிறிஸ்தவ மதப் பெரியார்கள் மீது அவதூறு பூசும் வகையில் அண்மைக் காலமாக விசமிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் சம்பவங்கள் தொடர்பில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் வாழ்வுப் பாதையில் இந்தக்காலம் மிகவும் இருண்ட காலமாகவே இருக்கின்றது. இப்போது நம்மண்ணில் அதர்மம் கடை விரித்திருக்கின்றது.
யாரை எப்போது வேண்டுமானாலும் எத்தகைய அவதூறு சுமத்தியும் இந்த சமுகத்தில் இருந்து அன்னியப்படுத்தலாம் என ஆக்கிரமிப்பாளர்கள் எண்ணுகின்றனர். செயல்படுகின்றனர்.
வேலிகள் பயிரை மேய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. நீதியில் இனவாதம் புகுந்து நிற்கின்றது. தமிழ் மக்கள் இம்சைப்படுத்தப்படுவது வகை தொகையின்றி அரங்கேறுகின்றது.
அண்மைக்காலமாக தமிழ் மக்களின் தேசிய பற்றுணர்வையும் அதற்கு பலமாக இருக்கக்கூடிய சக்திகளையும் எவ்வகையிலாவது பலவீனப்படுத்த வேண்டும் என்ற தோரணையில் பல சம்பவங்கள் அரங்கேற்றப்படுவதை நம்மக்களில் அநேகம்பேர் அறிவார்கள்.
போருக்கு பின்னதான இதுவரையான ஆண்டுகளில் ஜனநாயக சூழலிலும் தமிழர்களின் அபிலாசைகள் மேலோங்கி நிற்பதை தடுக்க மழைக்காளான் போல பல விடயங்கள் அரங்கேற்றப் பட்டுவிட்டன.
இடையில் கிறிஸ் மனிதன் வந்துபோன கதையை அதன் பின்னணியை மக்கள் அறிவார்கள். எனவே அதர்மக்காரர்களால் அரங்கேற்றப்படுகின்ற இத்தகைய அசம்பாவிதங்கள் தமிழ் மக்களுக்கு புதிது அல்ல.
இதன் மூலம் ஒருபோதும் தமிழ்மக்களின் சுதந்திரமாய் வாழ்வது நோக்கிய அபிலாசைகளை புதைத்து விடமுடியாது மாறாக சுடசுட பளபளக்கும் தங்கமாய் தமிழர் கனவுமாறும்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் குருநகரை சேர்ந்த 23 அகவுடைய ஜெரோம் கொன்சலிற்றா என்ற இளம்பெண் கிணற்றுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னால் நடந்திருக்கக்கூடிய கிறிஸ்தவமத ஆயர்கள், அருட் தந்தையர்கள், அருட் சகோதரர்கள் மீதான விமர்சனங்களும் கண்டனங்களும் இயல்பாக மரணித்த கொன்சலிற்றாவின் குடும்பத்தின் துயரம், குமுறல்கள், கோபங்கள், முனைப்புக்கள் என்பவற்றை கடந்து இச்சம்பவத்தை விசமிகள் பலர் வேறு திசையில் கொண்டுசெல்ல முயல்வதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பில் நீதி விசாரணை நடக்கின்றது. அந்த மரணத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டியவரே.
ஆனால் இந்த சம்பவத்தை காரணமாக காட்டி தருணம் பார்த்திருந்த பலவிசமிகள் கிறிஸ்தவ மதத்தின்மீதும் அதன் குருபீடங்கள், குருவானவர்கள் மீதும் அவதூறுகளை விதைத்து தமிழ் மக்களில் இருந்து கிறிஸ்தவ மதம் சார்ந்த தேசிய பற்றுணர்வுள்ள ஆயர்களையும், அருட்தந்தையர்களையும், அருட்சகோதர சகோதரிகளையும் அவர்தம் கருத்துக்களையும் பிரிப்பதற்கும் அன்னியப்படுத்துவற்கும் முனைகின்றனர்.
