[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 09:30.48 AM GMT ]
அடுத்த மாதத்தில் நடைபெறவிருக்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது ஜேக்கப் சூமாவின் உதவி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் சிறில் ரமபோசா.
இலங்கை விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை ஏற்ற பின்னர் அது தொடர்பாக வெளிப்படையாக அவர் செய்தி வெளியிட்டுக் கருத்துக் கூறியமை இதுவே முதல் தடவையாகும்.
புதிய அரச முறைமை ஒன்றைக் கட்டியெழுப்புவதில் தென்னாபிரிக்காவின் மீளெழுச்சி பல நாடுகளை எம் பக்கம் திருப்ப வைத்திருக்கிறது.
ஜனநாயக விழுமியங்களைப் பேணி, மனித உரிமைகளை மதிக்கும் எமது போக்கினால் மேலும் மதிக்கப்படுகின்றோம். அதனால் இலங்கை உட்பட பல நாடுகள் எம்மை மதித்து நோக்கத் தொடங்கியுள்ளன.
கடந்த வருடம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிற்கு எமது ஜனாதிபதி ஜேக்கப் சூமா இலங்கை சென்றிருந்த போது, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச "ஜனாதிபதி சூமா அவர்களே! இலங்கையில் எமது மக்கள் மத்தியில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உதவ மாட்டீர்களா?" - என்று அவரிடம் வினாவினார்.
இலங்கை மக்களை இணைப்பதில் தென்னாபிரிக்கா முக்கிய பங்காற்றுவதை நாம் விரும்புகின்றோம்." என்றும் அவர் கூறியிருந்தார்.
எங்களது நாட்டைப் பல நாடுகள் 'தோற்றுப் போன நாடாக' முன்னர் கருதின. அத்தகைய நாடுகள் பல இப்போது எங்களின் உதவியை நாடி வருகின்றன.
இலங்கை போன்ற நாடுகள் எம்மை மதித்து எமது உதவியைக் கோரியுள்ளன.
இவ்வாறு இரண்டு நிகழ்வுகளில் பேசும் போது சிறில் ரமபோசா கருத்து வெளியிட்டார்.
அவற்றில் ஒன்று தென்னாபிரிக்காவின் தமிழ் பாரம்பரியக் குடிகளின் வழித்தோன்றல்களின் ஞாயிறு வழிபாடு அங்குள்ள ஶ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.
அதன் பின்னர் அங்கு பேசுகையிலேயே ரமபோசா இத்தகவல்களை வெளியிட்டார்.
யாழ்.பல்கலை.யினுள் படைப்புலனாய்வாளர்களின் நடமாட்டம் நிறுத்தப்பட வேண்டும்! வடமாகாண சபையில் தீர்மானம்
[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 10:37.17 AM GMT ]
யாழ். பல்கலைக்கழகத்தினுள் இராணுவ புலனாய்வு பிரிவினரின் நடமாட்டத்தை தடைசெய்யுமாறு இன்று கைதடியில் இடம்பெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ரி.லிங்கநாதன் மேற்படி தீர்மானத்தினை முன்மொழிந்திருந்தார்.
மேற்படித் தீர்மானம் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் படையினர் மற்றும் படைப்புலனாய்வாளர்களின் நட மாட்டம் அதிகரித்திருக்கும் நிலையில் மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் படையினர் மற்றும் படைப்புலனாய்வாளர்களின் நடமாட்டம் நிறுத்தப்படவேண்டும்.
