[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 06:37.09 AM GMT ]
இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மீன்பிடி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் டெனீஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, இந்திரராஜா ஆனோல்ட், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் நாவை.குகராஜா, வைத்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் உட்பட அதிகாரிகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அங்கம் வகித்திருந்தனர்.
இந்தக்குழு நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தது.
அத்துடன், கிராம மட்ட பிரதிநிதிகள், கல்வித்துறை, வைத்தியத்துறை, கடற்றொழில், மதகுருமார், பிரதேச செயலர் மற்றும் பிரதேச சபையை சேர்ந்தவர்கள் என பல்வேறு மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாடியதுடன், அவர்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்ததுடன் அதற்கான தீர்வுக்கான நடவடிக்கைகளை மிக விரையில் எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyERZLXgx5.html
தமிழ் அமைப்புகளுக்கு இடையேயான ஒற்றுமையின் அவசியம்!
[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 06:10.19 AM GMT ]
ஈழத் தமிழர்களின் இன்றைய அவலத்துக்கும், ஆதரவின்மைக்கும் அடிப்படை காரணமாக இருந்தவர்கள், இலங்கையை இறுதியாக ஆண்ட பிரித்தனியர்களேயாகும். பல்லாண்டு காலம் இலங்கையை கைப்பற்றி அரசாண்டவர்கள், சுதந்திரம் வழங்கி நாட்டை விட்டு வெளியேறும் போது பெரும்பான்மை என்ற ஒரே காரணத்துக்காக சிங்களவரிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு சென்றவர்கள், நாட்டிலுள்ள அனைத்து உரிமைகளுக்கும் உரித்தான தமிழினத்தை அதே சிங்களவரின் ஆதிக்கத்தின் கீழ் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள அரசுகளின் வன்முறைக்கு ஆளான தமிழினம், அகிம்சை முறையில் போராடி, இறுதியில் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது. தமிழருக்கான உரிமை, உடமை, உயிர் என்பன பறிக்கப்பட்ட நிலையில், வசதி வாய்ப்பை பெற்ற தமிழ் மக்கள் அகதிக் கோரிக்கையோடு புலம்பெயர்ந்தார்கள். தம்மை நட்டாற்றில் விட்ட பிரித்தானியாவிலும், ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளிலும் தஞ்சமடையும் நிலை தமிழருக்கு ஏற்பட்டது.
போரின் பின்பும் இலங்கையில் தொடரும் தமிழின அழிப்பை தடுத்து விடும் நோக்கோடு புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் பல முன்னெடுப்புகளை செய்து வருகிறார்கள். இலங்கைக்கு எதிரான போராட்டங்களை தாம்வாழும் நாடுகளை தளமாக வைத்து புலம்பெயர்ந்த தமிழினம் எடுக்க முற்பட்டிருப்பதானது, முக்கியமாக பிரித்தானிய அரசுக்கு முன்செய்த தவறுக்கான குற்ற உணர்வை தூண்டுவதாகவும், இறுதிப் போருக்கு உதவிய சர்வதேச நாடுகளுக்கு மனிதாபிமான கதவுகளை திறப்பதாகவும் அமைந்துள்ளது. அதன் வெளிப்பாடுகளே ஐ.நா மனித உரிமை பேரவையில் வெளிப்படுத்தப்படுகின்றன என கொள்ளலாம்.
மகா பாரதத்தில் இடம்பெற்றது போன்று கௌரவர்களிடம் பஞ்ச பாண்டவர் நாடு கேட்டு, நகரங்கள் கேட்டு, கிராமங்கள் கேட்டு, ஊர் கேட்டு, வீடு கேட்டும் கிடைக்காதது போன்ற ஒரு நிலையில்தான் ஈழத் தமிழினம் இன்று இருக்கிறது.
இந்த நிலையை உருவாக்கி விட்டவர்கள் பிரித்தானியர்களாக இருந்த போதும், உரிமைக்கான வாய்ப்பை ஒன்றுபட்டு நின்று அணுகாமல். பிரிந்து நின்றதன் காரணமாகவே அது தமிழினத்தின் சாபக்கேடாக இன்றும் தொடர்கிறது. ஐம்பதுக்கு ஐம்பது கேட்டு ஒருபுறம், சமஸ்டி கேட்டு ஒருபுறம், ஆரம்ப காலத்திலேயே பிரிந்து நின்றதன் விளைவையே இன்று தமிழினம் அனுபவிக்கிறது.