இது மிகவும் கண்டிக்கதக்கது. தமிழர்களின் வரலாற்றில் குறிப்பாக 50களின் பின் தமிழர் போராட்டத்தில் மிகப்பலமான நீதியின் குரலாக கிறிஸ்தவ மதகுருமார்களின் பணி இருந்து வந்திருக்கின்றது.
தேவாலயங்கள் குண்டு வீசித்தாக்கப்பட்டுள்ளன. அங்கே தஞ்சமடைந்த தமிழர்கள் எறிகணைகளால் கொன்று குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். அருட்தந்தையர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். கடத்தப்பட்டிருக்கின்றார்கள். காணாமல் போயிருக்கின்றார்கள். 
போருக்குள் மனித உரிமைக்காவலர்களாக இருந்திருக்கின்றார்கள். இன்று போரின் பின்னதான காலத்தில் போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுரத்தை உலகுக்கு உரைக்கும் சாட்சிகளாக கிறிஸ்தவ மதகுருமார்களே முன்னிலை பெற்று தர்மத்தின் சாட்சிகளாக இருக்கின்றார்கள்.
மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருக்கோணமலை ஆயர்களும் அவர்களால் வழிநடத்தப்படும் அருட்தந்தையர்களும் தமிழ் மக்களுக்கான ஒரு வசந்த காலத்துக்காக பணி செய்கின்றார்கள்.
இறைவனை மன்றாடுகின்றார்கள். குறிப்பாக மன்னார் ஆயர் பெருந்தகை இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் மீது இன்று சிங்கள் பேரினவாத அமைப்புக்கள் மிகுந்த கோபம் கோண்டு அவர் மீது தான்தோன்றித்தனமான அறிக்கைகளை வாரி இறைப்பதை எமது மக்கள் அறியவேண்டும்.
கிறிஸ்தவ சகோதரர்கள் மீது பேரினவாதிகளின் கோபம் இன்று குவிந்துள்ளது. காரணம் இவர்கள் தமிழ் மக்களுக்கு இழைக்கபடும் கொடுமைகளை வெளிக்கொண்டு வருவதே. எனவேதான் இப்போது போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அநாதை பிள்ளைகளுக்கு உதவுகின்ற அருட்தந்தையர்களை நோக்கி பாலியல் விபசாரம் என கதைகளை அவிழ்த்துவிடுவது மட்டுமல்ல,
புனிதமான இந்து மதத்தின் பேரால் கிறிஸ்த்துவ மத பெரியார்களுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களையும் அச்சடித்து அரங்கேற்றி வருகின்றார்கள்.இவற்றையெல்லாம் யார்செய்வார்கள் என்பதை எமது மக்கள் உய்த்தறிவது அதிகம் கடிமானதே அல்ல.
எனவே மதங்களை மோதவிட நினைக்கும் விசமிகள் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய காலம் இது. தெற்கில் இஸ்லாமிய சகோதரர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவாத மதவாத குரல்களை அடக்குமுறைகளை வடக்கு கிழக்கிலும் பரப்பி இங்கு கிறிஸ்தவ சகோதரர் மீதும் மேற்குலக மக்களால் அதிகம் பின்பற்றப்படும் கிறிஸ்தவ மதத்தின்மீதும் இன்று சர்வதேசசூழல் மீதுள்ள வெறுப்பை பேரினசக்திகள் காட்டமுனைகின்றன.
எனவே தருணங்களை காத்திருந்து அல்லது சந்தர்ப்பங்களை உருவாக்கி தமது எமது சமூகத்தை கூறுபோட்டு கலவரங்களை தூண்டி, எமது தேசிய பிரச்சனையை திசை திருப்ப முயலும் சக்திகளுக்கு பலியாகாமல் தமிழ் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமானது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyERYLXgr3.html#sthash.i8hU7OWB.dpuf

Geen opmerkingen:

Een reactie posten