தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 april 2014

வீண் பொழுதாகக் கழிந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் !

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களினதும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இம்முறை இணைத் தலைமையின் கீழ் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளதால் முக்கியஸ்தர்கள் பலரும் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டதைக் காணமுடிந்தது. ெ
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இணைத் தலைவர்களாக அமர்ந்த போதிலும், முதலமைச்சரின் பங்கு மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கையே அங்கு ஓங்கி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலை ஏன் என்பது தெரியவில்லை. ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்டால் அதனைச் சரியாக வகிப்பதே நியாயமாகும். அதனை விடுத்து ஏனோ தானோ என இருப்பதை விடுத்து பொறுப்புக்களிலிருந்து விலகிக் கொள்வதே நேர்மையான செயலாகும்.
ஒரு மாவட்டத்தின் ஒட்டு மொத்த நிலை தொடர்பாக ஆராய்ந்து குறைகளை நிவர்த்தி செய்யக் கூடியதொரு களமாக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள் அமைந்துள்ளன. அதில் பல்வேறு திணைக்களங்களின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்வதால் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும், குறைகளை நிவர்த்தி செய்வதிலும் சாதகமான சூழ்நிலை காணப்படுகின்றது.
ஆனால் நடைபெற்று முடிந்த கூட்டங்கள் எதுவித பயனுமின்றி வீண்பொழுதாகவே கழிந்துள்ளமை நிதர்சனமாகத் தெரிகின்றது.
மக்களை ஓர் ஆட்டு மந்தைக் கூட்டமென அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் நினைக்கும் வரை இந்த நிலைதான் நீடிக்கப் போகின்றது. மேலும் இந்தக் கூட்டங்கள் அரசியல் வாதிகள் சிலர் பொழுதைக் கழிக்கும் வகையில் வேடிக்கை விநோதங்கள் நிறைந்தனவாக அமைந்தமை மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும். இன்று இந்த நாட்டிலுள்ள சாமானிய மக்கள் எதிர்கொள்கின்ற கஷ்டங்கள் சொல்லிமாள முடியாதவை.
ஒருவேளை உணவைக் கூடப் பெற முடியாத நிலையில் பலர் வாடி வருகின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை எட்ட முடியாத உயரத்துக்குச் சென்று விட்டது. இது ஒரு புறம் இருக்க மழை பெய்தாமையும், கடும் வரட்சியும் ஒன்று சேர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை அதல பாதாளத்தினுள் தள்ளிவிட்டது. இவர்களுக்கு உடனடியாக எதையாவது செய்ய வேண்டிய நிலையில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களை இவ்விதம் பயனற்ற வகையில் நடத்திக் கொண்டிருப்பதை மனச்சாட்சியுள்ள எவரும் மன்னிக்கவே மாட்டார்கள்.
அதிலும் சில திணைக்களங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்த முக்கியமான கருத்துக்களை உயர் பதவி வகிக்கும் அரசியல்வாதிகள் சிலர் ஏளனமாகப் புறமொதுக்கியதாக வெளி வந்த செய்திகள் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் கருத்துக்களை பொறுமையோடு உள்வாங்கி அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதே உயர் பதவி வகிக்கும் அரசியல்வாதிகளின் பொறுப்பாகும். இதன் மூலமாகவே மக்களின் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு கிடைக்கும்.
இதில் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். மக்களின் பெரும் எதிர்பார்ப்புடன் அமைக்கப்பட்ட வடமாகாண சபை அவர்களின் அபிலாஷைகளில் ஒரு சதவீதத்தையேனும் நிறைவேற்ற முடியாத நிலையில் பெயரளவுக்கு மட்டுமே இயங்கி வருகின்றது. அதன் அதிகாரச் சிறகுகள் யாவும் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன.
முதலமைச்சர் என்றொருவர் பெயரளவுக்கு மட்டுமே உள்ள நிலையில் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரே இன்றுவரை அரசோச்சி வருகின்றார். எதற்கெடுத்தாலும் அவரின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க வேண்டிய பரிதாப நிலையில் மாகாண சபை காணப்படுகின்றது. இதே நிலை நீடிக்குமாயின் மாகாண சபையை மக்கள் மறந்து விடும் நிலையும் ஏற்பட்டு விடலாம். மாகாண சபையின் அமர்வுகளும் கூட, விவாதங்களும், கண்டனங்களும், வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெறும் ஒரு களமாகவே மாறி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
தீர்மானங்களை நிறைவேற்றுவதிலேயே காலம் கழிந்து வருகின்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்பெட்டியில் தூசுகளுக்கு மத்தியில் படுத்து உறங்குவதையும் காண முடிகின்றது. இந்த நிலைக்கு முடிவு காணப்படாது விட்டால் கிழக்கு மாகாணத்தைப் போன்றே வட மாகாணத்தின் நிலையும் மாறிவிடும்.
இந்த நிலையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களும் தற்போது உள்ள நிலையில் தொடருமானால் நிலைமை எந்த அளவுக்கு மோசமாகிவிடும் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியாதுள்ளது. மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக் கூட்டங்களில் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்தமையை எவரும் மறுக்க முடியாது.
தாம் சார்ந்த மக்கள் நலனில் அவர்கள் கொண்டுள்ள அக்கறையும் தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் ஆளும் தரப்பினர் இவற்றையெல்லாம் அக்கறையுடன் உள்வாங்குவதாகவே தெரியவில்லை. மாறாக குதர்க்கவாதம் பேசிப் பேசியே பொழுதை வீணாக்கி வருகின்றனர். தாமும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளே என்பதை இவர்கள் மனதில் கொள்வதாகவே தெரியவில்லை. இரண்டு கைளும் இணையும் போது தான் ஓசை எழும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளாதது வேதனை தருகின்றது.
இன்னுமொரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் இனிமேல் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களையே தெரிவு செய்ய முடியும் என்பதே அந்தச் செய்தியாகும். தற்போது ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்தத் தகவல் அரசியல்வாதிகளின் வயிற்றில் நிச்சயம் புளியைக் கரைக்கும் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் இதற்கு வேறொரு மாற்றுத் திட்டத்தை அவர்கள் இரகசியமாக வகுத்துக் கொண்டிருப்பார்கள் என்பதில் ஐயமே இல்லை. ஆகவே அரசியல் வாதிகள் பிழைத்துக் கொள்ள மக்கள் பாடுதான் திண்டாட்டமாக மாறியுள்ளது.
இனியும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை அவர்கள் மீது அக்கறை கொள்ளாத சகல தரப்பினரும் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் எதற்கும் ஓர் எல்லையும் உண்டு. அளவும் உண்டு. மாகாண சபைக் கூட்டம், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எனக் கூறிக்கொண்டு பொழுதைக் கழிக்கும் நேரமல்ல இது.
மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகவே தீர்வு காணப்பட வேண்டும். சாக்குப் போக்குகளைக் கூறிக்கொண்டு இனியும் காலம் கடத்தலாம் என்ற சிந்தனைக்கு முற்றுப் புள்ளி இடப்பட வேண்டும். மக்கள் மிகவும் நொந்த நிலையில் துயரங்களுடன் உரிய தீர்வுகளைப் பெறும் பொருட்டுக் காத்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு அரசியல்வாதிகளின் வார்த்தைகள் தேவையில்லை. செயல்களே வேண்டும். இனியாவது இதில் ஒரு மாற்றம் ஏற்படாது காலம் கடந்து கொண்டே போகுமாயின் இதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்குமென்பதைக் கூறத் தேவையில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyERYLXgu1.html

Geen opmerkingen:

Een reactie posten