அதற்கான வேண்டுகோளினை வடமாகாணசபை பல்கலைக்கழகத்திடம் விடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை மாகாணசபையின் 8ம் அமர்வில் தனியார் நிகழ்வுகளில் படையினர் தலையீடு, மற்றும் படையில் ஆட்சேர்க்கப்படுகின்றமை தொடர்பிலும் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
குறிப்பாக மாகாணசபை உறுப்பினர் அரியரட்ணம் உரையாற்றுகையில்
முல்லைத்தீவு, மல்லாவியில் பாடசாலை நிகழ்வில் அழையா விருந்தாளிகளாக கலந்து கொண்டிருந்த படையினர், பாடசாலையில் தேசிய கீதம் தமிழ்மொழியில் பாட முற்பட்ட போது தடுத்து சிங்கள மொழியில் பாடவேண்டும் என பணித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து சிங்கள மொழியில் மட்டுமல்ல தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைப்பதற்கு அரசியலமைப்பில் அனுமதி உள்ளது என சபையில் ஏனைய உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், படையினரை இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தடுப்பதற்கு பொறிமுறை அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் அரசியலமைப்பினை ஏற்றுக்கொள்ள முடியாதென கூறிய உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இலங்கையின் அரசியலமைப்பை எரித்து குப்பையில் போடவேண்டும் என கூறினார். இதனால் சபையில் குழப்பம் உருவானது. பின்னர் சபை ஒழுங்கிற்கு கொண்டுவரப்பட்டு இயல்பாக நடைபெற்றது.
இதேபோன்று படையினருக்காக வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் ஆட்சேர்ப்பு தொடர்பாக கடுமையான கண்டனம் சபையில் தெரிவிக்கப்பட்டதுடன், இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் நாட்டில் தற்போது அமலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினால் தமிழ் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள்.
குறிப்பாக பல தமிழ் இளைஞர், யுவதிகள் கைது செய்யப்படுகின்றார்கள். எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க இந்த மாகாணசபை இலங்கை மத்திய அரசாங்கத்தை கோரவேண்டும் என சபையில் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இவை அனைத்தும் சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை 8ம் அமர்வில் ஒத்திவைப்பு பிரேரணை உள்ளடங்கலாக மொத்தம் 13 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவராக ரி.தவராசா இன்றைய தினம் பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
வட மாகாணசபையின் ரவிகரனின் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்
வடமாகாணசபையின் எட்டாவது அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது.
இந்நிலையில் முன்னர் நீக்கப்பட்டு இறுதியில் சில மாற்றங்களுடன் சேர்க்கப்பட்ட பிரேரணையாகிய “கடும் இராணுவஅழுத்தங்களுடன் நடைபெறும் இராணுவ சேர்ப்பு” தொடர்பிலான பிரேரணை உட்பட மூன்று பிரேரணைகள் வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் முன்மொழியப்பட்டு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ரவிகரனால் குறிப்பிடப்பட்ட 3 பிரேரணைகளில் இரண்டு பிரேரணைகள் ஏற்கனவே அவைத்தலைவரால் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது பிரேரணையாகிய இராணுவ சேர்ப்பு தொடர்பிலான கண்டனப் பிரேரணை முன்னர் நீக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட வாதங்களின் பின்னர் சில திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு இன்று முன்மொழிவுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.
அப்பிரேரணையின் முழுவடிவம் பின்வருமாறு,
எமது மக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்பட்டு இருக்கிற நிலையில் ஓரளவேனும் தமது இன்னல்களுக்காக குரல் கொடுப்பவர்களும் குடும்ப வாழ்வாதாரத்தின் அத்திவாரமாக இருப்பவர்களும் தேசத்தின் இளைய சமூகம் தான்.
பல்வேறு வழிகள் மூலமும் அவர்களின் குரல்கள் நசுக்கப்பட்டு நிமிர்ந்து நிற்பவன் இன்று பயங்கரவாதியாக்கப்பட்டு அவனின் குடும்ப வாழ்வாதாரம் சிதைக்கப்படுகிறது. சொந்த மண்ணில் இருந்து வெளிநாடு செல்லும் தமிழர்களில் பெரும்பான்மையினரின் பின்னணியில் இங்கு நடைபெறும் அடக்குமுறைகளின் தடயங்களே காணப்படுகிறது.
