விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அடுத்த புதிய தலைவர் சந்தோஷம் மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தலைவரின் பெயர் சந்தோஷம் மாஸ்டர் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால் ஏற்பட்டுள்ள பெயர் குழப்பம்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஏற்கனவே இருந்த சந்தோஷம் மாஸ்டர், 1987-களின் இறுதிப்பகுதியில் உயிரிழந்திருந்தார். அந்த சந்தோஷம் மாஸ்டருக்கும், தற்போது நியமிக்கப்பட்டுள்ள தலைவருக்கும் ஒரே பெயர் உள்ளதால் ஏற்பட்ட குழப்பம் அது.
முன்பு இருந்த சந்தோஷம் மாஸ்டரின் நிஜ பெயர், கணபதிப்பிள்ளை உமைநேசன். அவர், இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தபோது நடந்த யுத்தத்தில், 1987-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி உயிரிழந்தார். தற்போது புதிய தலைவராகியுள்ள சந்தோஷம் மாஸ்டர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்ததே, 1995-ம் ஆண்டு தான்.
இதனால்தான், இந்த மாஸ்டரின் பெயர், பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கோபி எனப்படும் காசியன் மாஸ்டர், இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, இந்த மாஸ்டர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் கோபிக்கும், புதிய தலைவர் சந்தோஷம் மாஸ்டருக்கும் இடையே தொடர்புகள் இருந்ததாகவும் தெரிகிறது. இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சியில் கோபி இறங்கிய போது, வெளிநாட்டில் இருந்து உதவி செய்தவர்களில், சந்தோஷம் மாஸ்டரும் ஒருவர்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான இறுதி யுத்தத்தின் போது, முன்னாள் தலைவர் கோபியும், புதிய தலைவர் சந்தோஷம் மாஸ்டரும் ராணுவத்திடம் சரணடைந்தனர். அதையடுத்து, தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தனர்.
தடுப்பு முகாமில் இருந்து கோபி தப்பி, வெளிநாடு சென்றார். அதன்பின் வெளிநாட்டு விடுதலைப்புலி பிரிவான “நெடியவன்” படையணியால் தலைவராக்கப்பட்டு, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டார்.
2009-ம் ஆண்டு மே மாதம் ராணுவத்திடம் சரணடைந்த சந்தோஷம் மாஸ்டர், தொடர்ந்து தடுப்பு முகாமிலேயே தங்கியிருந்தார்.
இவருக்கான புனர்வாழ்வு பயிற்சிக்காலம் முடிந்து 2010-ம் ஆண்டு விடுதலையான பின், இலங்கையில் இருந்து சுவிட்சலாந்து சென்றார். அதன்பின் அவர் தொடர்பான தகவல் ஏதும் வெளியாகியிருக்கவில்லை.
இப்போதுதான், அவர் விடுதலைப் புலிகளின் தலைவராகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
புலிகளின் புதிய தலைவர் சந்தோஷம் மாஸ்டரின் நிஜ பெயர், பரமானந்தன் யாதவன். 1979-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி பிறந்த இவர், தனது 16 வயதிலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர்.
கிடைத்துள்ள தகவல்களின்படி, தற்போது சுவிட்சலாந்தில் வசிக்கும் சந்தோஷம் மாஸ்டர், விடுதலைப் புலிகளின் இரண்டு சுவிஸ் வங்கிக் கணக்குகளை இயக்கி வருவதாகவும், வெளிநாடுகளில் இவரின் கீழ் 40 விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் இயங்கி வருவதாகவும் தெரிய வருகிறது.
தலைவராக நியமிக்கப்பட்ட இவர், இலங்கை சென்று விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு உயிர்கொடுக்க திட்டமிட்டிருந்த போது, இவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விபரம் வெளியே தெரிய வந்து விட்டதில், தற்போது இலங்கை செல்வது சந்தேகமே என்கிறார்கள்.
ஆனால் புதிய தலைவர் இலங்கையில் 60 செல்போன்களைக் கொண்ட விடுதலைப் புலிகளின் நெட்வெர்க் ஒன்றை இயக்கி வருவதாக குறிப்பிடப்படுகிறது.
செல்போனா?…. கிழிஞ்சுது!
அதனால்தானே புலிகள் பலர், இலங்கை உளவுத்துறையிடம் சிக்கினார்கள்!
(விறுவிறுப்பு)
Geen opmerkingen:
Een reactie posten