தமிழரிடம் இருக்கும் ஒற்றுமையின்மையை புரிந்து கொண்டதன் காரணமாகவே சிங்கள ஆட்சியாளர்கள் தமது ஆதிக்கப் பிடியிலிருந்து சிறிதும் இறங்கி வராத கொள்கையை கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள். சுகபோகத்துக்காக தமது இனத்தையே காட்டிக்கொடுக்க தயங்காத ஒரு கூட்டம் தமிழரிடம் இருக்கிறது என்பதும் அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்த விடயம். இவற்றின் காரணமாகவே அன்று தொட்டு இன்றுவரை, போரின்போதும் சரி, அதன் பின்பும் சரி தமிழனை வைத்தே தனது இன அழிப்பு நடவடிக்கைகளை இலங்கையின் இனவாத அரசு மேற்கொண்டு வருகிறது.
புத்த மத வெறியர்களினதும், கடும்போக்கு சிங்கள இனத்தவரினதும், இனவாத அரசியல்வாதிகளினதும் தூண்டுதலின் பெயரில் அவர்களது நடவடிக்கைகள் அனைத்தையும் பின்புலமாகவும், பக்க பலமாகவும் இருந்து இயக்குவது மகிந்த அரசே. தமிழனத்தை அழிப்பதிலும், அவர்களது உரிமைகளை பறிப்பதிலும், சமூக சீர்கேடுகளை திணிப்பதிலும், தமிழரின் நிலங்களை பறிப்பதிலும், மொழி மதம் கல்வி என்பவற்றை சிதைப்பதிலும் இனவாதிகளோடு கைகோர்த்து நிற்கிறது இலங்கை அரசு. அதற்கான அதிகாரங்களும், படை வலிமையும் அவர்களுக்கு பக்க பலமாக இருக்கிறது.
புலிகளை அழித்ததன் மூலம் அவர்களது ஆதிக்க சக்தி வலுப்பெற்றிருக்கிறது. பலவீனப்பட்ட தமிழினத்தை மேலும் முடங்கச் செய்வதிலேயே இலங்கை அரசு குறியாக இருக்கிறது. இந்த அனியாயங்களுக்குக் கூட குரல் உயர்த்த முடியாதவர்களாகவே தாயக மக்களின் இன்றைய நிலை இருக்கிறது. அந்த அவலங்களையும், துயரங்களையும் சர்வதேசத்துக்கு கொண்டு செல்லக் கூடியவர்களாக புலம்பெயர் தமிழ் மக்களே இன்று இருக்கிறார்கள்.
கல்வி வளர்ச்சியிலும் சரி, பொருளாதார வளத்திலும சரி;, இனத்தின்பாலுள்ள உணர்விலும் கூட புலம்பெயர் தமிழ் மக்கள் வலுவுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், சரியான தலைமைத்துவம் இல்லாததின் பாதிப்பை அவர்களிடம் காணக்கூடியதாக இருக்கிறது. எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் ஆளும் தரப்ப, எதிர்த் தரப்பு என்று பல்வேறு கொள்கை உடையவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அது இயற்கையானது. ஆனால் தமிழினத்தை பொறுத்தவரை வடமாகாணசபை தேர்தலின்போது எண்பது வீதத்துக்கும் மேற்பட்டவர்களின் தீர்மானம் ஒருமனதாகவே இருந்திருக்கிறது.
ஆனால், புலம்பெயர் தேசத்தில், கனடாவில் மட்டும் நான்கு முக்கிய அமைப்புகள் தமிழரிடையே இருக்கின்றன. அது தவறான ஒன்றல்ல. ஆனால், ஒரே காரணத்துக்காகப் போராடும் தமிழ் அமைப்புகள் ஒரு புள்ளியில் சந்திக்க மறுப்பதுதான் தமிழ் மக்களுக்கிடையே விசனத்தை தோற்றுபித்துள்ளது. ஐ நா மனிதஉரிமை பேரவையில் இவர்களது பணி அளப்பரியது.எஅதையே ஒவ்வொரு விடயத்திலும் இணைந்து செயல்பட்டால் மக்களும் தமது ஆதரவை தாமே முன்வந்து தருவார்கள். இலங்கை அரசால் விதிக்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கான தடையை இவர்கள் ஒன்றுபட்டு நின்று முகம்கொடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
க.ரவீந்திரநாதன்.
kana-ravi@hotmail.com
kana-ravi@hotmail.com
http://www.tamilwin.com/show-RUmsyERZLXgx3.html
Geen opmerkingen:
Een reactie posten