[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 05:46.30 AM GMT ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை பெப்ரவரி 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த 3 பேர் உள்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட 4 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு முடிவெடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இதையடுத்து இந்த 7 பேரையும் விடுவிக்க முடிவு செய்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், கடந்த பெப்ரவரி 20ம் திகதியன்று முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான குழு முன்பு நடைபெற்றது.
இதில், அனைத்துத் தரப்பு வாதங்களும் கடந்த மார்ச் 27 ம் திகதியன்று முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது என்றும், 5 அல்லது 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி சதாசிவம் கொண்ட குழு இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்கில் 7 விதமான விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது என்று கூறியுள்ள நீதிபதிகள், இது போன்ற வழக்கை முதல்முறையாக எதிர்கொள்வதாகவும், 3 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க அரசியல் சாசன அமர்வுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு மீதான தடை தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
எனது மகன் விடுதலைக்கு இறுதி மூச்சு உள்ளவரை போராடுவேன்!- பேரறிவாளன் தாயார் கண்ணீர் பேட்டி
எனது மகன் விடுதலைக்கு இறுதி மூச்சு உள்ளவரை போராடுவேன் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி திடீரென உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்,
எனது மகன் விடுதலைக்காக எனது போராட்டம் மீண்டும் தொடரும். இனி அதிக பலத்தோடு போராட்டம் நடத்துவேன்.
முதலமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். ஊடகங்களின் ஒத்துழைப்பு எனக்கு தேவை. எனது மகனை முதலமைச்சர் காப்பாற்றுவார்.
எனது மகன் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
தீர்ப்பு தள்ளிப் போனதற்கு அரசியல் குறுக்கீடுதான் காரணமோ என்று நினைக்கிறேன்.
நீதி எங்கள் பக்கம் உள்ளது. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எத்தனை காலத்திற்குதான் இந்த வழக்கை சொல்லி அரசியல் பண்ணுவார்கள்.
ஒரு பரோல் கூட இல்லாமல் 23 வருடங்களாக சிறைக் கொடுமையை அனுபவிக்கிறார்கள்.
எனது மகனுக்கும், ராஜீவ் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று எனது மகனிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியே சொல்லிவிட்டது எங்கள் பலத்தை கூட்டி விட்டது.
எவ்வளவுதான் அரசியல் குறுக்கீடுகள் இருந்தாலும் என் மகனை சட்டப்படி மீட்பேன் என்று அற்புதம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyERZLXgxz.html
Geen opmerkingen:
Een reactie posten