மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னமும் 12,000 குடும்பங்கள் வீடுகளின்றி நிர்க்கதி நிலையிலுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் கிழக்கு மாகாணத்திற்கான திட்ட ஒருங்கிணைப்பாளர் ரீ.மயூரன் தலைமையில் கிராமிய வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற அனர்த்தங்கள் காரணமாக, மிக மோசமாக மக்களின் வாழ்விடங்களே பாதிக்கப்படுகின்றன. கடந்த காலத்தில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளம், யுத்தம் மற்றும் சுனாமி காரணமாக சேதமான சுமார் 23,000 வீடுகளில் 11,000 வீடுகளை நிர்மாணித்து மக்களிடம் நாம் கையளிக்க முடிந்தது.
இவ்வருடத்தில் 4,400 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்திய அரசாங்கத்தினுடைய உதவியின் கீழ் 2,500 வீடுகளும் யூ.என்.ஹபிடாற் உதவியின் கீழ் 1000 வீடுகளும் ஏனைய 1000 வீடுகள் சுவீடன் கூட்டுறவு நிலையம் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் எமது மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படுகின்றன.
இதனை விட, இன்னமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள 8,000 குடும்பங்களுக்கு வீட்டு வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.
இந்திய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நிதியொதுக்கீட்டின் கீழ், மேலும் 1,500 வீடுகளைக் கட்டிக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம். அத்துடன், யூ.என்.ஹபிடாட்டின் 02ஆம் கட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மேலும் 1000 வீடுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைத்துக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம். இவை கிடைக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ளவர்களுக்கான வீட்டுத் தேவைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் பூர்த்தி செய்யலாமென்று எண்ணுகிறோம் என்றார்.
மேலும் தங்களுக்கு வீடு கிடைக்காத பொதுமக்கள் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கு வீடு கிடைக்கவில்லையென்ற காரணத்துக்காக, கிராம அலுவலகருடனோ அல்லது பிரதேச செயலாளருடனோ அல்லது உதவி நிறுவன அதிகாரிகளுடனோ முரண்பட்டுக்கொள்ளக் கூடாது. உங்களுக்காக முன்வந்து இக்கிராமத்தைத் தெரிவுசெய்து வீடமைப்பை மேற்கொண்டு வருகின்ற சுவீடன் கூட்டுறவு நிலையத்திற்கு நீங்கள் நன்றிக்கடன் பட்டவர்களாய் இருப்பதோடு, அவர்களது வீடமைப்புத் திட்டம் முழுமையாக வெற்றி பெற பொதுமக்களாகிய நீங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுவன்கேணி, பெரியமடுவில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கான மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ், 20 வீடுகள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Geen opmerkingen:
Een reactie posten