இந்நிலையில் அங்கு சென்றும் சிறைப்படுபவர்களின் குடும்ப வாழ்வாதாரம் இன்னும் நலிவடைந்தே செல்லும் நிலை.
இவ்வாறு தமிழின அடக்குமுறைகள் எந்த வடிவத்தில் வருகின்ற போதிலும் அதனை எதிர்த்து நிற்கவேண்டிய தமிழர்களின் பிரதிநிதிகள் நாம் என்பதை இங்குள்ள அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
வீடுகளில் சென்று மிரட்டியும் சில பொய்யான தகவல்களை கூறியும் நடைபெறும் இப்படியான கடும் இராணுவ அழுத்தங்களுடன் இடம்பெறும் இராணுவ சேர்ப்பு நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதொன்று. அழுத்தங்களுக்கு உள்ளாகிற தமிழ் குடும்பங்கள் இத்தகவல்களை வெளியில் யாரிடமாவது முறையிடும் நிலையில் பொய்க்குற்றச்சாட்டுகள் தம்மீது பாய்ந்து தாம் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற கலக்கமும் இன்று ஏராளமான குடும்பங்களின் எண்ணங்களில் தங்கியுள்ளது.
இந்நிலையில் இவ்வாறான அடக்குமுறைகளை எதிர்த்து போராட வேண்டிய கடப்பாடு உடைய நாம் இச்சபையின் இது தொடர்பிலான கண்டனத்தை தெரிவித்தலும் அவசியமாகிறது.
இது தொடர்பிலான இங்கு ஏற்றுக்கொள்ளத்தக்க எனது பிரேரணையாக இராணுவம் அண்மைக்காலத்தில் முறையற்ற விதத்தில் இளைஞர் யுவதிகள் சம்பந்தமாக (நடாத்தப்படும் முறையற்ற செயல்கள்) அவர்களிடையே தொடர்ந்து பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய செயல்களில் இராணுவம் தொடர்ந்து நடந்து கொள்வதை இச்சபை கண்டிக்கிறது என்பதை துரைராசா ரவிகரன் ஆகிய நான் முன்மொழிகிறேன்.
இது தவிர ரவிகரனால் முன்வைக்கப்பட்ட ஏனைய இரண்டு பிரேரணைகளான,
2009ம் ஆண்டு வரை வன்னியில் வசித்து இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் சொந்த இடங்களில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு UNHCR மூலம் 25000 ரூபாவும் ஏனைய நிறுவனங்களின் பங்களிப்பில் 25000 ரூபாவும் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இரண்டாவதாக வழங்கப்பட்ட 25000 ரூபா இன்று வரை வழங்கப்படவில்லை. இதே நேரம் குடாநாட்டில் உள்ள சில பிரதேச செயலகங்கள் அப்பணத்தை வழங்குவதாக மக்களிடம் கையொப்பம் பெற்ற போதும் இன்னமும் பணம் வழங்கப்படவில்லை.
எனவே வழங்கப்படாத மிகுதிப்பணத்தை வழங்க வேண்டிய அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு மத்திய மீள்குடியேற்ற அமைச்சினை இச்சபை கோருகிறது.என்ற பிரேரணையும்,
முள்ளிவாய்க்கால் மீனவர்கள் ஏற்கனவே பாவித்த இறங்குதுறையை அவர்களுக்கு விடுவித்துக் கொடுக்க வேண்டும் எனவும் கொக்கிளாய் தமிழ் மீனவர்களுக்கான இறங்கு துறையை பொருத்தமான இடத்தில் அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் பணிப்பாளர் கடற்றொழில் நீரியல் வளத்துறையை இச்சபை கோருகிறது.
என்ற பிரேரணையும் வடமாகாணசபையின் எட்டாவது அமர்வில் ரவிகரனால் முன்மொழியப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
Geen opmerkingen:
Een reactie posten